மதுரையில் 14-ஆம் தேதி காவல்துறை ஆணையர் அலுவலகம் பக்கம் ஏதாவது செய்தி சிக்குகிறதா என ஒரு நடை போயிருந்தோம். அப்போது பத்துக்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வந்து பல லட்சங்களை இழந்ததாக, புகார் கொடுக்க... நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதை என்ன என கேட்டோம்.
வலைத்தளப் பக்கமான ஓ.எல்.எக்ஸ் (olx)லில் புகழ்இந்திரா, ஸ்ரீபுகழ் என வெவ்வேறு பெயர் களில் இரண்டு வீடுகளுக்கு 20-க்கும் மேற்பட்ட வர்களிடம் தன் நோக்கம்போல 10 லட்சத்திலிருந்து பல லட்சங்கள் ஒத்தித்தொகை வாங்கிவிட்டு, 10 மாதமாக யாருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் ஏய்த்த கதையைச் சொன்னார்கள் ஏமாந்தவர்கள். ஒவ்வொருவரின் புகாருக்கும் வெவ்வேறு வழக்கறிஞர்களை வைத்து லோக்கல் காவல் நிலையத்தை சரிக்கட்டி இரண்டு மாத இடை வெளியில் வங்கி செக் தந்து ஏய்த்துவந்திருக்கிறார் இந்திரா என்பவர்.
மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபுகழ், அ.தி.மு.க. ஐ.டி. விங் என்று சொல்லிக் கொண்டு எடப்பாடியோடு நிற்பது போன்ற புகைப்படம் ஒரு வீட்டிலும், மற்றொரு வீட்டில் முதல்வர் ஸ்டாலினோடு நிற்கும் படம், அமைச்சர் களோடு இருக்கும் படம் என்று தனது இரண்டு வீட்டிலும் வைத்திருக்கிறார். இந்த இரண்டு வீடுமே இவரின் சொந்த வீடுதான். ஆனால் இந்த இரண்டு வீடுகளையும் 7 வருடங்களுக்குமுன் விற்பதாகச் சொல்லி இருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டைப் பதிந்துகொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளார். தற்போது நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.
விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எங்கே வீடு கைமாறிப் போய்விடுமோ என்ற பயத்தில், அதற்குள் இதே வீட்டை வைத்து பல கோடி சம்பாதித்துவிடவேண்டும் என்று திட்ட மிட்டிருக்கிறார். வலைத்தளத்தில் வீடு ஒத்திக்கு என்று விளம்பரம் செய்து, அணுகிய 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சங்களைப் பெற்றிருக்கிறார். ஏமாந்தவர்கள் ஒவ்வொருவராக புகாருக்கு மேல் புகாராக கொடுக்க தற்போது போலீஸார் ஸ்ரீபுகழ் இந்திராவை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஏமாந்த இராஜேந்திரன் நம்மிடம், “"சார் ஒத்திக்கு ஏதேனும் வீடு கிடைக்குமா என்று ஓ.எல்.எக்ஸ்-இல் பார்த்து வந்தேன். அப்போது ரோஜாமலர் வீதியில் ஒத்திக்கு ஸ்ரீ புகழ்இந்திரா என்பவரது வீடு உள்ளதைக் கண்டதும், அதில் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது நேரில் வரச்சொல்லி வீட்டை சுற்றிக் காண்பித்தார் இந்திரா. வீட்டினுள் சாமான்களை மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தனர். அதுபற்றி கேட்டதற்கு "எங்க ளுக்கு பூர்வீக வீடு இருக்கிறது. எனவே இந்த வீட்டைக் காலிபண்ணவிருக்கிறோம். நீங்கள் அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் நாங்கள் அந்த வீட்டிற்குப் போய்விடுவோம்' என்றார்.
அவரது பேச்சை நம்பி முதலில் 7 லட்சம் கொடுத்தேன். மீதி காலி செய்த பின்னர் கொடுப்பதாகச் சொன்னேன். பணம் கைக்கு வந்ததும் காலி செய்து கொடுக்க இழுத் தடித்துக்கொண்டே வந்தார். ஒருநாள் அவரைத் தேடிப் போனபோது, அங்கு மற்றொருவரிடம் இதே கதையைச் சொல்லி 8 லட்சம் வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார். கையும் களவுமாகப் பிடித்ததும் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம்தான் தெரிந்தது என்னை மாதிரி 10-க்கும் மேற் பட்டவர்களிடம் 8 லட்சம், 10 லட்சம் என்று நோக்கம்போல இந்த இரண்டு வீட்டையும் காண்பித்து வாங்கியிருக்கிறார். அதைக் கேட்கப்போனால் கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டி "உங்களால் என்னை ஒன்றும் செய்யமுடியாது மிஞ்சிப் போனால் 15 நாளில் மீண்டும் வந்துவிடுவேன்' என்று மிரட்டினார்.
வேறு வழியின்றி ஆணையூர் காவல் நிலையத்தில் துணை ஆணையர் விஜயகுமாரிடம் புகார் கொடுத்தால், அங்கு இன்ஸ்பெக்டர் முதற்கொண்டு அனைவரும் அவன் சார்பாகத்தான் பேசுகிறார்கள். என்னைப்போல் ஏமாற்றப்பட்ட 5 நபர்கள் சேர்ந்து புகார் கொடுத்தோம். போலீஸாரோ, எங்களை மிரட்டி அவனிடமிருந்து இரண்டு மாத இடைவெளியில் போலி செக் கொடுத்து அனுப்பிவிட்டனர். அந்த செக்கும் ரிட்டர்ன் ஆக, மறுபடி இவனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியபோது ஒன்றிய அரசில் சுற்றுச்சூழல் மாநில செயலாளர், அ.தி.மு.க. ஐ.டி.விங் செயலாளர், மற்றொருவரிடம் தி.மு.க. ஐ.டி. விங் என விதவிதமாக விசிட்டிங் கார்டு கொடுத்துள்ளான். எங்களைப் போன்று ஏமாந்தவர்கள் 11 நபர்களை தேடிக் கண்டுபிடித்து மொத்தமாக மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க வந்தால்... அவனுக்காக 6 வழக்கறிஞர்கள் வருகிறார்கள். அதிகாரமும் நீதியும் மோசடிக்காரன் பக்கம்தான் நிற்கிறது தம்பி''’என்று அழாத குறையாகச் சொன்னார்.
எப்போது தீர்ப்பு வந்து, எப்போது பணம் திரும்பக் கிடைக்கும் என ஏங்கிப் போய் நிற்கிறார்கள் ஏமாந்தவர்கள்.