ண்ணகி -முருகேசன், சங்கர் (கௌசல்யா), கோகுல்ராஜ் உள்ளிட்ட ஆணவப் படுகொலைகளின் வரிசையில், தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை... நெல்லை கே.டி.சி. நகர் அருகிலுள்ள அஷ்டலெட்சுமி நகர் அம்பாள் மருத்துவமனை... பிற்பகல் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்திருந்த தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்குமாரை டூவீலரில் அழைத்துச்சென்று, எதிர்பார்க்காத நேரத்தில் வெட்டி வீசியிருக்கின்றான் கொலையாளி சுர்ஜித். பட்டியலினத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷின் கொலைக்குக் காரணம், ஆதிக்க சாதியை சேர்ந்த கொலையாளியின் அக்காவை காதலித்ததே என்றது போலீஸாரின் முதற்கட்ட விசாரணை.

"நானும், என் அக்காவும் படித்த பள்ளியில் தான் தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவினும் படித்தார். அப்போது முதல் என் அக்காவிற்கும் அவருக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த பழக்கம் எங்கள் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, காவல்துறையில் உள்ள என் பெற்றோர் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். நான் கவினிடம் பலமுறை தொடர்புகொண்டு, "என் அக்காவுடன் பழகுவதை உடனடியாக நிறுத்திக்கொள். இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று எச்சரித்தேன். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

Advertisment

kavin1

எங்கள் எதிர்ப்பை மீறி, எங்கள் பகுதிக்கே அடிக்கடி வந்து என் சகோதரியை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள சித்த மருத்துவ மையத்தில் என் அக்கா பணிபுரி வதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பது என்ற பெய ரில் அவர் தொடர்ந்து வந்து சென்றது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக் கிழமையன்று கவின் செல்வ கணேஷ் மருத்துவ மனைக்கு வந்திருப்பதை அறிந்தேன். இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என முடிவு செய்து, அவரிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத் துச் சென்றேன். அங்கு அவரிடம், "இனியாவது என் அக்காவை மறந்துவிடு' என்று கடைசியாகக் கூறி னேன். ஆனால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். வாக்குவாதம் முற்றியதால், நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டத் தொடங்கினேன். அவர் தப்பி ஓட முயன்றார், ஆனால் ஆத்திரத்தில் நான் அவரை ஓட ஓட விரட்டி தலை, முகம், முதுகு எனச் சரமாரியாக வெட்டினேன். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்ததை உறுதி செய்த பின்னரே அங்கிருந்து நகர்ந்தேன்'' என, தானாகவே கொலையை ஒப்புக்கொண்டு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார் கொலையாளி சுர்ஜித்.

தகவலறிந்த காவல்துறையினர், கவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி, தடயவியல் உதவி இயக்குனர் ஆனந்தி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அருகிலுள்ள வீடுகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள், சம்பவம் நடை பெற்ற சாலையிலுள்ள அம்பாள் கிளினிக்கி லிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையிலும் காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டனர். 

Advertisment

கவினின் உயிரற்ற உடலைப் பார்த்து கதறி அரற்றிய கவினின் தாயார் தமிழ் செல்வியோ, "விபத்தில் சிக்கிய தன்னுடைய தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், அந்த பெண் வரக்கூறிய காரணத்தை தெரிந்து கொள்வதற்காகவும் நான், கவின் தாத்தா மற்றும் கவின் உட்பட இங்கு வந்தோம். வந்த இடத்தில் அந்த பெண்ணிடம் சிகிச்சை மேற்கொண்டிருந்த பொழுது கவினுக்கு போன் வந்தது. அந்த போனை பிடித்துக்கொண்டு வெளியில் சென்றவன் இப்ப பிணமாய் கிடக்கின்றான். அவன் படிப்பில் டாப்பர். ஆனால் இதில் ஏமாந்துவிட் டான்'' என்றவாறு மயங்கி சரிந்தார்.

"எனது மகனுக்கும் அந்த பெண்ணிற்கும் 11ஆம் வகுப்பு முதலே நெருங்கிய நட்பு இருந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று வா, திருமண விஷயமாகப் பேசலாம் என அந்த பெண் அழைத்ததையொட்டி தனது அம்மா, தாத்தா மற்றும் உறவினருடன் அங்கு சென்றான் கவின். ஆனால் வரவழைத்து ஆணவக்கொலை செய்துள்ளது பெண் வீட்டார் தரப்பு. எனது மகனை வெட்டிக் கொலை செய்தது போல் அவரது மகளையும் கொலை செய்திருக்க லாம் அல்லவா? அப்படிச் செய்திருந்தால் நான் பாராட்டியிருப்பேன். எனது கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. சட்டப்படி நியா யம் கிடைக்க வேண்டும். எஸ்.பி. நினைத்திருந்தால் உடனே அவர்களைப் பிடித்திருக்கலாம். எங்களது பிரச்சினைக்கு தீர்வு காண திருமாவளவன் வருகிறார். எங்கள் பிரச்சினை பாராளு மன்றம் வரை ஒலிக் கும்'' என ஆவேச மானார் கவினின் தந் தையான சந்திரசேகர்.

kavin2

இந்த நிலையில் சுர்ஜித் மட்டும் குற்றவாளி கிடையாது. அவனுடைய பெற் றோர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்குவோம் என திருச்செந்தூர் -தூத்துக்குடி சாலை முக்காணியில் கவினின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற இப்போராட்டத்தில், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்கின்றோம் என போலீஸார்  சமாதானம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட் டது. கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர்களான தந்தை சரவணன், விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் பட்டாலியனில் உதவி காவல் ஆய்வாள ராகவும், தாய் கிருஷ்ணவேணி, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியனில் உதவி ஆய்வாள ராகவும் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் தமிழ்நாடு சிறப்புப் படை டி.ஐ.ஜி. சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் கொலையாளி சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட கவினின்  தாயார் தமிழ்செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மற்றும் பெற்றோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவின் செல்வகணேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரண டைந்த சுர்ஜித், திருநெல்வேலி மாவட்ட முதலா வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி சத்யா.

kavin4

தேவேந்திர குல சட்டபாதுகாப்பு மையத்தின் நிறுவனரான வழக்கறிஞர் பாஸ்கர் மதுரமோ, "கவினின் ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் பெற்றோர்கள் கைது செய்யப்பட வில்லை. காவல் துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். காவல் துறையில் கொலையாளிகள் பணியாற்று வதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற வேண்டும்.

kavin3

திருநெல்வேலி தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்  பதவி இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. இதே வேளையில், விசாரணை முடியும் வரை ஆணவக்கொலை குற்றவாளிகள் சொந்த மாவட்ட, மாநிலத்திற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும். வழக்கில் குற்றவாளித் தரப்பிற்கு அதே சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  ஏ.டி.ஜி.பி. ஒருவர் உதவிவருகிறார். அதனால்தான் துவக்கத்திலிருந்தே இந்த தடுமாற்றம். சாட்சிகளுக்கு சிறப்புப் பிரிவு மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதுபோல் ஏற்கெனவே உள்ள அரசாணையின்படி குறிப்பிட்ட மூன்று பிரிவு காவல் அதிகாரிகளை தென் மாவட்டத்தில் பணியமர்த்தக்கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதே வேளையில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை'' என்கின்றார் அவர்.

தென் மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் ஆணவப் படுகொலைகளை தமிழக அரசு இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். 

-ராவணன்