தமிழகத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைக்குக் கீழ்தான் ஒட்டுமொத்த புள்ளியியல் சர்வேக்களும் எடுக்கப்படுகின்றன. இதற்காக ரூ.19.04 கோடி நிதியை ஒவ்வொரு ஆண்டும் திட்டம் மற்றும் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறையின் மூலம் ஒதுக்குகிறது மாநில அரசு.
ஆனால், மாவட்டந்தோறும் சர்வேயில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மதிப்பூதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்படியானால், ஒதுக்கப்பட்ட நிதி எங்கே செல்கிறது? என்ற விசாரணையில் இறங்கிய நமக்கு, முதியோர் மக்கள்தொகை சர்வே நடத்தும் ஜெ பால் மற்றும் தமிழ்க் குடும்பங்களை ஆய்வுசெய்யும் மிட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அது தாரை வார்க்கப்படுவதும், முன்னாள் இயக்குநர் இறையன்பு, தற்போதைய இயக்குநர் அதுல்ஆனந்த், கூடுதல் இயக்குநர் சுசிலா, பாலசுப்பிரமணி ஆகியோர் அவற்றிற்கு பக்கபலமாக இருப்பதும் தெரியவந்தது.
புள்ளியியல் துறையில் பணிபுரிந்து தற்போது வீட்டுவசதி வாரியத்தின் இயக்குநராக இருக்கும் கிருஷ்ணனின் மனைவி அபர்னா என்பவர் ஜெ பால் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இதனால், தனது கணவர் மூலமாகவே புள்ளியியல் துறையின் ஒப்பந்தத்தை மிகச்சுலபமாக பெற்றிருக்கிறார்.
ஏற்கெனவே, பெண்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்தி மாத்திரை கொடுத்த விவகாரத்தில் ஜெ பால் நிறுவனத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது நக்கீரன். அதன்பிறகும் விடாமல் குழந்தைகளுக்கு பால் பவுடர், சத்துமாவு கொடுத்து அவர்களது வளர்ச்சி, மனப்பக்குவம் உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்துவந்தது. இதை முடித்துவிட்டு சிதம்பரத்திலுள்ள கிராமப்புறங்களில் ரேஷன் அரிசி உண்ணும் ஏழை, எளிய மக்களின் ரத்தசோகை, எச்.பி. அளவு எந்தவகையில் இருக்கிறது என்பதற்கான சர்வேயை நடத்திக் கொண்டிருக்கிறது.
அதாவது, ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் கிலோவுக்கு நூறுகிராம் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலந்துவிடுகின்றனர். இதன்மூலமாக, முதியோர் முதல் இரண்டு மாதக் குழந்தை வரை சர்வே எடுக்கப்போகிறார்களாம். இதற்காகவே, சிதம்பரம் மணலூரில் அரிசி குடோனுக்கு பக்கத்திலேயே குடோன் அமைத்து செறிவூட்டப்பட்ட அரிசியைத் தயாரித்து வருகிறது ஜெ பால் நிறுவனம்.
மனிதர்களின் மீது சோதனை நடத்தும் நிறுவனத்துக்கும், அரசுத்துறைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியுடன் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்தை அழைத்தபோது, "வேலை காரணமாக பேசமுடியவில்லை. துணை ஆணையர் பாலசுப்பிரமணியிடம் கேளுங்கள்'’என்றார். பாலசுப்பிரமணியோ, “""முதியோர் சர்வே மட்டுமே எடுக்கிறோம். எங்களது சர்வே பற்றிய தகவல்களை சி.டி.ஓ. செயலியில் சேகரித்து வைக்கிறோம். மற்ற ஆய்வுகள் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. தமிழக அரசு போட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்தவிதமான ஆராய்ச்சி வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதைப்பற்றி திட்டம் மற்றும் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறையைத்தான் நீங்கள் கேட்கவேண்டும்''’என்றார். அதன்படியே அந்தத்துறையின் அரசு செயலர் ஹஷிஷ் வச்சானியைத் தொடர்புகொண்டால் பேச மறுத்துவிட்டார்.
எந்தவொரு சர்வேயாக இருந்தாலும் அதைப்பற்றி மக்களிடம் முழுமையாக விளக்கிவிட்டுதான் எடுக்கவேண்டும். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் புரியாத சர்வேயை எடுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. என்ன நோக்கத்திற்காக இந்த சர்வே எடுக்கப்படுகிறது? புள்ளியியல் துறை மூலம் எடுக்கப்பட்ட சர்வே அரசு பதிவுக்கு வரவில்லை என்றால் அது எங்கே போகிறது? மக்கள் நலனுக்கான சர்வே என்றால் அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததன் காரணம் என்ன? பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை ஒன்றும் அறியாத அப்பாவி மக்களின் மேல் சோதனை செய்து பார்க்கிறார்களா? போன்ற அச்சம் கலந்த கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
யாரைப் பற்றியும் எந்தவித கவலையும் இல்லாமல் சொந்தநலனில் மட்டுமே அக்கறை கொண்ட அதிகாரிகளின் அலட்சியத்தால், மிகப்பெரிய விலை தரவேண்டிய நிலை ஏற்படலாம். அதற்குள் அரசு விழித்துக்கொண்டால் நல்லது.
-அ.அருண்பாண்டியன்