அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்பது ஆண்டு காலமும் தமிழகத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் வசிக்கும் மக்கள் "மக்கள் பணி' என்ற பெயரில் நடக்கும் வேலைகளால் நொந்து நொம்பலமாகிக் கிடக்கிறார்கள். ஏதாவது ஒரு டிபார்ட்மெண்டையோ, வாரியத்தையோ சேர்ந்த ஆட்கள், ஏதாவது ஒரு தெருவுக்குள்ளோ, சாலைக்குள்ளோ கடப்பாரை, மண்வெட்டி, பொக்லைன் சகிதம் புகுந்து தோண்டிப் போட்டமேனிக்கு இருக்கிறார்கள். எல்லாம் காண்ட்ராக்டர்களின் கைங்கர்யம்தான்.
மின்சார கேபிள் பதிக்கும் காண்ட்ராக்ட் எடுத்தவர் பகலில் தோண்டிப் போடுவார். தெருவிளக்கு போஸ்ட்கம்பம் அமைக்கும் காண்ட்ராக்ட் எடுத்தவர் மாலையில் தோண்டிப் போடுவார். குடிநீர் வடிகால்பைப் பதிக்கும் காண்ட்ராக்ட் எடுத்தவர் இரவில் தோண்டிப் போடுவார். இப்படி ஒன்பது வருடங்களாக தோண்டும் திருப்பணி நடக்கிறதே தவிர, மக்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை.
இந்த வரிசையில் சென்னை பெருநகர மாநகராட்சியின் ராமாபுரம் ஏரியாவுக்குள் அடங்கிய குறிஞ்சி நகர் 2-ஆவது பிரதான சாலையில் மழை நீர் வடிகால் திட்டத்தின்கீழ் புதுமையான பகீர் முறையில் வாய்க்கால் அமைத்து அந்த ஏரியா மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம். அந்த ஏரியாவின் அவலத்தைப் போக்க போராடி வரும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி.யின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் தோழர் அய்யாசாமி, அந்தத் திட்டத்தின் தகிடுதத்தங்களை நம்மிடம் விரிவாக சொல்லத் தொடங்கினார்.
"நந்தம்பாக்கம், ராமாபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த "அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்' கம்பெனிதான் காண்ட்ராக்ட் எடுத்துருக்கு. திட்டத்தின் மொத்த மதிப்பு 39 கோடியே 14 லட்சத்து 14 ஆயிரத்தி 28 ரூபாய். 2017-ல் குறிஞ்சி நகர் 2-வது தெருவில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப் பட்ட போதிலிருந்தே அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மாநகராட்சிக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் புகார் மனு அனுப்பியபடியே தான் இருந்தேன். இந்த வேலைகள் நடக்கும் போது எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. காண்ட்ராக்ட் எடுத்தவன், அவன் நோக்கத்திற்கு வேலை பார்த்தான்.
இது குறித்து கிண்டியிலுள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தும் பிரயோஜனமில்லை. இதே குறிஞ்சி நகர் 1-ஆவது பிரதான சாலையில் ரோடு மட்டத்திற்கு வாய்க்கால் அமைத்திருக்கிறார்கள். ஆனால் 282 வீடுகள் இருக்கும் இந்த 2-ஆவது பிரதான சாலையில் மட்டும் ரோடு மட்டத்திலிருந்து 3 அடி உயரத்திற்கு கால்வாய் அமைத்திருக்கிறார்கள். ஏய்யா இப்படின்னு கேட்டா மழைத்தண்ணி வர்றதுக்கு வாட்டமா இருக்கும்னு புத்திசாலித்தனமா பதில் சொல்றான்.
3 அடி உயரத்துல இருக்குறதால, வயசானவங்க பழனிமலை படிக்கட்டுல ஏறுற மாதிரி கஷ்டப்பட்டு ஏறி வீட்டுக்குள்ள போக வேண்டியிருக்கு. அதனால் வீட்டிலிருந்து இறங்குவதற்கு வாட்டமா ரோட்லதான் சிமெண்ட் தளம் போடவேண்டியிருக்கு. இப்படி இருந்தா எப்படி வாழ்றது?
அதுமட்டுமல்ல, மழை பேஞ்சா இந்த ஏரியாவே அதோகதிதான். இதை விடக் கொடுமை இதே தெருவுல ஒரு இடத்துல பல வருசமாக சாக்கடை அடைப்பு அப்படியே இருக்கு. இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. சென்னையில இந்த ஒரு தெருவுல மட்டுமே இப்படி பித்தலாட்டம்னா மற்ற மாநகராட்சிகளில் எந்தெந்த டிசைன்களில் எப்படியெல்லாம் கொள்ளையடிப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்க'' என ரொம்பவே வேதனைப்பட்டார் தோழர் அய்யாசாமி.
தோழர் சொன்னதும் நினைத்துப் பார்த்தோம், தலை சுற்றியது.
இந்த காண்ட்ராக்ட்டை எடுத்திருக்கும் அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் கருத்தை அதன் ஈரோடு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சொன்னோம். அங்கு வரவேற்பு அறையில் ஒரு பெண், மற்றொரு ஊழியரின் செல்போன் நம்பரை கொடுத்தார்.
அந்த எண்ணில் தொடர்புகொண்டபோது, அவரது பெயரைக்கூட சொல்லத் தயங்கியவர், சென்னையில் அது சம்பந்தமான விவரங்களைக் கேட்டுவிட்டு நம்மை தொடர்புகொள்வதாகச் சொன்னார். நான்கு நாட்களாகியும் அவர் தொடர்புகொள்ளவே இல்லை. தங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் தெரிவித்தால், நக்கீரன் அதனை வெளியிடத் தயாராக இருக்கிறது.
-ஈ.பா.பரமேஷ்வரன், ஜீவா தங்கவேல்
படங்கள்: அசோக்