2004 டிசம்பர் மாதம் சுனாமிப் பேரலைகளால் நாம் பேரிழப்பை சந்தித்தபின்பே சுனாமி என்ற வார்த்தை நமக்கு தெரியவந்தது. அதேபோல், பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானியின் குழுமம் குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை வைத்ததன்மூலம் ஹிண்டன்பர்க் என்ற பெயர் இந்தியா முழுக்க பிரபலமானது.

அமெரிக்காவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனம், உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த தொழிலதிபர் கவுதம் அதானி யின் குழுமமானது, பங்குச்சந்தையில் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பளவுக்கு மோசடி செய்து, வரி ஏய்ப்பு, போலியான பங்கு விலையேற்றம் எனப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதை 2023, ஜனவரியில் 106 பக்கங்களில் சுமார் 720க்கும் மேற்பட்ட ஆதாரங்களைக் காட்டி, "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது' எனக் குறிப்பிட்டு அதிரடி அறிக்கையை வெளியிட்டது. அது இந்திய அரசியலில் மிகப்பெரிய புயலை எழுப்பியது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி, தடாலடியாகச் சரிந்து ஐம்பதாவது இடத்துக்கும் கீழாகச் சென்றார். மோடி அரசுக்கு எதிராக ரஃபேல் குற்றச் சாட்டுக்குப்பின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக ஹிண் டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் பார்க்கப்பட்டன.

Advertisment

dd

இவ்வளவு பரபரப்பைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் நிறு வனம், தற்போது திடீரெனத் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்வதாக அந்நிறுவனத்தின் தலைவர் நாதன் ஆண்டர்சன் அறிவித்திருப்பது உலக அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் நாதன் ஆண்டர்சன், "இந்த முடிவு எந்த வெளிப்புற அழுத்தம், உடல்நலப் பாதிப்பு போன்ற தூண்டுதல்கள் காரண மாக எடுக்கப்படவில்லை. எங்களின் பணிகளால் சுமார் 100 நபர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகளால் வழக்குகளை சந்தித்துள்ளனர். நாங்கள் அசைத்துப்பார்க்க நினைத்த நிறுவனங்களை அசைத்துப் பார்த்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அந்நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களால், அதானி குழுமம் அடிவாங்கியதோடு மட்டுமல்லாமல், இந்தியப் பங்குச்சந்தையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியானது. எனவே இதன் பின்னணியில் அதானி குழுமத்தின் சர்வதேச அழுத்தம் காரணமாக இருக்கலா மென்று கிசுகிசுக்கப்படுகிறது.

அதேபோல் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் தனது அதிரடி அறிவிப்புகளில் ஒன்றாக, உலக சந்தைகளில் இடையூறுகளை ஏற்படுத்த முயலும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித் திருந்தார். ஹிண்டன்பர்க்கின் அறிக்கைகளால் உலகின் பல்வேறு நிறுவனங்களின் மோசடிகளும் அம்பலமாகி பாதிக்கப்பட்டதால், ட்ரம்ப் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என அஞ்சியும்கூட இம்முடிவுக்கு வந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஹிண்டர்பர்க் மூடப்படுவது தெரிந்ததுமே அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு 5% உயர்ந்ததால், அதானி தரப்பினர் குஷியாக இருப்பதாகக் கூறப்படு கிறது.