தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களை அவரது மனைவி துர்கா ஸ்டாலின், இயல்பான பேச்சு வழக்கு நடையில் எழுதி வெளிவந்துள்ள 'அவரும் நானும் பாகம் 2' நூல், ஜூலை 21, திங்களன்று, சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் வெளியிடப் பட்டது. நூலினை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட, முதல் பிரதியை டாஃபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை துர்கா ஸ்டாலினின் பேரன்கள் இன்பநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா, நிலானி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நக்கீரன் ஆசிரியர், உயிர்மை பதிப்பக உரிமையாளர் கவிஞர் மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர் லோகநாயகி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அன்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
விழாவில் ஏற்புரையாற்றிய துர்கா ஸ்டாலின், "பத்திரிகைகளில் வெளிவந்த இரண்டு பாகங்களுக்கு பிறகு, என்னுடைய கணவர் முதலமைச்சரான பிறகான நிகழ்வுகளை புதிய அத்தியாயங்களாக இதில் சேர்த்துள்ளோம். இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான். மனப்பூர்வமாக, முழுமையாக எனக்கு ஆதரவளித்து, "நீ எழுது துர்கா' எனச்சொல்லி உற்சாகப்படுத்திய எனது கணவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்நூல், என் கணவர் பற்றியும், என்னை பற்றியும் எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்'' என்று குறிப்பிட்டார்.
நூலின் தொடக்கத்தில் "எல்லோருக்கும் வணக்கம்... எல்லோரும் எப்படி இருக்குறீங்க?'' என நம் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு தொடங்கும் துர்கா ஸ்டாலினின் எழுத்து நடை, தனது அனுபவத்தை கதையாக சொல்லும் சகோதரியின் உணர்வினை நமக்கு கடத்துகிறது. இந்த இரண்டாம் பாகத்தில், கலைஞருக்கு 2016ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு, அவ்வளவு காலம் உற்சாகமாகப் பேசிச்சிரித்த கலைஞர், சிகிச்சைக்கு பிறகான நாட்களில், பார்வையாலும், சிறு அசைவுகளாலும் மட்டுமே குடும்பத்தினரோடு பேசும் நிலை ஏற்பட்டதை மன வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். அப்படியான நிலையிலும், "அப்பா முரசொலிக்கு போகலாமாப்பா?'' என்று கலைஞரிடம் மு.க.ஸ்டாலின் கேட்கும்போது, அவ்வளவு நேரம் கைகால் அசைக்காமல், தலை யசைக்காமல் உட்கார்ந்திருந்த கலைஞர், முரசொலி என்ற பெயரைக் கேட்டதும் ஆர்வமாகத் தலையாட்டிய செய்தியை வாசிக்கும்போது, "பத்திரிகையாளர்' கலைஞர் நெகிழவைக்கிறார். அதேபோல், தனது பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல வீட்டுக்கே வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மேஜிக் போல கலைஞரிடம் திடீரென ஏற்படும் உற்சாகத்தையும் ஆச்சர்யத்தோடு விவரிக்கிறார்.
கலைஞரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடையும் இறுதிக்காலம் குறித்த அத்தியாயத்தில், கலைஞர் குறித்த ஒரு விஷயத்தை துர்கா ஸ்டாலின் நினைவுகூர்ந்து எழுதுகிறார். ஒருமுறை, "கலைஞரிடம் பிடித்த விஷயம் என்ன?'' என்று ஜெயலலிதாவிடம் பத்திரிகை யாளர்கள் கேட்க, "அவர்கிட்ட இருக்கிற குடும்பப் பாசம்'' என்று ஜெயலலிதா சொன்னதையும், "ஜெயலலிதா பத்தின உங்க கருத்து என்ன?'' என்று கலைஞரிடம் கேட்டதற்கு, 'பாசத்துக்காக ஏங்குகிறவர்'' என்று கலைஞர் சொன்னதையும் குறிப்பிட்டவர், உண்மைதான்... ஜெயலலிதா பாசத்துக்காக ஏங்கியிருக்கக்கூடும்னு ஒரு பெண்ணா என் மனசும் சொல்லுது என்று துர்கா ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.
தங்கள் குடும்பத்துக்கு எதிராக எத்தனையோ கொடுமைகளை அதிகார போதை யில் ஜெயலலிதா செய்திருந்தபோதும், சக பெண்ணாக ஜெயலலிதாவைப் பார்த்து பரிதாபப்படும் குணத்தால் துர்கா ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். கலைஞரின் மரணத்தின்போது, அந்த துயர சூழலை, மெரீனாவில் நல்லடக்கம் செய்யும்வரை நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் கண்ணீர்த் துளிகளோடு விவரித்திருக்கிறார்.
ஒரு பெரிய அரசியல் குடும்பத்தில் மருமகளாக இருக்கும்போதும், தனது அப்பாவின் ஆசையான ஏரோப்ளேன் பயண அனுபவத்தை அவருக்கு தர இயலாத வருத்தத்தை பதிவு செய்தவர், தனது அம்மாவின் ஆசையான காசி யாத்திரையை நிறைவேற்றிய அனுபவத்தை மன நிறைவோடு பகிர்ந்துள்ளார்.
தனது 60வது பிறந்த நாளின்போது, தான் பிறந்த ஊருக்கு சென்று தனது சொந்தங்களை பார்க்க வேண்டுமென்று இவர் மனதுக்குள் நினைக்க, அவருக்கே தெரியாமல், சொந்தங்கள் அனைவரையும் சென்னைக்கே வரவழைத்து, 60வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியதை ஆச்சர்யத்தோடு விவரித்துள்ளார். அதைப் பற்றி எழுதும்போதும் ஓர் குடும்பத்தலைவியாக, யாராவது தனக்கு ரிட்டயர்மெண்ட் கொடுத்து, வீட்டுப்பொறுப்பை எடுத்துக்கொள்ள மாட் டார்களா என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய போது, இந்திய குடும்பத்தலைவிகளின் உணர்வை பிரதிபலிக்கிறார் துர்கா ஸ்டாலின். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்து மருமகளாக, தமிழக முதல்வரின் மனைவியாக, பெரியதொரு குடும்பத்தின் தலைவியாக எனப் பன்முகத் தன்மையோடு விளங்கும் துர்கா ஸ்டாலின், தனது வாழ்வியல் அனுபவங்கள் ஒவ்வொன்றையும் பேச்சுவழக்கில் ஈர்ப்போடும், சுவா ரஸ்யத்தோடும் அளித்திருப்பது இந்நூலின் சிறப்பு!
இந்நூலை உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் மனுஷ்யபுத்திரன் மிகவும் அருமையாக தயாரித்துள்ளார்.