ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பேட்டரி வாகனங்கள் கொள் முதல் செய்ததில் இமாலய ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரியால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த பேட்டரி வாகனங்களனைத்தும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சேலத்தைச் சேர்ந்த அருண் இந்தியன் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து மொத்தம் 179 வாகனங்கள், ஒரு வாகனத்தின் விலை 1.80 லட்சம் ரூபாய் என்ற அளவில் மொத்தம் 3.22 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் கிளைத்தலைவர் சிவராமன், பேட்டரி வாகனங்கள் கொள்முதல் தொடர்பாக டெண்டர் குறித்து வெளிப்படையான அறிவிக்கை செய்யப்பட்டதா? என்பது உள்ளிட்ட சில வினாக்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் கேட்டு, சேலம் மாநகராட்சிக்கு விண்ணப் பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி நிர்வாகம் அளித்திருந்த பதிலில், டெண்டர் குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சேலம் காந்தி ரோட்டிலுள்ள "அருண் மோட்டார்ஸ்' என்ற நிறுவனத்திட மிருந்து பேட்டரி வாகனங்களை கொள்முதல் செய்ததாக பதிலளித்திருந்தது.
இதையடுத்து நாம், காந்தி ரோட்டில் "அருண் மோட்டார்ஸ்' நிறுவனத்தை தேடியபோது, அப்பகுதியில் அப்படியொரு நிறுவனமே இல்லை. நம்முடைய விசாரணையில், பேட்டரி வாகனங்களை சப்ளைசெய்த நிறுவனத்தின் பெயர், அருண் மோட்டார்ஸ் அல்ல; அது, "அருண் இந்தியன் மோட்டார்ஸ்' என்பதை உறுதிப்படுத்தி னோம். ஆனாலும், சேலத்தில் அந்தப் பெயரிலும் எந்த ஒரு நிறுவனமும் இல்லை என்பது ஊர்ஜிதமானது.
சரி, அருண் இந்தியன் மோட்டார்ஸ் நிறுவனம் யாருடையது? இந்த நிறுவனத்தின் உரிமையாளர், அருண் நல்லதம்பி. அவர், கள்ளக் குறிச்சி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. காமராஜின் நெருங்கிய உறவினர். முகநூல் பக்கத்தில் காமராஜை தன்னுடைய மாமா என்றே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நெருக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தின் "நிழல் முதல்வர்' போல பவனிவரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி வட்டாரத்தில் நெருக் கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சேலம் மாநகராட்சியிடமிருந்து பேட்டரி வாகன கொள்முதல் ஒப்பந்தத்தை பெறுவதற் காகவே உருவாக்கப்பட்டதுதான் "அருண் இந்தியன் மோட்டார்ஸ்' என்ற லெட்டர்பேடு நிறுவனம். அருண் சப்ளைசெய்த வாகனங்களில் தலா 12 வோல்ட் திறன் கொண்ட 5 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்த ஒரே ஆண்டிற்குள் பேட்டரிகள் செயலிழந்து, பேரீச்சம்பழத்திற்குப் போடும் நிலைக்கு வந்துவிட்டன.
பேட்டரி வாகனங்களை தாராபுரத்தைச் சேர்ந்த, "பிரியம் இண்டஸ்ட்ரீஸ் அண்டு இன் ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்கிய அருண், ஒரு வாகனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய்க்குமேல் லாபம்வைத்து சேலம் மாநகராட்சிக்கு சப்ளை செய்துள்ளார். உண்மையில், உற்பத்தியாளரிடம் நேரடியாக கொள்முதல் செய்திருந்தாலும்கூட இதைவிட குறைந்த விலைக்கு வாங்கியிருக்கமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல், அரசியல் புள்ளிகள் கொள்ளை லாபம் பெறவேண்டும் என்பதற்காகவே இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருக்கிறார் சேலம் மாநகராட்சி ஆணை யர் சதீஷ்.
அருண் இந்தியன் மோட்டார்ஸ்தான், ஈரோடு மாநகராட்சி, திருச்செங் கோடு, நாமக்கல், பவானி ஆகிய நகராட்சிகளுக்கும் பேட்டரி வாகனங்களை சப்ளை செய்திருக்கிறது. ஆர்.டி.ஐ. தகவல்மூலம் பேட்டரி வாகன ஊழல் குறித்து நம் கவனத்திற்குக் கொண்டுவந்த சிவராமன் நம்மிடம் பேசினார்.
""தூய்மை இந்தியா திட்டத்தில் மட்டுமே அருண் இந்தியன் மோட்டார்ஸ் நிறுவனத்திட மிருந்து பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஸ்மார்ட் சிட்டி, கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியின் மூலமும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் பேட்டரி வாகனங்களை வாங்கியிருக்கிறது.
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியில் பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்ததில் முறையான டெண்டர் விடப்படவில்லை. அப்படியே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருந் தால், டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் பெயர்களையும், விலைப்புள்ளி விவரங்களையும் வெளியிட வேண்டும். தரமற்ற வண்டிகளை வாங்கியதன் மூலம் ஆளுங்கட்சி புள்ளிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் கூட்டாக மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அருண் இந்தியன் போன்ற போலி கம்பெனி பிரச்சினை மட்டுமின்றி பிரியம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே தமிழகம் முழுக்க இதுவரை 4000 பேட்டரி வண்டிகளை சப்ளை செய்துள்ளது. அதன் தரத்தையும் ஆய்வு செய்யவேண்டும்,'' என்றார்.
இதுதொடர்பாக, அருண் இந்தியன் மோட்டார்ஸ் நிறுவன அதிபர் அருணிடமும் மாநகராட்சி ஆணையர் சதீஷிடமும் விளக்கம்பெற, அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து முயற்சித்தோம். ஆனாலும் அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. பேட்டரி வாகனம் தொடர்பாக பேச வேண்டும் என்று சதீஷுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினோம். அதற்கும் பதிலில்லை.
-இளையராஜா