முன் விரோதம் காரணமாக அடுத்தடுத்து நடந்த இரு கொலைகள் அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்திய நிலையில், 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த பா.ஜ.க.வின் அண்ணாமலையோ, "ரவுடிகள் கூட தி.மு.க. அரசை மதிப்பதில்லை. ஒரு தவறு செய்துவிட்டால் தி.மு.க. கட்சிக்காரர்களை வைத்து வெளியே வந்துவிடலாம்'' எனக் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், கொலைக்குக் காரணமான ரவுடிகளை "இனிமேல் இப்படித்தான்'' எனச் சுட்டுப் பிடித்து கைது செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது காவல்துறை.
கடந்த திங்கட்கிழமையன்று கொலை வழக்கு ஒன்றிற்காக கோவை நீதிமன்றத்தில் கையெழுத் திட்டு வெளியேறிய கீரநத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல், நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயிலின் அருகிலிருந்த இந்தியன் பேக்கரி யில் நண்பர் மனோஜுடன் டீ சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது, அங்கே வந்த ஐந்து நபர்கள் ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே கோகுல் பிணமானார். மனோஜ் சில வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த கொலையும், இதற்கு முந்தைய நாள் ரேஸ்கோர்ஸ் நவஇந்தியா சாலை இளநீர்க்கடை அருகே ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சத்தியபாண்டி கொலையும் முன் விரோதம் காரணமாக நடந்தவையே என்றாலும், இதுகுறித்து முன் எச்சரிக்கை செய்யாத உளவுத் துறையின் கையாலாகத்தனமே இது எனத் தங்களைத் தாங்களே நொந்துகொண்டு அழுத்தத் துடன் வழக்கை பதிவு செய்தது காவல்துறை.
"இரண்டு கொலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்கினோம். இதில் பட்டப்பகலில் நீதிமன்றம் அருகில் நடந்த கோகுல் கொலையில் சம்பந்தப்பட்டவர்களான காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, டேனியல், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கௌதம், அருண் மற்றும் சூர்யா, கணபதி பகுதியைச் சேர்ந்த ஹரி மற்றும் பீளமேடு பகுதியைச் சேர்ந்த பரணி ஆகியோரை இனம் கண்டு அவர்களை நெருங்க முயற்சித்தோம். துவக்கத்தில் எளிதாக அமைய வில்லை. கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் தங்களுடைய மொபைலை அணைத்த நிலையில் ஒருவன் மட்டும் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அதனைக் கொண்டு அவர்களை நெருங்கினோம். முதலில் கொலையாளி பயன்படுத்திக் கொண்டிருந்த செல்போன் சிக்னல் குன்னூர், ஊட்டியை காண்பிக்க, பின் கோத்தகிரியை காண்பித்தது. இதனால் ஊட்டியிலிருந்து கீழே மேட்டுப்பாளையத்திற்கு வரும் அனைத்து வழித்தடங்களையும் சோதனையிட்ட நிலையில், கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இவர்கள் 7 பேரும் சிக்கினர். அவர்களை அழைச்த்துக் கொண்டு கோவை வரும் வழியில் கைது செய்யப் பட்டவர்களில் ஒருத்தன் ஒரு விரலைக் காட்டி இயற்கை உபாதை என்றான். இன்னொருத்தன் பின்னாடி சீட்டில் வைச்சு எங்களைக் கொண்டு வர்றதால் தலை சுத்துது, வாந்தி வருது என்றான். அதனால் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள வனக்கல்லூரி அருகே வாகனத்தை நிறுத்த முயற்சித்த வேளையில் கௌதமும், ஜோஸ்வாவும் ஓட ஆரம்பிச்சாங்க.! விரட்டிப் பிடிக்கையில் அங்கே கீழே கிடந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. யூசுப்பை வெட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வேறு வழியில் லாமல் எங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், அவர்களை எச்சரிக்கவும் காலில் சுட்டுப் பிடிக்க வேண்டியதாயிற்று.'' என்கிறார் தனிப்படையிலிருந்த போலீஸ் ஒருவர்.
கையில் வெட்டு வாங்கிய எஸ்.ஐ. யூசுப்பும், காலில் குண்டு பாய்ந்த கௌதம் மற்றும் ஜோஷ்வாவும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட னர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல்துறை கமிஷனர் பாலகிருஷ்ணன், "கோகுல் கொலையில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் எச்சரித்தும் அவர்கள் மதிக்கவில்லை. மாறாக போலீஸாரை தாக்கினர். இதனால் தற்காப்பிற்காக அவர்கள் சுடப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதுபோல் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த கொலை வழக்கில் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு டீம் கேரளாவிற்கு சென்றுள்ளது. விரைவில் அதிலும் கொலை யாளிகள் கைது செய்யப்படுவார்கள். மாநகரில் 540 குற்றவாளிகளின் லிஸ்ட் தயா ரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 40 நாட்களில் மட்டும் 10 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழும், 75 நபர்கள் மீது செக்சன் 109 படியும், 105 நபர்கள் மீது செக்சன் 110 படியும் நன்னடத்தை சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கையும் இரவு ரோந்துப் பணியும் பலப்படுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை நன்றாக பராமரிக்கப் பட்டு வருகிறது'' என்றார் அவர்.
இது இப்படியிருக்க, நீதிமன்ற வளாகம் அருகிலும், காவல்துறை கமிஷனர் அலுவலகம் அருகிலும் மற்றும் மாநகரில் இது போல் குற்றங்கள் நடப்பதற்கு காரணம் உளவுத்துறையின் பலவீனமே. உளவுத்துறையினர் முன்னெச்சரிக்கையாக "இதுபோல் சம்பவங்களும் அச்சுறுத்தல்களும் நடக்க வாய்ப்பிருக்கின்றது' என தங்களது மேலதிகாரிகளுக்கு குறிப்பு எழுதி இருந்தாலே இது நடந்திருக்காது. மாநகரும் பிழைத்துக் கொள்ளும். ஆனால், உளவுத்துறையில் உள்ள பலரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் விசுவாசிகளாக இருக்கின்றனர். நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றிய பலரும் ஆட்சி மாறியதும் கண்துடைப்பிற்காக வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி யுள்ளனர். இது அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில் யார்? யார்? வேலுமணியின் ஆதரவாளர் கள் என்கின்ற லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய நடராஜரின் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர், வெளிச்சமான பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர், தெய்வமான இன்ஸ்பெக்டர் ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது என காவல்துறை மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சென்சிட்டிவான கோவை தற்பொழுது ரவுடிகளால் நிலைகுலைந்த நிலையில், கோவையின் அமைதியே முக்கியம் என ரவுடிகளை சுட்டு, "இனிமேல் இப்படித்தான்'' என கெத்துக்காட்டி பிற ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல் துறையினரை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: விவேக்
_________________
மாணவர்கள் Vs வட மாநிலத்தவர்கள்...!!!!
கோவை சூலூர் தனியார் கல்லூரி ஒன்றில் கையில் கிடைத்தப் பொருட்களைகொண்டு கல்லூரி மாணாக்கர் களை துரத்தி துரத்தி விரட்டி அடித் துள்ளனர் வட மாநிலத் தவர்கள். இது அங்கி ருந்த மாணவிகளால் வீடியோவாக வெளியாக வட மாநிலத்தவர்கள் யந தமிழர்கள் மோதல் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
"வாரத்தின் இறுதி நாள் அன்று.!! இரவு வேளை உணவு பரிமாறும் போது ஹாஸ்டல் கேன்டீ னில் வேலை பார்த்து வரும் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவனுக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் லேசா உரசல் ஏற்பட்டுச்சு. மாண வர்கள் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டு, " நீ என்ன பரிமாறு கிறாய்..? உன்னோட ஹெட்டை வரச்சொல்." என கோரஸாக கத்தினர். கூச்சல் பொறுக்காத அவனும் உள்ளே போய் என்ன சொன்னான் எனத் தெரியவில்லை. வந்தவங்க அத்தனை பேர் கையில் கிடைத்த ராடு, வாளி, கட்டைகளைக் கொண்டு அந்த ஸ்டூடண்ட்ஸ் பக்கம் போய் விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பிச்சாங்க.! என்றார் மாணவி ஒருவர்.
"அன்றைய பொழு தில் அசைவ உணவு மாணக்கர்களுக்கு வழங் கப்பட்டிருக்கின்றது. வழக்கத்தை விட கூடுத லாக சிக்கன் கேட்டிருக் கின்றார்கள் அந்த மாணவர்கள். இவர்கள் தர மறுத்திருக்கின்றார்கள். மொழி புரியாததால் வந்த பிரச்சனை இது.!!! பிரச் சனைக்குக் காரணமான மூன்று வட மாநிலத்தவர்களை கல் லூரியை விட்டு அனுப்பி விட் டோம்." என தன்னிலை விளக்கம் கொடுத்தார் கல்லூரியின் முதல்வர் விஜயன். தனி நபர்களின் பிரச்சனையில் வடக்கர்களா.? தமிழர்களா.? என திருப்பூரில் விவகாரம் திசை திரும்பிய நிலையில் அரசு இயந்திரங்களின் சாதுர்யத்தால் அது தவிர்க்கப்பட்டது.
-ஆதித்யா