மாமல்லபுரத்துக்கும் சீனாவுக்கு மான தொடர்பு 1500 ஆண்டு பழமை யானது. இதைப்பற்றி வரலாறு பதிந்து வைத்திருக்கும் நினைவுகள் ஏராளம். அந்த நினைவைப் போற்றி, மேலும் அறிந்துகொள்ள 1956-ல் மாமல்லபுரம் வந்திருந்தார் சீனாவின் முன்னாள் அதிபர் சூ என்லாய். அப்போது நேரு பிரதமர்.

art

அதுநடந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருநாட்டு நட்புறவுக்காக சந்தித்துக் கொண்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வை வரலாற்றோடு ஒப்புமைப் படுத்தி, சென்னையைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் இரண்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார். (இராமேஸ்வரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் கலாமின் 80 வகையான படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். இன்றும் கலாம் நினைவிடத்தில் அதை மக்கள் கண்டு வியக்கின்றனர்.)

மாமல்லப்புரத்தின் ஐந்து ரதத்தின் முன்னே மோடியும், ஜின்பிங்கும் தற்காலத்தில் சந்தித்து உரையாடுவது போலவும், கடற்கரைக் கோவிலுக்கு அருகில் மன்னர் காலத்து உடையில், இரு தலைவர் களும் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்திருப்பது மாதிரியும் இரண்டு ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை தலைவர்களின் பார்வைக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர்.

art

இதுபற்றி ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரிடம் பேசியபோது, ""இரண்டு மிகப்பெரிய தலைவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய நிகழ்வு, அதுவும் நம்ம ஊரில் நடக்கிறது என்றதுமே ஓவியங்களை வரைய ஆர்வ மேற்பட்டது. மாமல்லபுரம் கலைத்துவமான பகுதி. லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளிக்கும் இடம். நம்முடைய அடையாளமும்கூட. எல்லா வற்றிற்கும் மேலாக எங்கு வேண்டு மானாலும் நடந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு, மாமல்லபுரத்தில் நடந்திருப்பதன் மூலம், நம்முடைய கலைநயம் உலகுக்கு வெளிச்ச மாகியிருப்பதே பெருமை. ஓவியங்களை டிஜிட்டல் முறை யில் வரைந்து ஹானிமுல்லே கான்வாஸில் பிரிண்ட் எடுத்து, மிக்ஸ் மீடியா மூலம் ‘ரீ டச்’செய்து உருவாக்கி னேன். 3.5 அடி நீளம், 2.5 அடி அகலம் கொண்ட ஃபிரேமில் இணைத்து அவற்றை தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டோம்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

சண்டிகர் மாநிலத்தில் இருக்கும் ராக் கார்டன், இந்தியாவில் சிறப்புவாய்ந்த பகுதி. தாஜ்மகாலுக்குப் பிறகு மக்கள் அதிகம் கூடும் இந்த பிரம்மாண்ட பகுதியை, நீக்சந்த் என்பவர் தனியாளாக உருவாக்கினார். இங்கு பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃப்ரன்கோயிஸ் ஹொல்லாண்டியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியபோதும் ஸ்ரீதர், இரு தலைவர்களையும் வைத்து பென்சில் ஓவியங்களாக வரைந்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம், நீக்சந்த் எனும் ஒப்பற்ற கலைஞனின் திறமைக்கு புகழ்சேர்ந்திருக்கிறது என ஸ்ரீதர் அந்த ஓவியத்துடன் குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்டு வியந்த ஹொல்லாண்டி, ஸ்ரீதரின் திறமையைப் பாராட்டி நன்றிமடலும் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

-ச.ப.மதிவாணன்