நீட் தேர்வை அனுமதித்த பாவத்தைப் போக்கும் பரிகாரமாக அதிகளவில் அரசு மருத்துவமனைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது மனசாட்சியாக கருதப்படும் அமைச்சர் தங்கமணியின் நேரடி பார்வையில் நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. வடமாநிலங்களைச் சேர்ந்த 600 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

bb

மருத்துவமனை கட்டடப் பணிகளை ஈரோட்டை சேர்ந்த "வி.சத்தியமூர்த்தி அன் கோ' கட்டுமான நிறுவனத்திடமும், கல்லூரி கட்டுமானப் பணிகள் நாமக்கல்லைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்குச் சொந்தமான பிஎஸ்டி கட்டுமான நிறுவனமும் ஒப்பந்தம் எடுத்திருக்கின்றன. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் மொத்த பட்ஜெட் 336 கோடி ரூபாய். இதில், மருத்துவமனை கட்டடத்திற்கான பட்ஜெட் மட்டும் 157.21 கோடி ரூபாய் ஆகும். ஒப்பந்தப்படி, 18 மாதங்களில் கட்டுமானப் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும். அதன்படி, வரும் 2021ம் ஆண்டு நவ. 5ம் தேதி அரசிடம் கட்டி முடிக்கப்பட்ட முழு கட்டடத்தையும் ஒப்படைக்க வேண்டும்.

Advertisment

அக்டோபர் 30ம் தேதி காலையில் புதிய மருத்துவமனையின் முகப்பு மண்டபம் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டடம், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அபசகுனமாக கருதுவதால் எடப்பாடியும் தங்கமணியும் பதற்றமடைந்தனர். அவர்களின் பதற்றமானதற்கு காரணம், காண்ட்ராக்ட் எடுத்துள்ள- தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவ ரின் நிறுவனமான சத்யமூர்த்தி அண்ட் கோவுக்கு சொந்த மான இடங்களில் அதற்கு முந்தைய 3 நாட்கள் தொடர்ச்சி யாக நடைபெற்ற வருமானவரித்துறையின் ரெய்டுகள்தான். முதல்வருக்கும் தங்கமணிக்கும் நெருக்கமானவர் சத்தியமூர்த்தி.

dd

""வரித்துறையினரின் நடவடிக்கையால் ஆட்சியாளர்களின் குட்டு வெளிப்பட்டு விடலாம் என்பதால்கூட அதை திசை திருப்பும் நோக்கத்தில் கட்டுமான நிறுவனமே கூட முகப்புப் பகுதியை இடித்து தள்ளியிருக்கலாம்'' என்கிறார்கள் ஆளுங்கட்சித் தரப்பினரே.

Advertisment

இந்த கருத்துக்கு வலு சேர்ப்பதுபோல், சம்பவத்தன்று கட்டட இடிபாடுகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி, ""முட்டு கம்பிகளில் வெல்டிங் வைத்த பகுதி சேதம் அடைந்ததால், கட்டுமான பொறியாளர்களே கட்டடத்தின் முகப்புப் பகுதியை இடித்து அகற்றினார்கள்'' எனக் கூறினார்.

கட்டுமான நிறுவனத்தின் சார்பில் அதன் திட்ட மேலாளர் முருகதாஸிடம் பேசினோம். ""பீம் மட்டும் போட்டு விட்டு சிலாப் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு முட்டு குழாய்கள் கப்லாக் முறையில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கப்லாக் குழாய்கள் ஒரு பக்கம் லேசாக கீழே இறங்கிடுச்சு. அதை திரும்பவும் தூக்க முடியாது. அப்படி தூக்க முயற்சித் தால் பெரிய பிரச்னை ஆகிவிடும். கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கட்டடத் தின் லேசாக சாய்ந்த பகுதியை இடிச்சுட்டு மறுபடியும் போட்டுடுங்க என்றனர். அதனால்தான் நாங்களே, அக். 30ம் தேதி காலை 6.30 மணியளவில் போர்ட்டிகோ பகுதியை இடித்தோம். அதற்கு முதல் நாள் மாலையில்தான் கான்கிரீட் போட்டு சிலாப்லாம்கூட போட்டுட்டோம். சிலாபின் தடிமன் ஒரு அடி. அதனால்கூட லேசாக இறங்கியிருக்கலாம். அதைப் பார்த்த உடனே அந்த இடத்திற்கு அருகே யாரும் போக வேண்டாம் என்று பொதுப்பணித்துறை பொறியாளர் கள் எச்சரிக்கை செய்தனர். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்தான் இடித்து தள்ளிட்டோம். ஸ்ட்ரக்ச்சர் படி, இன்னும் மூன்று சிலாப்தான் கட்ட வேண்டியுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடித்து விடுவோம். முடிக்கணும்'' என்கிறார் முருகதாஸ்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் கேட்ட போது, ""கட்டுமான பணிகளை அன்றாடம் பார்வையிட்டு வருகிறேன். அக். 30ம் தேதி காலை 9 மணியளவில், கட்டுமானம் நடக்கும் இடத்தில் பார்வையிட்டேன். ஹிட்டாச்சி வாகனமும், தொழிலாளர்களும் கட்ட டத்தின் முகப்பு பகுதி அருகே இருந்த னர். 21 அடி உயரத்தில் அமைக்கப்படும் பெரிய போர்ட்டிகோ அது. கப் லாக் சிஸ்டப்படி குழாய்கள் முட்டு கொடுக் கப்பட்டு இருந்தது. இதில் சில குழாய் கள் உடைந்து இருந்தன. அதனால் போர்ட்டிகோவின் ஒரு பகுதி சரியத் தொடங்கியதால், அதை கட்டுமான நிறுவன பொறியாளர்களே இடித்து அகற்றியுள்ளனர். இதுதான் நடந்தது. கட்டடம் இடிந்து சிலர் காயம் அடைந்ததாக வந்த தகவல்கள் அனைத் தும் வதந்திதான்'' என்றார்.

இதற்கிடையே நாமக்கல் எம்.பி., சின்ராஜ், ""தரமற்ற கட்டுமானப் பொருள் களால்தான் கட்டடம் இடிந்துள்ளது. அதுவும் அக்.30ம் அதிகாலை 1.30 மணியளவில்தான் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது. இதற்கெல்லாம் கட்டுமான இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராதான் சாட்சி. அமைச்சரும் அதிகாரிகளும் உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள்'' என்கிறார்.

சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை தெளிவுபடுத்துவதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். அமைச்சர் தங்கமணி சொல்வது உண்மையெனில், சம்பவத்தன்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிடலாமே என்பதும் பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

-இளையராஜா