ஒற்றை வரியில் தொகுத்துச் சொன்னால்… ஆப்கான் விவகாரத்தில் தாலிபான்களுக்கு வெற்றி! உலக நாடுகளுக்குத் தோல்வி!
இருபதாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டு, ஆப்கான் அரசுக்குத் துணைநின்ற அமெரிக்கப் படை முழுமையாக சொந்த நாட்டுக்கு விமானம் ஏறும் முன்னே, ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வசமாயிருக்கிறது. ஆப்கானை தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்ற மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகுமென அமெரிக்கா கணித்திருந்தது. அதன் கணிப்பைப் பொய்யாக்கி ஆறே வாரங்களில் முழு வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள் தாலிபான்கள்.
எப்படிச் சாத்தியமானது?
அமெரிக்கப் படைகளையும் அவர்களின் பயிற்சிபெற்ற ஆப்கானிய அரசப் படைகளையும் எதிர்கொண்டு தாலிபான்கள், எப்படித் தாக்குப்பிடித்தார்கள்? இருபதாண்டு காலம் அமெரிக்கா- ஆப்கானிய அரசுப் படையின் நெருக்குதலுக்கும் வரம்புமுறையற்ற குண்டுவீச்சுக்கு அப்புறமும் தாலிபான்கள் எப்படி நொறுங்கிப் போகாமல் இருந்தார்கள்?
இதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆப்கானிஸ்தான் குறித்த சுருக்கமான முன்வரலாறு தேவை.
ஆப்கானிஸ்தானை முழுவெற்றி கொள்ளாதது ரஷ்யா, அமெரிக்கா மட்டுமல்ல. அதற்கு முன்பிருந்த, "சூரியனே மறையாத பிரிட்டிஷ் ராஜ்யம்' என பெயர்பெற்ற ஆங்கிலேயர் களும்தான். உலகையே காலனியாக்கி, தன் காலடியில் போட்டிருந்த பிரிட்டிஷ் அரசு ஆப்கானிஸ்தானை வெல்ல மூன்று போர்களைத் தொடுத்தது. அந்த மூன்று போர்களி லுமே பிரிட்டிஷ் அரசுக்குக் கிடைத்தது தோல்விதான். அதற்கு முந்தைய வரலாற்று காலகட்டத்திலும் ஆப்கானிஸ்தானில் நீடித்த, நிலையான வெற்றியைப் பெற்ற அரசுகள் கிடையாது. அதனாலேயே ஆப்கானிஸ்தானுக்கு "சாம்ராஜ்ஜியங்களின் கல்லறை' என்றொரு செல்லப் பெயர் உண்டு.
நில அமைப்பு
ஆப்கான் பிற அரசுகளால் வெல்லப்பட முடியாத நாடாகத் திகழ்வதற்கு அதன் நில அமைப்பு ஒரு முக்கிய காரணம். ஆப்கானின் பெரும்பகுதி மலைப்பாங்கான நிலங்களைக் கொண்டது. அதன் காரணமாக சமவெளிப் பகுதிகளை வெல்வது போல் எளிதாக படைகொண்டு வென்றுவிட முடியாது. அரசுக்கு எதிரான தாலிபான் அமைப்புகள் கொரில்லா போர்முறையில் தேர்ந்தவை. ஒரு தாக்குதல் நடத்திவிட்டு மலைப்பகுதியில் ஒளிந்துகொண்டால், அவர்களைத் தேடியழிப்பது எளிதல்ல.
ஆப்கானிஸ்தானில், விவசாயத்தைவிட மேய்ச்சல் சார்ந்த தொழிலே பிரதானம். இதனால் இயல்பாகவே இங்குள்ள மக்கள் இனக்குழு சார்ந்த மனப்பான்மையுடனே வாழ்ந்து வருகிறார்கள். ஆப்கானின் பிரதான இனக் குழுவினர் பஸ்தூன்கள். அடுத்த இடத்தில் தஜீக்குகளும் ஹசாராக்களும் இருக்கின்றனர். ஹசாராக்களுக்கும் பஸ்தூன்களுக்கும் மற்ற இனக் குழுக்களுக்குமான மோதல் மனப்பான்மை இத்தனை ஆண்டுகளிலும் மாறவேயில்லை.
ஆப்கானிஸ்தானத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாண்டு காலமாக நிலையான அரசு அமையவில்லை. ஒரு நிலையான அரசு அமைவதன் காரணமாக ஏற்படும் பொருளாதார முன்னேற்றங் களும், அதன் காரணமாக மக்களின் மனதில் ஏற்படும் கருத்து நிலை மாற்றங்களும் ஆப்கானிஸ்தானை வந்தடையவே இல்லை. அதனால் ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலையைவிட, இனக் குழுக்களுக்கு ஆதரவான நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. இது ஆப்கான் அரசையும், அமெரிக்கப் படையையும்விட தாலிபான்களுக்கே சாதகம்.
பொருளாதாரச் சூழல்
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அளவில் நடக்கும் ஒரே விவசாயம் ஓபியம் பயிரிடுவதுதான். கிட்டத்தட்ட உலகில் பயிராகும் ஓபியத்தில் 80 சதவிகிதம் ஆப்கானிஸ்தானில்தான் பயிராகிறது. தோராயமாக தாலிபான்களுக்கு ஓபியம் மூலமாக ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் வருகிறதென சொல்கிறது ஒரு கணக்கீடு.
ஆப்கானிஸ்தானின் கனிமச் சுரங்கங்களில் வரும் வருமானத்தில் சட்டபூர்வமாகவும், சட்டபூர்வமற்றும் ஒரு பங்கு தாலிபான்களுக்குச் சென்றுவிடுகிறது. சுமாராக 50 மில்லியன் டாலர் கனிமச் சுரங்கங்களில் இருந்து மட்டும் தாலிபான்களுக்குச் செல்கிறது.
தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்குள் சென்றுவரும் வாகனங்களின் மீது வரிவிதிக்கப்பட்டு அதன்மூலம் வரும் வருவாய், தாலிபான்கள் யாரையாவது கடத்திவிட்டால் அவர்களை விடுவிக்க பிணையத் தொகை, புதிதாக ஒரு பகுதியை வெற்றிகொண் டால் அந்தப் பகுதியிலுள்ள ஆயுதங்கள், பணம், வாகனங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொள்ளு தல், தவிர டெலிகம்யூனிகேஷன், மொபைல் நெட்வொர்க் போன்ற சட்டபூர்வமான வியாபாரங் களையும் தாலிபான்கள் மேற்கொள்கிறார்கள். ஆக ஆயுதக் கொள்முதலுக்கும், ஆட்களைச் சேர்க்கவும் தாலிபான் களுக்கு பெரிய பணமுடை ஒன்றும் இல்லை.
பாகிஸ்தான் ஆதரவு
கடந்த இருபது வருடங்களாக மிக மூர்க்கமான அமெரிக்க தாக்குதலை எதிர்கொண்டு தாக்குப்பிடித்துள்ளது தாலிபான் அமைப்பு. அமெரிக்காவின் உக்கிரமான தாக்குதலின் போதெல் லாம், தாலிபானின் பெருந்தலைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்துகொள்ள, சிறிய அளவிலான தலைவர்கள் மேலான பொறுப்புக்கு வந்தார்கள். அதாவது நம்பகமான, திட்ட மிடக்கூடிய தலைவர்கள் பாகிஸ் தானில் இருந்து ஆணைகளைப் பிறப்பிப்பார்கள். அதை அடுத்தகட்ட தலைவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து நிறைவேற்றிக்கொண்டிருப்பார்கள். இதனால் ஒரு தளபதி மறைந்தால், வெற்றிடம் ஏற்படாது. அடுத்த தளபதி அந்த இடத்துக்கு வருவார். ஆனால் வழிகாட்டல் மறையவே மறையாது.
கள வியூகம்
வெற்றியைச் சுவைக்க, ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுடன் சேர்ந்து அமெரிக்கப் படை மூர்க்கமாகவே சண்டையிட்டது. 2013 முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபானின் நிலைகள் என அறியப்படும் இடங்களில் 27,000 குண்டுகளை வீசியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லாவிட்டாலும் 50,000-க்கும் அதிகமான தாலிபான்கள் இறந்துள்ளார்கள் என்றால் அதை தாலிபான்களே மறுக்கமாட்டார்கள்.
ஆனால் தாலிபான் அமைப்பு கவனம் செலுத்தும் விஷயம், அமைப்புக்கு ஆள் சேர்ப்பது. ஒருவர் மறைந்த இடத்தில் புதிதாக ஒருவரைச் சேர்த்து விரைவாக மீண்டுவந்தது. தாலிபான் படை, தலிபான்கள் பயிற்சி செய்யும் வீடியோக்கள், சண்டையிடும் வீடியோ காட்சிகள் மக்களிடையே வாட்ஸ்ஆப்பிலும் பிற சமூக ஊடகங்களிடமும் பரப்பப் பட்டன.
தவிரவும் இப்போதிருக்கும் தாலிபான்கள் அதே பழைய தாலிபான்கள் அல்ல. ஒரு தாலிபான் போர் வீரனுக்கு ஏ.கே. 47 எத்தனை நன்கு அறிமுகமோ, அதேயளவுக்கு ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் அறிமுகம். ஊக்கம் தளராத போராளிகளாய் தாலிபான்களைக் காட்டும் பிரச்சாரத்தையும் அவ்வமைப்பு விடாமல் மேற்கொண்டுவருகிறது.
தாலிபான்களால், ஆப்கான் அரசைப் போல் போர் விமானங்களை வாங்கமுடியாது. அதற்கு மாற்றாக போர் விமானங்களில் பைலட்டுகளாகப் பணிபுரிபவர்களை திட்டமிட்டுக் கொலைசெய்வதை ஒரு யுக்தியாகவே செய்துவந்தது. குறிப்பாக அவர்களை அவர்களது வீடுகளில் வைத்தே கொலை செய்தது. இதனால் ராணுவ பைலட்டுகளாக சேர விரும்புபவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்தது. எத்தனையோ ராணுவ பைலட்டுகள் தங்கள் வேலையை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்தனர்.
எல்லைப்புற செக்போஸ்ட்டுகளில் பணிபுரியும் பாதுகாப்பு படையினருக்கு, "சரணடைந்து உயிர்பிழை அல்லது செத்துப் போ. உனக்குப் பின் உன் குடும்பத்தையும் தாலிபான் அழிக்கும்'' என்பது போன்ற டெக்ஸ்ட் மெஸேஜ்களை போலி கணக்குகள் மூலம் மொத்தமாக அனுப்பி வீரர்களின் தன்னம்பிக்கையை அழிக்கும் வேலையையும் செய்துவந்தது
அமெரிக்காவின் கணக்கு
2001 முதல் தற்போது வரை அமெரிக்கா, ஆப்கானில் போருக்காகவும் பிற காரணங்களுக்காகவும் தோராயமாக 882 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. 2300 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன் பழிவாங்கல் நடவடிக்கை முற்றுப்பெற்ற நிலையில், பொருளாதாரத் தேக்கமும் சேர்ந்துகொள்ள எதற்கு ஆப்கானிஸ்தானில் பில்லியன் கணக்கான டாலர்களை வீணடிக்கவேண்டுமென்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக வலுப்பெற, தனது படைகளை முற்றாகத் திரும்பப் பெற்றுள்ளது அமெரிக்கா. சுருக்கமாகச் சொன்னால் லாப-நட்ட கணக்குப் பார்த்து ஆப்கானிஸ்தானை முற்றாகக் கைவிட்டுவிட்டது அமெரிக்கா.
ஊழல், அவநம்பிக்கை, பலவீனம்
அதேசமயம், அமெரிக்கப் படை நாடு திரும்பியதுமே ஆப்கானிய அரசுப் படை முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டது. ஆப்கான் அதிபர் அடைக்கலம் தேடி தப்பித்துச் சென்றதும் மனரீதியாக நம்பிக்கைச் சரிவை ஏற்படுத்திவிட்டது. தவிரவும் "ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி தப்பியோடும்போது, தனது வண்டியில் மில்லியன்கணக்கான டாலர்களையும் ஏற்றிச் சென்றி ருக்கிறார்' என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஆப்கான் படை மீதும் ஊழல் குற்றச்சாட்டு உண்டு. ஊழலும் திறமையின்மையும் அவர்களது இயல்பு என அமெரிக்க கான்ட்ராக்டர்களும், ராணுவ அதிகாரிகளும் குற்றம் சுமத்திய சம்பவங்கள் உண்டு. தவிரவும், சரணடைந்தவர் களையே கொல்லுமளவுக்கு கருணாமூர்த்திகள் தாலிபான்கள். எதிர்த்து நின்று தோல்விய டைந்தால் என்னாகும் என்ற மனநிலையோடு, ஒரு படை நம்பிக்கையாகப் போராட முடியாது.
இவையெல்லாம் சேர்ந்து தான் தாலிபான்களை வெற்றி யாளர்களாக நிறுத்தியுள்ளது. தா-பான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்ததும் தெருக்களில் நடத்தப்படும் பச்சைப் படுகொலைகள் வீடி யோக்களாக வைரலாகின்றன. உலகம் அதிர்கிறது. தா-பான் களோ, "இஸ்லாமிய சட்டத்திற் குட்பட்ட உரிமைகளை பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்குவோம்' என்கிறார்கள். "தா-பான்களின் இந்த வெற்றி, ஆப்கானிய மக்களின் தலையில் சுமையாக விடியப்போகிறதா, கிரீடமாக ஜொலிக்கப்போகிறதா?' என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.