சமூகத்தின் அடித்தட்டு மக்களான ஆதிதிராவிடர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது ஆதிதிராவிடர் நலத்துறை.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக 1,455 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 1,14,108 மாணவர்கள் பயில்கிறார்கள். இதில் 986 தொடக்கப்பள்ளிகளும், 148 நடுநிலைப்பள்ளிகளும், 151 உயர்நிலைப்பள்ளி களும், 105 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன, இவற்றுக்காக 1155 விடுதிகள் இயங்குகின்றன. இந்த விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை 82,766 மாணவர்கள் தங்கிப்படிப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், 25 சதவீதம் மாணவர்கள் கூட தங்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரமாக உள்ளது. ஆனால் மாணவர்கள் முழுமையாகத் தங்குவதாகக் காட்டி பல கோடிகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
"ஒரு காலத்தில் இந்த விடுதிகளில் தங்குவதற் காக மாணவர்கள் காத்துக்கிடந்தனர். அப்போதெல்லாம் ஒரு மாணவருக்கு மாதம் 80 ரூபாயாக இருந்த உணவுக்கான ஒதுக்கீடு, இப்போது மாதம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டும், பள்ளி விடுதிகள் காற்று வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரமின்மையே இதற்கான முதன்மைக் காரணமாக இருக்கிறது. விடுதிகளில் வழங்கப்படும் தரமற்ற உணவைச் சாப்பிடுவதற்குப் பயந்து, வீட்டிலிருந்தே கல்லூரிக்குச் செல்லும் முடிவுக்கு மாணவர்கள் வந்துவிடுவதே காரணமாகிறது.
ஒரு ஆதிதிராவிட மாணவருக்கு உணவுக்கான ஒதுக்கீடு மாதம் ரூ.1,000 வீதம், ஒரு லட்சம் மாணவர் களுக்குக் கணக்கிட்டால், ரூ.10 கோடி. இதில் ரூ.2.5 கோடி மட்டுமே உண்மையான பயனாளிகளுக்குச் செல்கிறது. மீதமுள்ள ரூ.7.5 கோடி கபளீகரம் செய்யப்பட்டுகிறது. பால், தயிர் ஆகியவை கணக்கில் ஏறியிருக்கும். ஆனால், மாணவர்களின் கண்ணுக்கு அவை தெரியாது. கோழி இறைச்சி சாப்பிடக் கிடைக்கும். ஆட்டிறைச்சியோ கணக்கில் மாத்திரம். விடுதி வளாகச் சுத்தம் உள்ளிட்ட பராமரிப்புச் செலவினங்களில், பராமரிப்பு குறைவாகவும், செலவு அதிகமாகவும் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை'' என்கிறார்கள்.
விடுதிக்கு வருவதற்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுத்து முட்டி மோதிக்கொள்கிறார்கள். "எதற்காக? இங்குள்ள ஏழை மாணவர்களை கல்வியில் தரம் உயர்த்தவா?' என்றால் இல்லை. "இங்கு வந்தால் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வரத் தேவையில்லை. யாரும் கேள்வியும் கேட்பதில்லை. சம்பளத்தைத் தாண்டி கிம்பளம் வேற கொட்டும்' என்கிறார்கள்.
இதுகுறித்து சில விடுதிக் காப்பாளர்களிடம் விசாரித்தோம். "நாங்க மட்டும் என்ன பண்றது? அமைச்சர் தொடங்கி இயக்குநர், உதவி இயக்குநர் எனப் படிப்படியாக மாவட்டத்திற்கு ஒரு நபர் என வைத்துக்கொண்டு, மேல்மட்டத்தில் 75 சதவீதம் எடுத்துக்கொண்டு இறுதியாக எங்ககிட்ட வருவதே 25 சதவீதம்தான். அதைவைத்து மாணவனுக்கு என்ன உணவு போட முடியும்? கோயம்பேடு சென்று அழுகிப்போன பழைய காய்கறிகளைத்தான் வாங்கிவரணும், வேறு வழியில்லை'' என்றார்.
இப்படி மாணவர்களே இல்லாத விடுதிகளை வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பதை விட, ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆண்கள், பெண்கள் விடுதி என இரண்டும், மாவட்டத்திற்கு 8 இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த செலவினங்களை கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் கூடுதலாகக் கொடுக்கலாம். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முதுகலைப் பட்டதாரிகளுக்கான மாணவர் விடுதி ராயபுரத்தில் ஒன்றுதான் உள்ளது. ஆனால் சென்னையில் 10 அரசுக் கல்லூரிகள் உள்ளன. ஒரு கல்லூரியில் ஒரு பாடப் பிரிவுக்கு 30 பேர் என எடுத்துக்கொண்டால் 30 பாடப் பிரிவுக்கு 900 பேர் வருகின்றனர். இந்த 900 பேரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 302 பேர் வருகிறார்கள். இப்படியாகச் சென்னையிலுள்ள 10 கல்லூரிகளுக்கும் கணக்கிட்டால் 3,020 மாணவர்கள் வருகிறார்கள்.
ஒரு முதுகலை மாணவர் விடுதியில் மொத்த மாணவர்கள் 250 பேர் என்றால், மீதமுள்ள 2,770 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதி வசதி எங்குள்ளது? அவர்கள் முன்பு படித்த கல்லூரி விடுதிகளில் கெஸ்ட்டாகத் தங்கிக் கொள்ளும் நிலைதான் உள்ளது. பள்ளி விடுதிகளில் உணவின் தரம் மோசமாக இருப்பது போலவே, கல்லூரி விடுதிகளிலும் உணவின் தரம் மோசமாக உள்ளது.
இப்படியான முறைகேடுகளைத் தடுக்க, எத்தனை மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார்கள் என்பதை ஆய்வுசெய்து, இத்தகைய நிதி முறைகேட்டைத் தடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில், பள்ளி சார்ந்த விடுதிகளின் தேவை குறைந்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, கல்லூரியில் இடம் கிடைத்தும், விடுதியில் இடம் கிடைக்காமல் அவதிப்படும் மாணவர்களுக்கு, அரசு நினைத்தால் தனது நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமலேயே உதவ முடியும். பள்ளி விடுதிகளில் நடக்கும் முறைகேட்டைத் தடுத்து, அந்த நிதியைக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளுக்குச் செலவிட்டால் போதும். தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளை இதேபோல் மாற்ற முடிந்தால், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் விடுதி வாழ்க்கை நன்முறையில் அமையும். தற்போது சட்டமன்றத்தில் உருவாக்கியுள்ள உயர்மட்டக் குழு இந்த முறைகேடுகளைக் களையெடுத்தால், மாணவர்களுக்கு தரமான உணவும், தங்குமிடமும் கிடைக்கும்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமிதாவிடம் கேட்டபோது, “"நாங்கள் இதுகுறித்து ஆய்வுசெய்து, தகுந்த மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மாணவர்கள் மிகக்குறைவாக உள்ள 17 விடுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, புதிதாக 5 கல்லூரி விடுதிகளைத் தற்போது உருவாக்கியுள்ளோம். விடுதிகளின் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருக்கும்பட்சத்தில் மாணவர்கள் எங்களை அணுகிப் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்''”என்றார்.