மூன்று நம்பர் லாட்டரி சீட்டு மோகத்திற்கு ஒரு குடும்பமே பலியாகியிருப்பது விழுப்புரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரியை திருட்டுத்தனமாக விற்கப்படுவதை போலீசார் தடுக்காமல் இருந்ததால் விழுப்புரத்தில் பல குடும்பங்கள் பணத்தை இழந்து தெருவில் நிற்கும் அவல நிலையில், ஒரு குடும்பத்தையே காவு வாங்கி விட்ட சோகம் சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தையே உலுக்கியெடுத்திருக்கிறது.
விழுப்புரம் டவுனில் உள்ள சித்தேரிக்கரை சலாமத்நகரில் வசித்து வந்த நகை செய்யும் தொழிலாளி அருண்குமார்(33). இவருக்கு சிவகாமி(27) என்ற மனைவியும், ஆறுவயது பிரியதர்ஷினி, மூன்று வயது யுவஸ்ரீ, 4 மாத கைக்குழந்தை பாரதி ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக நகைப்பட்டறை வைத்திருந்த அருணுக்கு நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. அந்த வருமானத்தை வைத்துதான் மீனாட்சி நகர் பகுதியில் 50 லட்சம் செலவில் சொந்தமாக வீடுகட்டி குடியேறினார். அதன் பின்னர் நகைத்தொழிலில் சரிவு ஏற்பட்டதால் சொந்த மாக இயங்கிவந்த பட்டறையை இழுத்து மூடிவிட்டு நண்பர் களின் பட்டறைகளில் கூலிக்கு வேலை செய்துவந்தார். அதி லும் வருமானம் போதவில்லை என்ப தால் கடன் வாங்க ஆரம்பித்தார். கடனை திருப்பி செலுத்த வழியில்லாததால் புதிதாக கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்துவிட்டு, சலாமத்நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். நகைத்தொழிலை விட்டுவிட்டு ரயில்நிலையத்தில் கேன் மூலம் டீ விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
அருண்குமாருக்கு கடன் அதிகமாக வந்ததற்கு மூன்று நம்பர் லாட்டரி சீட்டும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. லாட்டரி சீட்டு மூலம் குடும்ப கஷ்டம் போய் ஆடம்பரமாக வாழலாம் என்று சம்பாதிக்கும் பணத்தில் தொடர்ந்து மூன்று நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.
லாட்டரி சீட்டினாலும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகாததால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கு வந்தார் அருண்குமார். இந்த முடிவை மனைவி சிவகாமியிடம் கூறியபோது, தானும் தற்கொலை செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். தங்களுக்குப் பின்னால் குழந்தைகள் நிர்க்கதியாக நிற்பார்கள் என்று எண்ணி அவர்களை கொலை செய்துவிட முடிவெடுத்தார்கள்.
அதன்படி, நகைத் தொழிலுக்காக பயன் படுத்தும் சயனைடு பவுடரை பாலில் கலந்து 12.12.2019 அன்று இரவு 9.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் சிவகாமி தனது மடியில் போட்டுக்கொண்டு, சயனைடு கலந்த பாலை கொடுத்ததும் துடிதுடித்து உயிரிழக்கும் அந்த கொடூரத்தை அருண்குமார் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அருண்குமாரும், சிவகாமியும் சயனைடு குடித்து உயிரிழப்பதற்கு முன்னர், "எப்படியாவது மூன்று நம்பர் லாட்டரியை தடை செய்யுங்கள். என்னைப் போன்ற நிலையில் இருப்போரைக் காப்பாற்றுங்கள்'’’என்று உருக்கமாக பேசி பதிவு செய்துள்ளார் அருண் குமார். துடிதுடித்து உயிரிழக்கும் குழந்தை களின் வீடியோ, தனது விளக்க வீடியோ இரண்டையும் தனது நண்பர்கள் குழுவில் பதிவேற்றம் செய்துவிட்டார். இரவு 11 மணிக்கு இந்த வீடியோ நண்பர்களை அதிரவைத்ததோடு அல்லாமல் அடுத்தடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தையே உலுக்கியது.
லாட்டரி விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை திருட்டுத்தனமாக நடந்துதான் வருகிறது. அதிலும் விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறக் கிறது. மூன்று நம்பர் லாட்டரி ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது. ஆனால், இதற் கான தரகர்கள் மாவட்டம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களிடம் பணத்தைக் கொடுத்தால் அவர்கள் மூன்று நம்பர் எண் ஒன்றை எழுதியுள்ள ஒரு துண்டுச்சீட்டை கொடுப்பார்கள். அந்த நம்பருக்கு பரிசு விழுந்துள்ளதா என்ற விபரம் ஆன்லைன் மூலமே அறியமுடியும்.
விழுப்புரத்தில் மணல் கொள்ளை, மூன்று நம்பர் லாட்டரி, புதுச்சேரி மதுக் கடை மதுபாட்டில் கடத்தல், இரவு நேரங் களில்வீடு புகுந்து கொள்ளை என தொடர்கிறது கிரைம் சம்பவங்கள். இது போன்று சட்டத் திற்குப் புறம்பான செயல்கள் கொடிகட்டிப் பறக்கிறது. குற்றங்களின் தலை நகரமாக மாறி வருகிறது விழுப்புரம் நகரம். இந்த நகரத்தில்தான் மண்டல டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி., டவுன் டி.எஸ்.பி. மற்றும் காவல்துறை ஆயுதப்படையினரும் என சகல காவல்துறையும் குழுமியுள்ளது. திரும்பிய திசையெங்கும் போலீஸ் தலைகள் தென்படும் இந்நகரத்தில் குற்றச் சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றதுதான் அதிர்ச்சி. காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதாகவே கூறு கிறார்கள் நகர மக்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டவுன் டி.எஸ்.பி. தாலுகா, மேற்கு காவல் நிலையம், என அனைத்து காவல் துறையினரும் வசிக்கும் மாவட்ட தலைநகரில் இப்படிப்பட்ட சீரழிவு நிலை தொடர்வது கண்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் மரணம் நகர மக்களின் மனதை பிசைகிறது. காவல்துறை இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு துணை போகிறது என்ற குற்றச்சாட்டும், இதுபோன்ற செயல்களின் மூலம் காவல்துறைக்கு லஞ்சமாக பணம் செல்கிறது. அதனால் இந்த சட்டவிரோத செயலை கண்டுகொள்ளவில்லை என்ற கோபமும் நகர மக்களுக்கு உள்ளது. இனி மேலாவது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவித் தொழிலாளிகளும் அவர்கள் குடும்பத் தினர்களும் உயிரிழப்பதை தடுக்குமா? என்கிறார்கள் பொதுமக்கள்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக் குமாரிடம்பேசியபோது, ""5 பேரின் மரணத்தை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்திருக்கிறோம். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே மாவட்டம் முழுவதும் இதுவரை 280 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். டவுனில் மட்டும் 143 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இனி இந்த விசயத்தில் முழுக்கவனம் செலுத்தி ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மூன்று போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்''’என்று தெரிவித்தார்.
ஆனாலும், கைது செய்யப்பட்டுள்ள 14 பேரும் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் சாதாரண நபர்கள் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் கைதாகாமல் இருப்பதாலும் காவல்துறையின் நடவடிக்கை வெறும் கண் துடைப்பு என்றே மக்கள் அலுத்துக் கொள்கிறார்கள். தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த "நம்பர்' லாட்டரி பறிக்கப் போகும் உயிர்களின் எண்ணிக்கை இன்னும் எத்தனையோ?
-எஸ்.பி.சேகர்