நெஞ்சு வலியாலும் மூச்சுத்திணறலாலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்தார்கள் எனச் சொன்னவர் முதல்வர் எடப்பாடி. ஜூன் 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு ஜூலை மாதம் 1ஆம் தேதிதான் கொலை வழக்கை சிபிசிஐடியினர் பதிவு செய்கிறார்கள்.
இந்த கொலை வழக்கை பதிவு செய்வதற்கு முன்பு ஒரு ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. டிஜிபி திரிபாதி, எடப்பாடி ஆலோசகர் சத்தியமூர்த்தி, உளவுத்துறை ஐ.ஜி. மற்றும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். முதலில் உளவுத்துறையின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.
சாத்தான்குள சம்பவத்தில் மக்களது போராட்டங்களை பலர் தூண்டிவிடுகிறார்கள். அந்த சம்பவம் நடந்தபோது தற்பொழுது போலீசுக்கு எதிராக பேசும் ரேவதிதான் பாரா காவலராக இருந்தார். அந்த காவல்நிலையத்தில் இதுபோல சம்பவம் நடந்தது என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரேவதி தெரிவிக்க தவறிவிட்டார். அதேபோல் இந்த சம்பவத்தில் வி.வி. மினரல் வைகுண்டராஜன், ஹரி நாடார் போன்றவர்கள் சாதீய ரீதியாக போராட்டங்களை தூண்டி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் அதிகாரிகள் சிலர் சம்பவம் நடந்த சமயத்தில் காவல்நிலையத்தில் இல்லை.
வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி, சிபிஐக்கு வழக்கை மாற்றிய அரசு உத்தரவை ஏற்கவில்லை. சிபிசிஐடிக்கு பரிந்துரைத்ததுடன், ஒருபடி மேலேபோய் இதை கொலை வழக்காக பதிவு செய்ய தேவையான முகாந்திரம் இருக்கிறது என சொல்லியிருக்கிறார். அதனடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என உளவுத்துறை கொடுத்த பரிந்துரை விவாதிக்கப்படுகிறது. உளவுத்துறையின் இந்த அறிக்கையை அட்வகேட் ஜெனரல் மற்றும் அவருடன் இருந்த வழக்கறிஞர்கள் எதிர்க்கிறார்கள். நேரடியாக கொலை வழக்கு என 302வது செக்சனில் பதிவு செய்யாமல் 304/1, 304/2 என்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யலாம் என சொல்கிறார்கள். 304/1-ன் பிரிவின் படி, ஒரு தாக்குதல் நடக்கிறது அது கொலையாக முடிகிறது. 304/2 செக்ஷன்படி நடைபெற்ற தாக்குதல் கொலை செய்வதற்காகவே நடக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளின் கீழ்தான் காவல்துறை லாக்கப்பில் நடக்கக்கூடிய மரணங்கள் வரும் என சொன்னார்கள்.
அதைப் பற்றி அங்கிருந்தபடியே எடப் பாடி தனக்கு தெரிந்த வழக்கறி ஞர்களிடம் விவாதித்தார். அவர்கள் உயர்நீதிமன்றம் கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என சொன்ன பிறகு கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டும் என சொன்னதால் டிஜிபி திரிபாதியிடம் சாத்தான்குளம் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார்மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு எடப்பாடி கூறுகிறார். உடனே சிபிசிஐடி ஐ.ஜி.யான சங்கருக்கு திரிபாதி உத்தரவுகளை பிறப்பித்தார் என்கிறது தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரங்களை சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சிபிசிஐடி ஐ.ஜி.யான சங்கர், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். அவரது உத்தரவுகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததினால், சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டார். அவரிடம் அமைச்சர் வேலுமணி சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பேசுகிறார். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை மட்டும் பிடிக்க வேண்டும். லாக்கப்பில் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடித்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் யார் மீதும் கை வைக்கக்கூடாது. அவர்களை கைது செய்தால் காவல்துறையினர் போலீஸ் அல்லாத சமூக விரோதிகளை வைத்து காவல்நிலையத்தில் கொலை செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டு வரும் என டிஜிபி திரிபாதியிடம் இருந்து சிபிசிஐடி ஐ.ஜி.யான சங்கருக்கும், எஸ்.பி.யான ஜெயக்குமாருக்கும் உத்தரவுகள் பறக்கிறது. அதன்பிறகே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தவிர மற்றவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் சிலருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலையிட்டு காப்பாற்றுவதற்கான முயற்சியும் நடந்தது. அதையும் மீறி ஐ.ஜி சங்கரும், எஸ்.பி. ஜெயக்குமாரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்தனர்.
போலீசார் மீது போடப்பட்ட இந்த கொலை வழக்கில் பல ஓட்டைகள் இருக்கிறது என்கிற விமர்சனத்தை அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் களே முன் வைக்கிறார்கள். இந்நிலையில், திமுக எம்பியும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோவனிடம் இதுபற்றி கேட்டோம். ""கொலை வழக்குப் போட்டது என்பது மிகவும் சரியான நடவடிக்கை. இதுபோன்ற குற்றங்களில் கொலை வழக்குப் போட வேண்டும் என பல தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கிறது. 304/1, 302 ஆகிய சட்டப்பிரிவுகளுக்கு இடையே ஒரு சிறிய வித்தியாசம்தான் இருக்கிறது. ஆகவே லாக்கப்பில் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடித்து காயப்படுத்தி மரணத்திற்குள்ளாக்கிய காவலர்களை கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என திமுகவும், உயர்நீதிமன்றமும் பொதுமக்களும் எழுப்பிய கோரிக்கையின் விளைவாகவே இந்த வழக்குப்பதிவு நடந்துள்ளது'' என்றார்.
-தாமோதரன் பிரகாஷ்