ம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு வரும் நேரத்தில் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதட்டமாக இருந்தனர். தீர்ப்பு வழங்கப்படும் நேரம் வந்ததும் அமைச்சர்களிடமும் கூட பதட்டம் ஆக்கிரமித்திருந்தது. முதலில் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘"சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் அவரது உத்தரவு செல்லும்' என சொன்னதைக் கண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி ஆரவாரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மற்றொரு நீதிபதி சுந்தர், "சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட உரிமை உண்டு. 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய சபாநாயகரின் உத்தரவு செல்லாது' என சொன்னதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடமிருந்த உற்சாகம் பறந்து போனது.

Advertisment

ops

3-வது நீதிபதி விசாரணையின் சாதகபாதகங்கள் குறித்து அலசிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களோ, ‘""மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு இன்னும் 2 மாதத்திற்கு வரப்போவதில்லை. அப்படியே பாதகமாக வந்தாலும் மென்மேலும் 3 மாதங்களுக்கு இழுக்க முடியும். அதனால் குறைந்தபட்சம் இன்னும் 6 மாதகாலத்துக்கு ஆட்சிக்கு ஆபத்தில்லை. அந்த வகையில் இந்த தீர்ப்பு நமக்கு வெற்றிதான்'' என்று கைக்குலுக்கிக் கொண்டனர்.

Advertisment

14-ந்தேதி தீர்ப்பளிக்கப்படும் என 13-ந்தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் தலைமை வழக்கறிஞர்கள் விஜய்நாராயணன் உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் 13-ந்தேதி நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அந்த ஆலோசனை குறித்து நாம் விசாரித்தபோது, ""தகுதி நீக்க வழக்கில் இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட சில மாநிலங்களின் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சபாநாயகர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பாதகமாக வந்துள்ளன. அந்த வகையில் பார்த்தால், சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியும். இந்த வழக்கின் விசாரணையின்போது, சபாநாயகர் தரப்பிலும் அரசு சார்பிலும் வைக்கப்பட்ட வாதங்களில் இரண்டு நீதிபதிகளிடமே மாறுபட்ட கருத்துக்களை நாம் பார்த்திருக்கிறோம். அதனைக் கணக்கிட்டால் மாறுபட்ட தீர்ப்புகள் வருவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. ஆட்சிக்கு உடனடி ஆபத்தில்லை.

Advertisment

jayakumar-samuganathanஇதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதியின் தீர்ப்பு வரும்வரை சபாநாயகரின் உத்தரவுக்கு ஸ்டே கேட்டு எதிர்தரப்பு போகாமல் இருக்க வேண்டும். ஸ்டே கொடுத்துவிட்டால், 18 எம்.எல்.ஏ.க்களின் பதவிகளுக்கும் தற்காலிக உயிர் கிடைத்துவிடும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க முடியும் அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். அதனால் ஸ்டே கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் எடுத்துச் சொல்லியிருக் கிறார்கள்.

அப்போது முதல்வர், "அந்தச் சூழல் வராது. உச்சநீதிமன்றம் வரை வழக்கை கொண்டுசெல்லும் வாய்ப்பு இருப்பதால் தற்போதைய ஸ்டேஸ்கோவை மெயிண் டெயின் பண்றமாதிரிதான் நீதிமன்றமும் உத்தரவிடும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பேரவை விதிகளையும் அரசியலமைப்பு சட்டவிதிகளையும் மீண்டும் ஒருமுறை கவனமாக அலசி ஆராய்ந்தனர். தீர்ப்பு எப்படி இருப்பினும் உடனடி பாதிப்பு வராது என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு ஆலோ சனையை முடித்துக்கொண்டார் முதல்வர்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

lawyer

மாறுபட்ட தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் சீனியர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""தலைமை நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டதால் 100 சதவீத வெற்றி எங்களுக்கு கிடைக்கவில்லைங்கிறது வருத்தம்தான். ஆனால், 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகும். நாடாளுமன்றத் தேர்தல் உட்பட சில பல காரணங்களுக் காக எடப்பாடி அரசை நவம்பர் வரை விட்டு வைக்க நினைக்கிறது டெல்லி. இப்போதைக்கு இந்த ஆட்சி கவிழ டெல்லி விரும்பவில்லை.

புதுச்சேரி சபாநாயகரின் உத்தரவில் தலையிட்ட இதே நீதிமன்றம், தமிழக சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என சொல்லியிருப்பதிலிருந்தே இதனை புரிந்துகொள்ளலாம். அரசியல் முக்கியம் வாய்ந்த ஒரு வழக்கினை 2 நீதிபதிகள் விசாரிக்க உத்தர விட்டதே தவறு. சிங்கிள் ஜட்ஜ்தான் விசாரித்திருக்க வேண்டும். அதனால்தான், காலதாமதம் ஆகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தண்டிக்கப்பட்டிருப்பதால் எங்கள் தொகுதி மக்களுக்கான எந்த பணிகளையும் செய்ய முடிய வில்லை.

இதனை நீதிமன்றங்கள் புரிந்துகொண்டு, முக்கிய வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு 3-வது நீதிபதியின் ஒப்பீனியனுக்கு அனுப்பப்பட்டதால், அவரது தீர்ப்பு வரும் வரையில் சபாநாய கரின் உத்தரவுக்கு ஸ்டே கேட்டு நாங்கள் அணுகியிருக்க வேண்டும். ஏனெனில், ஒரு நீதிபதி எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறார். அதன் பலன் பாதிக்கப் பட்டவர்களுக்கு கிடைப்பதுதானே சரியாக இருக்க முடியும். ஆனால், தினகரன் ஏனோ ஸ்டே கேட்க விரும்பவில்லை'' என்கிறார்கள்.

-இரா.இளையசெல்வன்