அது ஒரு பதற்றமான காலம். மதுரை மாவட்டத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தின் கொட்டகச்சியேந்தல் ஆகிய கிராமங்களில் பட்டியலினத்தவர் கள் போட்டியிடும் தொகுதியாக அறிவிக்கப்பட்டபோது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, ஒன்று தேர்தலை புறக்கணிப்பது அல்லது தேர்தல் நடந்து தாழ்த்தப்பட்டவர் தலைவராகப் பொறுப்பேற்றால் உடனே அவரை இராஜினாமா செய்ய வைப்பது என்று 1996 முதல் 2006 வரை ஒருமுறை இரண்டு முறை அல்ல... 19 முறை தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஊராட்சியில் நிர்வாகம் முற்றிலும் முடங்கியது. சமரச முயற்சியும் எடுபடவில்லை. 2006-ல் கலைஞர் எப்படியாவது இங்கு தேர்தலை நடத்திவிடவேண்டும் என்று உறுதியாக நின்று, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினை முடுக்கிவிட்டார்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதய சந்திரன், தொடர்ச்சியாக இந்த ஊர்களுக்கு படையெடுத்து ஊர் பெரியவர்களிடம் பேசிப்பேசி அவர்களின் மனதை கரைய வைத்து தேர்தலை வெற்றிகரமாக நடத்தச் செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களை சென் னைக்கு அழைத்து சமத்துவ பெருவிழா நடத்தப்பட்டது..
அது நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு...
மீண்டும் அந்த கிராமத்திற்கே, தனது முதன்மைச் செயலாளராக உள்ள அதே உதய சந்திரனுடன் முதல்வரான ஸ்டாலின் அக்டோபர் 2 அன்று வருகைதர... அப்போது, தான் பங்கு பெரும் இந்த நிகழ்ச்சியில் எந்தவித கட்சிக் கொடியோ, தோரணமோ இருக்கக்கூடாது மற்றும் தி.மு.க. கட்சிக்காரர்களுக்கு அனுமதி இல்லை, தனக்கு எந்தவித வரவேற்பும் இருக்ககூடாது என்ற கடுமையான உத்தரவுக்குப் பிறகு பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்திற்கு வந்த ஸ்டாலினை, அங்கு சுற்றுபட்டு கிராம மக்களும் ஒன்றுதிரண்டு குலவையிட்டு வரவேற்க... கிராமசபை கூட்டம் தொடங்கியது.
அங்கு பேச அனுமதிக்கப்பட்ட கிராம மக்கள் ஒரே கருத்தாக "இங்கு ஜனநாயகம் தழைக்க வழிவகுத்த முதல்வருக்கும் அய்யா உதயசந்திரனுக்கும் கோடானுகோடி நன்றி!' என்று சொன்னவர்கள், "58 கால்வாய் தண்ணீர் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டும். அதற்கு அரசு ஆவன செய்யவேண்டும். அடிப்படை பணிகள் தொய்வின்றி நடைபெறவேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களின் பங்கு மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். பாப்பாபட்டியில் மகளிருக்கான இலவச பேருந்து ஒன்றுதான் வருகிறது, அதை இரட்டிப்பாக்கி அது மதுரை டவுன் வரை செல்லவேண்டும். வேலை வாய்ப்புக்கு பயிற்சியளிக்கும் போட்டித் தேர்வு மையம் அமைக்கவேண்டும், மற்றும் இங்கிருக்கும் கம்மாய் நீர் நிரம்ப வழிவகை செய்யவேண்டும்' போன்ற கருத்துகளே மேலோங்கி இருந்தன.
கிராம மக்களின் கருத்துகளைக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது பதிலுரையில், "கிராமங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. மூன்றாவது அரசாங்கமாக இயங்கும் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவது மிக மிக அவசியம். 15 வருடங்களுக்கு முன் இங்கு ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய நானும் உதயசந்திரனும் உங்களிடம் வந்துள்ளோம். உங்களின் குறைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும். மக்களின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். மகளிர் இலவச பேருந்தை இரட்டிப்பாக்கி, அது மதுரைவரை நீட்டிக்கப்படும்.
மேல்நிலை தண்ணீர்த் தொட்டி அமைப்பது, பள்ளியை தரம் உயர்த்துவது, நியாய விலை கடை அமைப்பது, நூலகம் அமைப்பது, பூங்கா அமைப்பது, பாலம் அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எந்த அடிப்படை வேலைகளும் இனி உடனடியாக நிறைவேற்றப்படும். உங்கள் உதயசந்திரனைத்தான் தற்போது என் முதன்மைச் செயலாளராக வைத்திருக்கிறேன். இனி தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் என் பணி போய் சேரவேண்டும் என்பதே முதன்மையான செயலாக இருக்கும்'' என்று உறுதியளித்துக் கிளம்பினார்.
தமிழக வரலாற்றில் ஒரு கிராமசபை கூட்டத்தில் முதல்வர் நேரடியாகப் பங்கேற்று மக்களுடன் உரையாடியது கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியில்தான். அதனை நிறைவேற்றிவிட்டு, ஸ்டாலின் புறப்பட்டடபோது கூட்டத்தில்... "அய்யா மூக்கையா தேவர் பிறந்த மண் இந்த பாப்பாபட்டி அவர் பெயரை சொல்லாமல் செல்கிறீர்களே' என்று கூட்டத்திலிருந்து சத்தம் வர அருகிலிருந்தவர், "ஏம்பா அதையெல்லாம் அதிகாரிகள் எடுத்துச் சொல்லியிருந்தா அய்யா சொல்லிட்டு போயிருப்பார்... விடுங்கப்பா' என்று பதில் கொடுக்க... சத்தம் அமைதியானது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த நடராஜன் என்பவர், "தம்பி நான் பக்கா அ.தி.மு.க.காரன். என் தாத்தா காலத்திலிருந்து அரசியலை பார்த்திருக்கேன். ஒரு முதல்வர் மிகவும் பின்தங்கிய கிராமத்தின் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி, அங்கிருக்கும் சாதிய கட்டுப்பாடுகளைக் களைந்து அனைவரை யும் ஒற்றுமையாக இருக்கவைத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தி, அந்த மக்களை நேரில் வந்து பார்ப்பது என்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை. அதற்காக இந்த ஊரின் ஒரு விவசாயியாக முதல்வருக்கு நன்றி சொல்லிக்கொள் கிறேன். எந்த காலத்தில் இவ்வளவு அதிகாரிகள், இவ்வலவு அரசு வாகனங்கள் எங்க ஊரைத் தேடி வந்திருக்கு? அத நினைத்தாலே உடம் பெல்லாம் புல்லரிக்குது. என் தாத்தன் காலத்திலிருந்து என் காலத்திற்குப் பிறகும், இனி எந்தக் காலத்திலும் இப்படி ஒரு முதல்வரை அடுத்த தலைமுறை பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. என் காலத்திலேயே பார்த்துவிட்டேன்.
’நான் பக்கா அ.தி.மு.க. வெறியன். இந்த கிராமத்திற்கே தெரியும், கேட்டுப் பாருங்கள். கட்சியெல்லாம் மீறி சொல்கிறேன், இது மக்களுக்கு கிடைத்த பொக்கிசம்.’இவரை கெட்டியாகப் பிடித்து கொள்ள வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஸ்டாலினுக்கு இந்த அ.தி. மு.க. தொண்டனின் ராயல் சல்யூட்''’என்று உணர்ச்சி பொங்க கூறினார்
பாப்பாபட்டி விவசாயி நம்மிடம், "எங்க ஊர் வரலாற்றில் தமிழக முதல்வர் வந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டது, என் வாழ்நாளில் பிறவிப் பயனை அடைந்த திருப்தியாகிவிட்டது. இது கனவா, நினைவா என்று தெரியவில்லை. அய்யா என் பேரு கருத்தகண்ணன். கொஞ்சம் காணி நிலமும் இரண்டு காளைமாடுகளும் வைத்திருக்கிறேன். இந்த உழவு மாட்டை வைத்து இங்கிருக்கும் நிலத்தையும் உழுது தருகிறேன். மற்றபடி கம்மா பாசனம்தான் ஆனா எங்க ஊரில் தண்ணி இல்லாமல் வறண்டு போக கடந்த இரண்டு வருடமாக டவுனுக்கு போய் முறுக்கு சுட்டு கடைகளுக்கு போட்டுவந் தேன். இந்த மன்னாதி மன்னன் வந்த நேரமோ எதுன்னு தெரியல்ல... ”ஊருக்குள்ள எல்லா கம்மாவும் நிறைஞ்சு வழியுது.”
நேத்துதான் பேப்பரில் படித்தேன், நம்ம ஊருக்கு முதல்வர் வருகிறார் என்று. என் னால் அங்கு இருக்க முடியவில்லை... ஓடோடி வந்திட்டேன்'' என்றவர், "அய்யா ஒண்ணே ஒண்ணு. சொல்லவேண்டும் என்று வந்தேன். பேச வாய்ப்பு கொடுப்பாங்களா என்று தெரியவில்லை உங்ககிட்ட சொல்லிவிடு கிறேன்'' என்றவர், "அது என்னவென்றால் நம்ம ஊரில் மட்டுமல்ல தமிழகமே செழிக்க வேண்டும். அதற்கு ஒரே ஒரு திட்டம்தான். காளைமாடு வச்சிருக்கிற என்னை போன்ற விவசாயிக்கு ஒவ்வொரு ஐந்து ஏக்கர் உழுதால் 500 ரூபாய் என்று மானியம் கொடுத்தால் என்னை போன்ற விவசாயி மாடுகொண்டு உழ ஆர்வ மாக வருவான். அதனால் மாடும் பெருகும்... அதன் சாணி மண்ணிற்கு இயற்கை உரமாக ஆகும். மண்ணுக் கும் மலட்டுத்தன்மை வராது. இதை வைத்து விவசாயி காளை மாட்டுக்கு துணையாக இரண்டு பசுமாடு வளர்க்க ஆரம்பிப்பான். அது பால் தரும். அதை வைத்து எங்களுக்கும் பொழப்பு ஓடும். மண்வளம் காக்கப்படும். இதை மட்டும் கலைஞர் அய்யா மகனிடம் சொல்லிவிட்டு போயிடலாமுனு வந்தேங்க. இதை மட்டும் அவர் செய்தால் தமிழகமே விவசாயத்தில் முன்னோடி யான செழிப்பான நாடாக இருக்கும்ய்யா'' என்றார்
சாக்ரடீஸோ, "ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காவல் தெய்வம் இருக்கும். அதைதான் குல தெய்வமா அந்த கிராம மக்கள் வணங்குவாங்க. இப்ப இந்த பாப்பா பட்டியின் காவல் தெய்வமா தெரிகிறாரு ’அய்யா ஸ்டா லின். ஊர் மக்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு அய்யாவுக்கு சிலை வைப்போம்.’ எங்க ஊர் வரலாற்றில் இவ்வளவு அதிகாரிகள், முதல்வர் என ஒண்ணுசேர வந்தது இல்லை. சமூகநீதியும் ஜனநாயகமும் வெற்றிபெற துணைநிற்கும் தைரியமாக. அதே சமயத்தில் சாதுரியமாக எல்லா சமுதா யத்தையும் அரவணைத்துப் போகும் தன்மையும் ’அய்யா விடம் முதிர்ச்சியும் நிதானமும் தெரிகிறது'' என்றார்.
பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் முருகானந்தம் நம்மிடம், "இந்த ஊர் மக்களின் ஒரே கோரிக்கை 58 கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் இங்கு வரவேண் டும். அடிப்படை திட்டங்கள் நிறைவேறவேண்டும். ரோடு -பேருந்து வசதி போன்ற தேவைகளை ஸ்டாலின் அய்யா கிராமசபை கூட்டத்திலேயே மக்களின் கோரிக் கைகளை ஆன்”த ஸ்பாட்டில் நிறைவேற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் ஊருக்கு முதல்வர் வருகை தந்து அனைவரின் ஒற்றுமையை மேலும் உறுதி செய்தது மிகப் பெருமையாக இருக்கிறது. மேலும் இந்த மண் ணின் ஜனநாயத்தையும் மக்களையும் நேசிக்கும் தலைவர் கிடைத்ததும் பெருமைதான்'' என்றார்.
ஒரு கிராம சபை கூட்டத்திற்கு முதல்வரே நேரில் செல்வதும், உயரதிகாரிகள் அவரைச் சுற்றியிருப்பதும் கடைக்கோடி கிராமத்தினருக்கும் நம்பிக்கை தரும். அந்த நம்பிக்கைக்கேற்ப, முதல்வர் அளித்த வாக்குறுதிகளும் -மக்கள் வைத்த கோரிக்கைகளும் நிறைவேறும்போது உண்மையாக ஆட்சித் தலைமையை காவல் தெய்வமாக மக்கள் நினைப் பார்கள்.