""எல்லோருமே என் கிட்ட நிறைய எதிர்பார்த்தீங்க. ஆனால்... எனக்குத்தான் பயமா இருக்கு. இது என்னுடைய முடிவு. யாரும் காரணம் அல்ல! ஐ லவ் யூ அம்மா! ஐ மிஸ் யூ அப்பா!'' செல்போனில் மகளின் ஆடியோவை கேட்டு கதறி அழுத மாணவியின் அப்பா முருகசுந்தரத்தின் ""டாக்டரம்மா டாக்டரம்மா'' என்ற கதறலை அங்கிருந்த போலீஸாராலும் உறவினராலும் கட்டுப்படுத்தமுடியவில்லை..
மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பு ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம். இவரது மகளான ஜோதி துர்கா கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தார். இந்நிலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவிருந்த, இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு படித்து கொண்டிருந்தார். செப் 11-ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கமாகத் தனது தோழியுடன் இரவு முழுவதிலும் படித்துக் கொண்டிருக்கும் ஜோதி, அன்று இரவு தோழி உடனில்லாமல் தனியாகப் படித்துக்கொண்டிருந்தார். தனியாக தன் அறையில் இருந்த ஜோதி நீட் தேர்வு அச்சமும், குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யமுடியுமா என்ற கவலையும் அழுத்தியதால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக அறையைத் தட்டியபோது திறக்காததால், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்திவரு கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்குமுன் அவர் தன் குடும்பத்திற்கு கடிதத்தில், "அப்பா தயவுசெய்து சோகத்தில் ஆழ்ந்து போகாதீர்கள். எனக்குப் பின் தம்பி இருக்கிறான், அவன் உங்களை நம்பித்தான் இருக்கிறான். அவனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்க இதயம் பாதிக்கப்பட்டவர், அதனால் மீண்டும் சொல்கிறேன் அதீத சோகத்தில் ஆழ்ந்து போகாதீர்கள். கடந்து போவதுதான் வாழ்க்கை. நீங்களும் கடந்து செல்லுங்கள். வெளியே செல்லும்போது தனியாக வாகனம் ஓட்டிச் செல்லாதீர்கள். உங்களுடன் யாரையாவது கூட்டிச்செல்லுங்கள்.
இதில் யாரையும் தவறு சொல்வதற்கு இல்லை. எல்லாம் என் முடிவு. எனக்கு மிகவும் சந்தோஷமான குடும்பம் கிடைத்தது. ஆனால் எனக்குத்தான் அதனை பாதுகாத்துக்கொள்ள தெரியவில்லை.
இன்னும் நான் நிறைய சொல்லவேண்டும். ஆனால், என்னிடம் நேரமில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் டயர்டாகி விட்டேன்''’ என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மேலும் அவரது செல்போனில், தற்கொலை செய்துகொள்வது குறித்த குரல் பதிவு ஒன்றும் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் பிரேதப் பரிசோதனை முடிந்து ஜோதி துர்காவின் உடல் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் தகனம்செய்யப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, ""ஜோதி துர்காவின், குரல் பதிவும் கடிதமும் சோதனை செய்யப்பட்டு, அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவேண்டும். எனினும் இப்போதைக்கு இதை தற்கொலை என்றே கூறவேண்டும்''’என தெரிவித்தார்.
உடலை பார்த்து கதறி அழுத அப்பா முருகசுந்தரம் கூறுகையில்... "சின்ன வயதிலிருந்தே டாக்டரம்மா டாக்டரம்மா என்றுதான் கூப்பிடுவோம். துர்கா குழந்தையா இருக்கும் போதே டாக்டரம்மா விளையாட்டுதான் விளையாடும். அப்பா அம்மா தாத்தாவுக்கு விளையாட்டா ஊசிபோட்டு விளையாடும். பிளஸ்2-வில் நல்ல மார்க் எடுத்தும் நீட் பரிட்சை வந்து அவளின் கனவை தகர்த்தது'' என்றார் தழுதழுக்க.
ஜோதி துர்காவின் தற்கொலை அதிர வைத்த அதே நாளில், தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யாவும், நீட் தேர்வுக்கு முதல்நாள் தூக்கிட்டுக் கொண்டு மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் கும் மாணவர்கள் எண்ணிக்கை இவ்வாண்டு 17 சதவிகிதம் சரிந்துள்ளது. நீட் தேர்வை பயிற்சி யில்லாமல் வெற்றிபெறுவது கிட்டத்தட்ட ஹெர்குலியன் டாஸ்க் எனப்படும் சாத்தியமில்லாத காரியமாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு குறைந்தது 50,000-லிருந்து 1 லட்சம் இல்லாமல் இந்த நீட் பயிற்சி அகாடமிகளை அணுகவே முடியாது. அப்படி பயிற்சிபெற்றாலும்கூட ஒரே முறையில் நீட் தேர்வைச் சாத்தியமாக்குபவர்கள் எண்ணிக்கை வெகுகுறைவே.
இரண்டு மூன்று முறை நீட் பயிற்சி பெற்று தேர்வு எழுதினால்தான் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் எனில் அதற்கு இரண்டுமூன்று லட்ச ரூபாய் தேவை. அத்தகைய பொருளாதாரப் பின்னணியில்லாத ஆயிரக் கணக்கான மாணவர்கள், எதற்கு வீணாக நீட் தேர்வு எழுதிக்கொண்டு என ஆரம்பத்திலேயே ஒதுங்கிவிடுகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு எதிர்காலத்தின் கழுத்தில் விழுந்த சுருக்குதான் நீட்.
அரியலூர் அனிதா, விக்னேஷ், தர்மபுரி ஆதித்யா, மதுரை ஜோதி துர்கா, புதுக்கோட்டை ஹரிஷ்மா, திருச்செங்கோடு மோதிலால், விழுப்புரம் பிரதிபா, கோவை சுபஸ்ரீ...
இன்னும் எத்தனை பேருடா சாகணும்..?
-அண்ணல்