புதன்கிழமையன்று மாலை 5 மணி யளவில், "சாதியின் பெயரால் நடத்தப்பட்ட இந்த ஆணவப் படுகொலைகள் அரிதினும் அரிதான வழக்காக கருதப்படுகின்றது என்பதால் குற்றவாளி வினோத்குமாருக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை விதிக்கப் படுகின்றது'' என ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கி அதிரடி காண்பித்தார்.
"மேட்டுப்பாளையம் அருகே உள்ள சீரங்கப்பாளையம் பகுதியில் உருளைக்கிழங்கு மூட்டை தூக்கும் சுமை தொழிலாளிகளாக பணியாற்றி வந்தவர்கள் கருப்பசாமியின் மகன்களான வினோத்குமார், கனகராஜ் மற்றும் கார்த்திக். இதில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்பவரை காதலித்து வந்திருக்கின்றார். காதலின் தொடக்கத்திலிருந்தே "அது மாற்று சாதிப்பெண், வேண்டாம்' என மிரட்டியிருக்கின்றார் அண்ணனான வினோத்குமார். நாளடைவில் கனகராஜ், வர்ஷினி பிரியாவை 2019ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இதில் பெண்ணின் தரப்பும் பிரச்சனை நமக்கு எதுக்கு.? என திருமணத்தை ஆதரிக்கவில்லை. வேறு வழியில்லை என மனைவியை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்ற நிலையில், சகோதரர்கள் தகராறு செய்ய... கனகராஜின் தந்தை கருப்பசாமி மட்டும் ஆதரவாக பேசி, "தனியாக வீடு பார்த்து செல், பிறகு பேசிக்கொள்ளலாம்' என கனகராஜை அனுப்பியிருக்கின்றார்.
அதற்கடுத்த தினங்களில் 2019 ஜூன் 28ஆம் தேதியன்று தனது நண்பர்களான கந்தவேல், சின்னராஜ் மற்றும் அய்யப்பன் ஆகியோரை அழைத்துக்கொண்டு கனகராஜின் வீட்டிற்கு சென்றிருக்கின்றார் கொலைக்குற்றவாளியான வினோத்குமார். தொடர்ச்சியாக அந்த பெண்ணை திருப்பி அனுப்பு. நம் சாதி என்ன? அவ சாதி என்ன? என கனகராஜூடன் வாக்கு வாதம் நடைபெற்றிருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கையில் கொண்டுவந்திருந்த அரிவாளால் கனகராஜையும், வர்ஷினி பிரியாவையும் வெட்டிச் சாய்த் திருக்கின்றார் வினோத்குமார். அங்கேயே கனகராஜ் உயிரிழக்க, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வர்ஷினி பிரியாவும் தொடர்ந்து உயிரிழந்தார்'' என்கின்றது காவல்துறையின் குற்றப்பத்திரிக்கை.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில்... கடந்த 23ம் தேதியன்று யார் குற்றவாளி? என்கின்ற தீர்ப்பினை வழங்கினார் நீதிபதி விவேகானந்தன். அதில், "முக்கிய குற்றவாளி வினோத் குமார். இதே வேளையில் கூட்டுச்சதி என்ற பிரிவில் பதியப்பட்ட வழக்கில், இவர்கள் அனைவரும் கூட்டுச்சதி தான் செய்தார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்பதால் வினோத்குமாரின் நண்பர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். வழக்கின் தண்டனை விபரம் வருகின்ற 29ஆம் தேதி வழங்கப்படும்'' என்றார் அவர்.
29ஆம் தேதி புதனன்று, வினோத்குமார் மீதான குற்றம் நீதிமன்றத்தில் உறுதி செய் யப்பட்ட நிலையில் அவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பது குறித்து நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் சிறப்பு வாதம் நடைபெற்றது. "இது அரிதினி லும் அரிதான வழக்கு இல்லை எனவும், தம்பி மீதான கோபத் தில் கொலைசெய்யச் சென் றாரே தவிர, அந்த பெண்ணை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் செல்ல வில்லை. எனவே அதிகபட்ச தண்டனை கொடுக்கக்கூடாது'' என குற்றவாளி வினோத் குமார் தரப்பு வழக்கறிஞர் சசிகுமார் வாதத்தை முன் வைக்க...
"சாதி மாறி திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக தம்பியை வினோத்குமார் வெட்டி கொலை செய்தார். தடுக்க வந்த அந்த பெண்ணையும் கொலை செய்தார். கொலையோடு சேர்ந்த வன்கொடுமை, தீண்டாமை, சாதிரீதியான வன்கொடுமைகளை தடுக்க, இதை அரிதினும் அரிதான வழக்காக கருதவேண்டும். வன்கொடுமையோடு கூடிய கொலையாக இந்த இரட்டைக் கொலை நடந்திருக்கின்றது, எனவே இதை அரிதினும் அரிதான வழக்காக எடுத்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்படி ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அது போல் பரோல் உட்பட எந்தவிதமான அரசின் சலுகைகளும் குற்றவாளிக்கு கொடுக்கக் கூடாது'' என அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் எதிர்வாதத்தை வைத்தார்.
வர்ஷனி பிரியாவின் தாயார் அமுதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகனும், இரட்டைக் கொலை நடந்திருப்பதாகவும், சாதி மாறி திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விவேகானந்தன், "உணவு இடைவேளைக்கு பிறகு தண்டனை விபரம் வழங்கப்படும்'' என, வழக்கை மாலை 5 மணிக்கு ஒத்திவைத்தார்.
அதிகபட்ச தண்டனையாக இருக்குமா.? இல்லையா.? என வாதம் மக்களிடையே இருந்த நிலையில்... மாலை 5 மணியளவில் தண்டனை விபரத்தினை வாசித்தார் நீதிபதி விவேகானந்தன்.
"வினோத்குமார், இறந்த பெண்ணின் தாயார் ஆகியோரிடமும், அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் கேட்கப்பட்டதில்... வீட்டிற்குள் அத்துமீறிச் சென்று தாக்கியதற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், இரட்டைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்ட னையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தனியாகத் தண்டனை இல்லை. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதுதான் சரித்திரபூர்வமான ஒரு நிகழ்வாக, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில், இந்த வழக்கிற்கு இத்தகைய தீர்ப்பு கிடைத்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கிறேன். இந்தத் தீர்ப்பானது தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்பதற்கேற்ப நடந்த பல்வேறு ஆணவக் கொலைகளைப் போன்று, மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்'' என்றார். அவர் கூற்றுப்படியே அது தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்துவருவது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு குறித்து பேசிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனோ, "தமிழகத் தில் தீண்டாமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதற்கேற்ப கண்ணகிலி–முருகேசன், திவ்யா–இளவரசன், சங்கர்-–கௌசல்யா, கோகுல்ராஜ் எனப் பல்வேறு ஆணவக் கொலைகள் நடந்து வந்தன. இந்தத் தீர்ப்பு, இவற்றைத் தடுப்பதற்குப் பெரிதும் உதவியாக இருக்குமென்று நம்புகிறோம். காதல் என்பது இயற்கையானது. சாதியை மட்டும் காரணமாக வைத்து கொலை செய்வது என்பதை ஏற்க முடியாது. ஆணவப் படுகொலைகளுக்கு தீர்வு தூக்குத் தண்டனை என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றது'' என்றார் அவர்.
பெண்ணின் தாயாரான அமுதாவோ, "என்னுடைய இரண்டாவது மகள்தான் வர்ஷினி பிரியா. என் கண்முன்னே அவளைக் கொடூர மாக வெட்டிக் கொன்றனர். என் மகளின் கொடூர மரணத்துக்கு தகுந்த தண்டனை தரப்பட்டுள்ளது'' என்றதும் குறிப்பிடத்தக்கது.
இனி ஒரு ஆணவக்கொலை நடந்தேறக் கூடாது என்கின்றது இத்தீர்ப்பு. திருந்த வேண்டியது ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள ஆண்டைகள் கையில்தான் உள்ளது.!
படங்கள்: விவேக்
______________
இறுதிச் சுற்று!
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதி ராஜா காலமானார். அவருக்கு வயது 82. அவரது மறைவுக்கு தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும், சிங்கள அரசியல் தலைவர் களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிறந்த சேனாதிராஜா, 1961-ம் ஆண்டு அரசியல் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஈழத் தமிழர் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதால் சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேனாதிராஜா, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர். இலங்கை நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக முழக்க மிட்டவர். அவரது மறைவு, ஈழத்தமிழர் பிரச்சினைகளை முன்னெடுக்கும் அரசியல் போராட்டங்களுக்கு இழப்பு என்கின்றனர் இலங்கை தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள்.
-இளையர்