திரையுலகில் உலக நாயகனாகத் திகழும் கமல், அரசியலிலும் பிக்பாஸாகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கமலோ, 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் பொம்மையை உருவாக்கி, அதை இப்போது உடைத்து உடைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது, தனது மக்கள் நீதி மய்யத்துக்கு கணிசமான ஓட்டு வங்கியை உருவாக்கி, ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்த கமல், இந்த சட்டமன்றத் தேர்தலில் பலமாக அடிபட்டிருக்கிறார். அவரது மக்கள் நீதி மய்யம், மிக மோசமாகச் சேதமடைந்திருக்கிறது. சொற்ப வாக்குகளில் வெற்றியைப் பறிகொடுத்த கமலையும், மயிலாப்பூரில் போட்டியிட்ட ஸ்ரீபிரியாவையும் தவிர அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், ஏறத்தாழ எல்லோருமே டெபாசிட்டை இழந்திருக்கிறார்கள்.
கமலுக்கு என்ன ஆச்சு? அவரது மய்யம் தேறுமா? என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர்.
"2018 பிப்ரவரியில் கமலால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், படித்தவர்களின் கட்சி என்ற இமேஜை முதலில் பெற்றது. அவருடன் அப்போதே பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, கமிலா நாசர் உள்ளிட்டவர்கள் கைகோர்த்தபோது, அவரது கட்சி மீதும் அறிவு ஜீவிகளின் பாசறை என்கிற ஒளிவட்டம் அப்போதே விழுந் தது. அதனால் தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக கமல் எழுவார் என்ற நம்பிக்கை பலரிடமும் எழுந்தது.
அதோடு பெரியார் பெயரை அவர் அடிக்கடி உச்சரித்து, தன்னை திராவிட அரசியல்வாதி யாகவும் காட்டிக்கொள்ள முயன்றார். அதனால் அவர் மீது மேலும் கவனம் குவியத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய அவரது மக்கள் நீதி மய்யம், தமிழக அரசியல் கட்சிகளில் மூன்றாம் இடத்தை நோக்கி நகர்ந்தது. அது, சென்னையில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்றிலுமே 10 சத வாக்குகள் அளவுக்குப் பெற்றது. 11 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.
இதன்பின்னர் கமல், கொஞ்சம்கொஞ்சமாக மோடியின் கருத்துக்களுக்கு இசைவாகப் பேச ஆரம்பித்தார். அ.தி.மு.க. அரசைச் சாடிய அவர், தி.மு.க.வைத்தான் குறிவைத்தாரே தவிர, தேர்தல் நேரத்தில்கூட அவர் மோடியின் அரசை விமர்சிப்பதைத் தவிர்த்தார். இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "முதலில் என் வீட்டைத்தான் (தமிழகம்) நான் பார்க்கணும்' என்று மழுப்பினார்.
இதனால், தேர்தல் களத்தில் "தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக பா.ஜ.க. களமிறக்கிய பி டீம்' என்று கமல் தரப்பு விமர்சிக்கப்பட்டது. இதனால் கமலின் அரசியல்மீது ஆர்வம்கொண் டிருந்த இளைஞர்கள்கூட அவரிடமிருந்து மெல்ல விலகி நின்றதோடு, சமூக ஊடகங்களில் அவரைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். தனது தேர்தல் வியூகங்களுக்கு உதவ, முதலில் ஐபேக்குடன் பேச்சுவார்த்தை நடத்திய கமல், கடைசியில் விஜய் டிவி மகேந்திரனும், சுரேஷ் ஐயரும் நடத்திவந்த “சங்க்யா சொல்யூசன்ஸ்’ என்கிற நிறுவனத்துடன் கைகோத்தார். இதன் பின்னர் கட்சி நிர்வாகிகள்கூட அவரை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது'' என்கிறார்கள்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.வோடும் கமல் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவதாக செய்தி அடிபட்டது. இதை மறுத்தபடியே, உதயநிதி தரப்புடன் அவர் தரப்பு டீலிங் பேசியது. அதேநேரத்தில் தே.மு. தி.க.வோடு சேர்ந்து ஒரு கூட் டணியை அமைக்கும் முயற்சியும் நடந்தது. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான கலாமின் ஆலோசகர் பொன் ராஜ்,’"தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும்'” என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். ஆனால் அடிப்படைக் கட்டமைப்பே இல்லாத கட்சிகளான சரத்தின் சமத்துவ மக்கள் கட்சியோடும் பச்சைமுத்து வின் ஐ.ஜே.கே.வுடனும் கூட்டணி அமைத்தார் கமல். இதை அவரது கட்சியில் இருப்பவர் களே மனதளவில் ஏற்கவில்லை. "தே.மு.தி.க.வுக்கு தங்கள் தரப்பு அழைப்புவிட்டதே தனக்குத் தெரியாது' என்றும் கமல், தயங்காமல் சொன்னார்.
இந்த கூட்டணி குறித்து நம்மிடம் பேசிய ம. நீ.ம. பிரமுகர் ஒருவர், "மேற்கண்ட கட்சி களில், எங்கள் மையத்துக்கு வேலைசெய்யக் கூட எந்தத் தொகுதியிலும் ஆட்கள் இல்லை. அதனால் எங்கள் வேட்பாளர் கள் தனித்துவிடப்பட்டவர் களாய் நின்றார்கள். அவரவரும் தங்கள் காசைச் செலவழிக்கவேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இது குறித் தெல்லாம் தலைவர் கவலைப்படவில்லை. தான் மக்கள்முன் வேண்டுகோள் வைத் தாலே ஓட்டுக்கள் வந்து விழுந்துவிடும் என்று கனவு கண்டார். கட்சிக்கு உழைத்தவர்களையே அவர் உதாசீனம் செய்தார். தன் ஒருவருக்காகத்தான் கட்சி என்ற நினைப்பு அவருக்கு இருந்தது. அதனால்தான் இன்று நிர்வாகிகள் எல்லோரும் மனதளவில் விலகி நிற்க, கட்சியே கலகலத்துப் போய்விட்டது. ஆனாலும் அவர் மாறுவார் என்ற நம்பிக்கையில் இன்றும் இருக்கிறேன்''’என்றார் வருத்தமாய்.
இன்னொரு நிர்வாகியோ, "அவர், தனது சொந்த ஊரான பரமக்குடியில் நிற்பாரா? இல்லை சென்னையில் நிற்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஏற்கனவே பா.ஜ.க. பலமாக இருந்த கோவை தெற்குத் தொகுதியில் நிற்பதாக அவர் அறிவித்தார். அங்கும்கூட தனக்காக வாக்கு கேட்க ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்ளாதவர், தன்னை கட்சி நிர்வாகிகளிடம் இருந்தும் தொண்டர் களிடமிருந்தும் தனிமைப்படுத்திக் கொண்டார்'' என்கிறார் வருத்தமாக.
வாக்குச் சேகரிப்பு என்ற பெயரில் மக்கள் மத்தியில் கோவை தெற்கில் கமல் நடமாடினார். அங்குள்ள வீதிகளில் எளிமையாக ஆட்டோவில் பயணிப்பதற்காக, கோவைக்கு ஆடம்பரமாக அடிக்கடி விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் பறந்தார். அங்கே நட்சத்திர ஓட்டலில் தங்கி, தன்னை ஏழை எளிய மக்களின் பாதுகாவலன் என்று காட்டிக்கொண்டார். இதற்கான செலவை என் சொந்த பணத்தில் இருந்துதான் செய்கிறேன் என்றும் பிரச்சார மேடையில் நெஞ்சு நிமிர்த்தினார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியையும்கூட அவர் தனது பிரச்சாரக் களமாக்கியும், பெரிதாக வாக்கு அறுவடை நடக்கவில்லை.
வேட்பாளர்கள் தேர்வின்போதும், செல்வாக் குள்ளவர்களைத் தேடாமல், வசதியானவர்களுக்கே வாய்ப்பளித்தார் கமல். சில தொகுதிகளில் நிற்கக்கூட சரியான ஆள் கிடைக்காமல் அவர் திகைத்த நேரத்தில், சமத்துவ மக்கள் கட்சி, தான் பெற்றிருந்த 40 தொகுதிகளில் 3 தொகுதியைக் கமலிடம் திருப்பிக் கொடுத்து அவரது திண்டாட்டத்தை அதிகப்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது சீமானின் ’நாம் தமிழர்’ கட்சிக்கு இணையாக ஓட்டு வாங்கிய மக்கள் நீதி மய்யம், இந்த சட்டமன்றத் தேர்தலில் சராசரியாக 2.45 சத வாக்குகள் வாங்க, நாம் தமிழர் கட்சியோ, 6.85 சத வாக்குகளை வாங்கி, வெகு வேகமாக முன்னேறியிருக்கிறது.
"கட்சி நிர்வாகிகளையே கமல் மதிக்காததால்தான், இப்படியொரு தோல்வி' என்கிறார்கள் பலரும். குறிப்பாக, நடிகர் நாசரின் மனைவியும், ம.நீ.ம.வின் கட்டமைப்புப் பொதுச் செயலாளருமான கமீலா நாசர், கட்சி ஆரம்பித்த நாள்முதல் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இயங்கியவர். நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் நின்று ஏறத்தாழ 92 ஆயிரம் வாக்குகளை அறுவடை செய்துகாட்டினார்.
இந்தமுறை அவர் உடல் நிலை சரியில்லாத தன் மகனைக் கவனித்துக்கொள்ளவேண்டி யிருந்ததால், தனக்கு தன் வீடு இருக்கும் விருகம் பாக்கத்தில் சீட்டு கொடுக்கும்படி கமீலா, கமலிடம் கேட்டார். கமலோ, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து நிற்கும்படி சொல்ல... கமீலா தயக்கம் காட்டினார். இதனால், கமீலாவுக்கு சீட்டே கொடுக்காமல் ஒதுக்கினார் கமல். இதனால் அப்செட் ஆன கமீலா, தேர்தல்வரை அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் ராஜினாமா செய்தார். இதை ஏற்காத கமல், "நீங்கள் என்ன ராஜினாமா செய்வது? நானே உங்களைக் கட்சியில் இருந்து நீக்குகிறேன்'’என்று கமீலாவிடம் தன் அதிரடி முகத்தைக் காட்டினார்.
இதே பாணியைத்தான் இப்போதும் அவர் செய்திருக்கிறார். தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க, தலைமை நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய கமல், மிகுந்த கடுப்போடுதான் இருந்திருக்கிறார். அந்தத் தோல்வி தன்னைப் போல, தனது கட்சி நிர்வாகிகளுக்கும் காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர் கருதவில்லை. காயம்பட்ட கட்சியினருக்கு ஆறுதல் மருந்து தடவவேண்டிய கமல், அவர்கள்மீது மேலும் மேலும் சாட்டை வீசியதோடு, கட்சி நிர்வாகிகள் அனைவரையும் தோல்விக்குப் பொறுப்பாக்கி, அவர்களை ராஜினாமா செய்யச்சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவரிடமும் கமல் ராஜினாமாக் கடிதம் கேட்பதைப் பார்த்த, கட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன், தான் ஏற்கனவே தயார் செய்திருந்த ராஜினாமாக் கடிதத்தை கமலிடம் கொடுத்திருக்கிறார். அதில், ’"நாங்கள் சுட்டிக்காட்டியதை எல்லாம் நீங்கள் கேட்கவில்லை'” என்று, அவரையும் தோல்விக் கான காரணகர்த்தாவாக அதில் சுட்டிக்காட்டியிருந்தார். அதோடு அவர் வெளியில்வந்து ”"தலைவர் கமல் தனது அணுகு முறையை மாற்றிக் கொள்வது போல தெரியவில்லை, கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை'' என்று அறிவித்தார்.
இதைப்பார்த்துக் கடுப்பான கமல், "துரோகிகள் பட்டியலில் முதல்நபராக இருந்தவர் மகேந்திரன். தோல்வியின்போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழை''’என்று காட்டத்தைக் காட்டினார்.
பொன்ராஜோ, "இந்தக் கூட்டத்தில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன. கட்சியை சீரமைக்க ஏதுவாக, தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா கடிதம் கொடுத் திருக்கிறோம். கட்சியைச் சீரமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது''’என்று சொன்னார். மன வருத்தத்தில் இருந்த நிர்வாகிகள் எல்லோரும், கூண்டோடு கட்சியை விட்டுப் போய்விடலாம் என்று நினைத்த கமல் தரப்பு, அவர்களிடம் சமாதானம் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
தனது அரசியல் பிரவேசத்தின் மூலம் தமிழக அரசியலைக் குழப்பிய கமல், இப்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தானும் குழம்பிப் போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.