stalin

விக்கிரவாண்டி இடைத்தேர்தல், மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டம், கலெக்டர்களுடன் ஆலோசனை என பல்வேறு பணிகளில் பிஸியாக இருந்தாலும், நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசக் கணக்குகள் குறித்து தம்மிடம் கொடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகள் மீதும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

குறிப்பாக, முதல்கட்டமாக கொங்கு மண்டலத்திலுள்ள நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 10 நாடாளுமன்ற தொகுதிகளின் ரிசல்ட் பற்றி பல்ஸ் பார்க்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியலில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்த காலகட்டத்திலிருந்தே கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அ.தி.மு.க. இதனால், கொங்கு மண்டலம் எப்போதுமே தி.மு.க.வுக்கு சவாலாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வின் கோட்டையை அசைத்து தனது கொடியை ஏற்றியுள்ளது தி.மு.க.

Advertisment

இதுகுறித்து உளவுத்துறைத் வட்டாரங்களில் விசாரித்தபோது, "நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் தி.மு.க. கூட்டணி வெற்றிப்பெற்றிருந்தாலும், வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் அடங்கியுள்ள தொகுதிகளின் ரிசல்ட்டுகளை விட மேற்கு தமிழகம் என சொல்லப்படும் கொங்கு மண்டலத்தின் ரிசல்ட் குறித்துதான் தி.மு.க.வினரின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன.

தேர்தல் நடைமுறை தொடங்கியதுமே அமைச்சர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ""நாற்பது தொகுதிகளிலும் நாம் ஜெயிப்போம் என்பது உறுதி செய்யப்பட்டதுதான். ஆனால், எனக்குத் தேவை வெற்றி மட்டும் அல்ல! பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். அதுதான் நான் எதிர்பார்ப்பது. அதற்காக கடுமையாக நீங்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்''’என அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், கொங்கு மண்டலத்திலுள்ள 10 தொகுதிகளில் அதிகபட்சமாக 2,52,042 (பொள்ளாட்சி) வாக்குகள் வித்தியாசம் முதல், குறைந்தபட்சமாக 21,300 (தர்மபுரி) வாக்குகள் வித்தியாசம்வரை பெற்று 10 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க. இதுகுறித்த புள்ளிவிபர ஆய்வுகள்தான் முதல்வரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கொங்கு மண்டலத்திலுள்ள 10 எம்.பி. தொகுதிகளில் பொள்ளாச்சியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமி 5,33,377 வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு போட்டியாக களமிறங்கிய அதிமுகவின் வலிமையான வேட்பாளரான கார்த்திக்கேயனை 2,52,042 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கொங்கு மண்டலத்திலேயே அதிக வித்தியாசத்தில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்துள்ளார் சக்கரபாணி.

இந்த தொகுதியில் தி.மு.க.வை வீழ்த்த எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் உள்பட அ.தி.மு.க.வின் 5 முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் பெரும்படையே தொகுதிக்குள் குவிக்கப்பட்டன. கோவையில் பா.ஜ.க.வை ஜெயிக்க வைப்பதற்காக எஸ்.பி.வேலுமணி மறைமுகமாக தேர்தல் பணியாற்றிய நிலையில், பொள்ளாச்சியை ஜெயிக்கவைத்து பா.ஜ.க.வுக்கு கோவையில் நாங்கள் உதவவில்லை என நிரூபிப்பதற்காகவே பொள்ளாச்சியில் அதிக எஃபெக்ட் எடுத்தார் எஸ்.பி.வேலுமணி. இதற்காகவே, அ.தி.மு.க.வின் பெரும்படையை இறக்கினார்.

ஆனால், அமைச்சர் சக்கரபாணியின் தேர்தல் வியூகமும் தேர்தல் பணிகளும் அ.தி.மு.க. மாஜி அமைச்சர்களின் தேர்தல் திட்டங்களை உடைத்து தி.மு.க.வை அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறது. தனது மீது முதல்வர் ஸ்டாலின் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார் அமைச்சர் சக்கரபாணி‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர்.

கொங்கு மண்டலத்தின் இந்த வெற்றி தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த அபரீதமான வெற்றியை 2026 சட்டமன்ற தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் பெற கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களின் எல்லைகளை பிரித்து, புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

பழனி அல்லது பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அந்த பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி வருகிற நிதியாண்டிலேயே புதிய மாவட்டத்தை உருவாக்கினால், கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு அசுர தேர்தல் வெற்றியை கொடுக்கும் என்பதே எதார்த்தமாக இருக்கிறது.