சேலம் அருகே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நான்கு முக்கிய ஏரிகளை வளைத்துப்போட்டு வீட்டுமனைகளாக்கியுள்ள நிலையில், விரைவில் ஏரியை குடியிருப்புப் பகுதியாக வகைமாற்றம் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது விவசாயிகளிடையே கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கவும், நகர்ப்புற விரிவாக்கத் திட்டங்களின் பேரிலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் புறம்போக்கு நிலங்களை காலகாலமாக கையகப்படுத்தி வருகிறது. அதன்படி, சேலம் அருகேயுள்ள தளவாய்ப்பட்டி ஏரி புறம் போக்கிலிருந்து 58 ஏக்கர் நிலமும், திருமலைகிரி ஏரி - வட்டமுத்தாம்பட்டி ஏரிகளிலிருந்து 38 ஏக்கர் நிலமும், சேலம் தாதம்பட்டி அருகே சீலாவரி ஏரியிலிருந்து 37 ஏக்கர் நிலத்தையும், கடந்த 1992 முதல் 1994 வரையிலான காலகட்டங்களில் கையகப்படுத்தியது.
தளவாய்ப்பட்டி ஏரி புறம்போக்கில் கையகப்படுத்திய நிலத்தில் 1,117 வீட்டு மனைகளும், திருமலைகிரி - வட்டமுத்தாம் பட்டி ஏரிகளின் நிலத்தில் 1,058 வீட்டு மனைகளும், சீலாவரியில் 1023 வீட்டுமனை களையும் உருவாக்கி, விற்பனை செய்தது. இவற்றில், சீலாவரியில் மட்டும் 36 வீட்டு மனைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. மற்ற அனைத்து வீட்டுமனைகளும் முழுமையாக விற்பனை செய்யப்பட்டு, கிரையப் பத்திரமும் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், நீர்நிலைப் பகுதி என்பதாலும், ஏரி புறம்போக்கு நிலம் வருவாய்த்துறை ஆவணங்களில் வகைமாற்றம
சேலம் அருகே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நான்கு முக்கிய ஏரிகளை வளைத்துப்போட்டு வீட்டுமனைகளாக்கியுள்ள நிலையில், விரைவில் ஏரியை குடியிருப்புப் பகுதியாக வகைமாற்றம் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது விவசாயிகளிடையே கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கவும், நகர்ப்புற விரிவாக்கத் திட்டங்களின் பேரிலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் புறம்போக்கு நிலங்களை காலகாலமாக கையகப்படுத்தி வருகிறது. அதன்படி, சேலம் அருகேயுள்ள தளவாய்ப்பட்டி ஏரி புறம் போக்கிலிருந்து 58 ஏக்கர் நிலமும், திருமலைகிரி ஏரி - வட்டமுத்தாம்பட்டி ஏரிகளிலிருந்து 38 ஏக்கர் நிலமும், சேலம் தாதம்பட்டி அருகே சீலாவரி ஏரியிலிருந்து 37 ஏக்கர் நிலத்தையும், கடந்த 1992 முதல் 1994 வரையிலான காலகட்டங்களில் கையகப்படுத்தியது.
தளவாய்ப்பட்டி ஏரி புறம்போக்கில் கையகப்படுத்திய நிலத்தில் 1,117 வீட்டு மனைகளும், திருமலைகிரி - வட்டமுத்தாம் பட்டி ஏரிகளின் நிலத்தில் 1,058 வீட்டு மனைகளும், சீலாவரியில் 1023 வீட்டுமனை களையும் உருவாக்கி, விற்பனை செய்தது. இவற்றில், சீலாவரியில் மட்டும் 36 வீட்டு மனைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. மற்ற அனைத்து வீட்டுமனைகளும் முழுமையாக விற்பனை செய்யப்பட்டு, கிரையப் பத்திரமும் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், நீர்நிலைப் பகுதி என்பதாலும், ஏரி புறம்போக்கு நிலம் வருவாய்த்துறை ஆவணங்களில் வகைமாற்றம் செய்யப்படாததாலும் 95 சதவீதம் பேர் வீடு கட்டாமல், காலி மனைகளாகவே வைத்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, 1.1.2000-க்குப் பிறகு நீர்நிலைகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவேண்டும் என்பதோடு, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து நீர்நிலைகளின் உண்மையான மற்றும் தற்போதைய பரப்பளவு குறித்த விவரங்கள் அடங்கிய பிரத்யேக இணையதளத்தை உருவாக்கவேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, தளவாய்ப்பட்டி ஏரி சுற்றுவட்டார விவசாயிகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியுள்ள ஏரிகளை மீண்டும் கிராமப் பஞ்சாயத்திடமே ஒப்படைக்கவேண் டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக தளவாய்ப்பட்டி விவசாயிகள் திருவேங்கடம், ராமசாமி ஆகியோர் கூறுகையில், "தளவாய்ப்பட்டி ஏரியின் மொத்தப் பரப்பளவு 110 ஏக்கர். 1970-களில் சேலம் உருக்காலையை மையப்படுத்தி இங்கு விமான நிலையம் கொண்டுவரும் திட்டமிருந்தது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1992-1994-ஆம் ஆண்டுகளில் தளவாய்ப்பட்டி ஏரி மட்டுமின்றி, அருகில் 160 ஏக்கர் பரப்பளவுள்ள திருமலைகிரி ஏரி -வட்டமுத்தாம்பட்டி ஏரிகளின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம் ஆக்கிரமித்து வீட்டுமனைத் திட்டத்தைக் கொண்டுவந்தது.
இவற்றில் சேலம் உருக்காலையும் ரயில் வழித்தடத்திற்காக கொஞ்சம் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. தளவாய்ப்பட்டி ஏரிக்குள்தான் அரசுப்பள்ளி, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம் உள்ளன. ஓரிரு ஆண்டுக்கு முன்பு பி.எப். நகர் ஊரமைப்புத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அரசுத் துறைகளும் ஏரிக்குள் பிரமாண்டமாக அலுவலகங்களைக் கட்டியுள்ளன.
வீட்டுவசதி வாரியம், வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்காக இந்த ஏரிகளுக்கான நீர்வரத்துக் கால்வாய்களையும் அடைத்து விட்டது. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் இந்த ஏரிகளில்தான் கலக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதோடு, பயிர் நடவு செய்தால் வேர்ப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னை, நெல், கரும்பு, கடலை, சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்களின் விளைச்சல் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஏரிகளை மீட்டு நல்ல நீர் தேக்கி வைக்கும் வகையில் புனரமைத்தால் திருமலைகிரி, நடையமுத்து வட்டம், வேடுகாத்தாம்பட்டி, தளவாய்ப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, பெத்தானூர், சேலத்தாம்பட்டி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்'' என்றனர்.
இதுதொடர்பாக சி.பி.எம். கட்சியின் சேலம் தாலுகா செயலாளர் சுந்தரம், ஏரிகள் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவராமன் ஆகியோர் நம்மிடம், "ஒரு காலத்தில் இந்த ஏரிகளின் நீரை கிராம மக்கள் குடிநீராகவும் பயன்படுத்திவந்தனர். ஆனால் இன்றைக்கு வீட்டுவசதி வாரியத்தின் ஆக்கிரமிப்பால் ஏரிகள் தூர்ந்தும், கழிவு நீரோடையாக வும் மாறிவிட்டன. நீர்நிலைகளைப் பாதுகாக்கவேண்டும் என்று அரசே பரப்புரையும் செய்துகொண்டு, மற்றொருபுறம் நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் ஏரிகளை ஆக்கிரமிப்பது எந்தவிதத்தில் நியாயம்? இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவிருக் கிறோம்'' என்றனர்.
இது ஒருபுறமிருக்க, "சேலம் நகரின் மையப்பகுதியிலிருக்கும் சீலாவரி ஏரியை மொத்தமாக வீட்டுவசதி வாரியம் விழுங்கி விட்டது. இப்போது அந்த ஏரி, கழிவுநீர்க் காடாக, சதுப்பு நிலமாக மாறி சுற்றுச்சூழலை கெடுத்துவருகிறது. அதையொட்டி விளை நிலங்கள் இல்லாவிட்டாலும், பெருவெள்ளம் போன்ற எதிர்கால அபாயத்திலிருந்து காத்துக்கொள்ள அந்த ஏரியை மீட்பது காலத்தின் கட்டாயம்'' என்கிறார்கள் சேலம் மாநகராட்சி 10-வது வார்டு மக்கள்.
அரசு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் அகற்றுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் காவல்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலை, வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து 20.1.1987-ல், (அரசாணை நிலை எண்.41) அரசு ஓர் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை நாளடை வில் அதிகாரிகள் கிடப் பில் போட்டுவிட்டனர்.
ஆட்சியர்கள் உள் ளிட்ட அதிகாரி களின் அலட்சி யப் போக்கை கூர்ந்து கவனித்த தமிழக அரசு, மீண்டும் கடந்த 29.4.2003-ல், அரசாணை எண். 186-ன் வாயி லாக, 1987-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வழுவாது, வலிந்து செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சேலம் தளவாய்ப்பட்டி, திருமலைகிரி & வட்ட முத்தாம்பட்டி, சீலாவரி ஆகிய நீர்நிலை புறம்போக்கில் வீட்டுவசதி வாரியம் சார்பில் உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு, கிரையப்பத்திரம் வழங்கப்பட்டு விட்டது. 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரையிலான திட்டங்களுக்கு பட்டா வழங்கலாம் என அரசாணை உள்ளது.
அதற்காக, இந்த நான்கு ஏரி புறம்போக்கு நிலங்களும் குடியிருப்பு பகுதியாக வகைமாற்றம் செய்யும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. நில வகைமாற்றம் செய்யப்பட்ட பிறகு வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டா வழங்கப்படும். எங்கள் துறை சார்பில் புதிதாக எந்த ஒரு நீர்நிலையிலும் நிலங்களைக் கையகப்படுத்தவில்லை'' என்றனர்.
நீர்வள ஆதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, "நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு, தனியார் என்று பாரபட்சம் ஏதுமில்லை. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்றால் ஏகப்பட்ட அரசியல் தலையீடும், அதிகாரிகள் தலையீடும் உள்ளதால் எங்களால் எதுவும் செய்யமுடிவதில்லை'' என சலிப்பாகச் சொன்னார்கள்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீதிமன்றங்கள் ஒருபுறம் குட்டிக்கொண்டே இருக்கின்றன. இயற்கையாக உருவான ஏரிகளை ஆக்கிரமிப்பி லிருந்து மீட்டு, புனரமைப்பு செய்வதில் தமிழக அரசிடம் முரட்டுத்தனமான நேர்மை வேண்டும். அது, காலத்தின் கட்டாயமும்கூட.