2022, செப்டம்பர் 7ஆம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நன்கு ஷேவிங் செய்த அமுல் பேபி கன்னத்துடன் தனது நடைபயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, மொத்தம் 135 நாட்கள் இந்தியா முழுக்க, 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஜனவரி 30ஆம் தேதி, காஷ்மீரில் ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நிறைவு செய்யும்போது, அடர்ந்து வளர்ந்திருந்த தாடியுடன் காணப்பட்டார். இந்த மாற்றம்... வெறுமனே அவரது முகத்தில் மட்டுமல்ல, அவரது அரசியலிலேயே ஒரு முதிர்ச்சியான தன்மையைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிந்தது.
ஜவஹர்லால் நேருவுக்கு இருந்த, செல்வச்சீமான் வீட்டுப்பிள்ளை என்ற பிம்பம், அவரது கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி மீதும் விழுந் திருந்தது. அவர், தேர்தல் காலங்களில் ஏழைகளின் வீடு களுக்குச் சென்று உணவருந்தியதாலோ, எளிய மக்களைச் சந்தித்ததாலோகூட அந்த பிம்பத்தில் மாற்றம் வரவில்லை. ஆனால் அவரது நடைபயணம், அவர்மீதான எலைட் பிம்பத்தை சுக்கலாக நொறுக்கியது. சிற்றோடைகளாகக் கிளம்பிய நீர், தொடர்ந்து பயணிக்க, பல சிற்றோடைகள் சேர, ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதைப்போல், இந்தியா முழுக்க கால்கடுக்க அவர் நடக்க நடக்க... "அட, நமக்காகத்தான் இவர் நடக்கிறார்... நம் இந்தியாவின் எதிர்காலத்துக் காகத்தான் நடக்கிறார்...' என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியதால், எளிய மனிதர்கள் பலரும் ஆர்வத்தோடு இணைந்துகொண்டார்கள். கொட்டும் பனியினூடாக அடர் தாடியோடு அவர் ஆற்றிய உரை, தேசமெங்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடைபயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆ.கோபண்ணாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
திட்டமிட்டபடி இலக்கை எட்டியதுபோல், இந்திய ஒற்றுமை நடைபயணம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருக்கிறதா?
கடந்த 2014ல் பல வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி, அவற்றை நிறைவேற்றுவதற்கு மாறாக, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துகிற அரசியலைச் செய்துவருகிறார். ஆனால் புல்வாமா தாக்குதல் மற்றும் மதரீதியான அணுகுமுறைகள் காரண மாக 2019ல் மீண்டும் வெற்றியைப் பெற்றார். மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றார். அப்படியானால் கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்க வில்லை. விலைவாசி உயர்வு, பண வீக்கம், சமூக நல்லிணக்கச் சீர்குலைவு, மாநில உரிமைகள் பறிப்பு என நிறைய இருக்கு. பா.ஜ.க.வின் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக, மக்களை ஒன்றுபடுத்து வதற்காக ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார்.
அவருடைய நடைபயணத்தில் எந்த சிறு அசம்பாவிதமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். இது ஒரு கட்சியினுடைய நடைபயணம் அல்ல, நாட்டு மக்களின் நலன் கருதி நடத்தப்பட்ட நடைபயணம். இதில், அரசியல் வாதிகள் மட்டுமல்லாமல், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் ராணுவத் தினர், விவசாயப் பிரிவினர், நெசவாளர்கள், ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தலித் இயக்க அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, பலதரப்பட்ட மக்களுடன் ஓர் உரையாடலை ராகுல் காந்தி நிகழ்த்தியிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களோடு நெருங்கிப் பழகி, மக்களோடு உரையாடி, மக்களின் கருத்தை அறிகின்ற ஒரு முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றிருக்கிறார். மக்கள் பங்கெடுக்கின்ற, மக்களோடு பங்கெடுக்கின்ற ஒரு ஜனநாயகத்தை ராகுல் காந்தி உருவாக்கியிருக்கிறார். பண்டித நேருவின் வழிவந்த இவர், மிகப்பெரிய ஜனநாயகவாதி என்பதை நிரூபித்துவிட்டார். காந்தியடிகள், தண்டி யாத்திரை, நவகாளி யாத்திரை என நடந்து நடந்து தன்னை வருத்திக்கொண்டு மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த அணுகுமுறையைப் பின்பற்றி இன்று ராகுல்காந்தி, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த, மக்களை ஒன்றுபடுத்தும் அரசியலுக் காக இந்த பயணத்தை செய்திருக்கிறார்.
அவருடைய நடைபயணத்தில் மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. ஊடகத்தில் இந்த செய்தி வரவிடாமல் தடுக்க என்னென்னவோ செய்தாலும், சுதந்திரமான சமூக ஊடகங்களின் மூலம் அவரது நடைபயணச் செய்தி மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. நாள்தோறும் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை அறிவதென, இந்தியாவைக் கண்டுணர்கிற பயணமாக இருந்தது. நடைபயணத்தின் மூலம் இந்தியாவை ராகுல் காந்தி தரிசனம் செய்திருக் கிறார். இந்தியாவை பன்மடங்கு புரிந்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற நடைபயணத்தை பா.ஜ.க. தலைவர்கள் யாரும் செய்ய முடியுமா? என்று அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். இந்த நடைபயணத்தை மோடியோ, அமித்ஷாவோ, ராஜ்நாத் சிங்கோ செய்ய முடியாது.
ராகுல் காந்தியின் நடைபயணம் நிறை வடைந்துவிட்டது. இனி அடுத்து?
அகில இந்திய காங்கிரஸ் கட்சி, அனைத்து மாநில காங்கிரஸ் கட்சிக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதன்படி, இந்திய ஒற்றுமை நடை பயணம் நிறை வடைந்த நாளி லிருந்து, "கை யோடு கை கோர்ப்போம்! -மாபெரும் பரப் புரை இயக்கம்' என்ற திட்டத்தின் படி, மாவட்டம், வட்டம், நகரம், பேரூர், கிராமம், வாக்குச்சாவடி அளவில், பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை இரு மாத காலத்துக்கு வினியோகம் செய்யவுள்ளோம். அதேபோல் பிரியங்கா, ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதேனுமொரு நகரத்தில் மகளிர் பேரணிக்கு தலைமைதாங்கி நடத்தப்போகிறார். மேலும், சமூக ஊடகங்களில் நடைபயணத்தின் போதான ராகுலின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதென அடுத் தடுத்த செயல்பாடுகள் தொடர்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த நடைபயணத்தால் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா?
காங்கிரஸ் கட்சிக்கு இந்த நடைபயணத்தால் மிகப்பெரிய அளவிலான புத்துணர்ச்சியும், 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை அகற்ற முடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. யாராலும் வெல்லமுடியாத அசுர பலத்துடன் மோடி இருக்கிறார் என்ற பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி இனியாவது தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறதே?
காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகளில் அவருக்கு சில விமர்சனங்கள் உண்டு. அவர் எதிர்பார்த்தபடி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு ஈடுகொடுத்துச் செயல்படவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில், தன்னந்தனியாக பா.ஜ.க.வோடு போர் புரிந்தேன்... பிரச்சாரம் செய்தேன்... களத்தில் நின்று போராடினேன் என்று அவர் சொல்லும்படியாக இருந்தது. தனக்கு யாரும் உதவவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். அதன்காரணமாக சில நேரங்களில் அவர் ஒதுங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அதை யெல்லாம் கடந்து, காங்கிரஸ் கட்சியும், அவரும் மக்களோடு மக்களாகக் கலந்துள்ள சூழலை இந்த நடைபயணம் ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவரென்று சொல்ல மாட்டார்கள். மக்கள் தலைவர் என்று சொல்வார்கள். அதைப்போல, காங்கிரஸ் கட்சிக்கு அப்பால், மக்களால் போற்றப்படுகிற ஒரு மக்கள் தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்திருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா?
2024 தேர்தலில் ராகுல் காந்தியின் ஒரே நோக்கம், மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே. யார் பிரதமர் என்பது குறித்து அவர் கவலைப்படவில்லை. அதற்கான அணுகுமுறையும் அவரிடம் கிடையாது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்ட பிறகு மக்களவை உறுப்பினர்களில் யார் பிரதமருக்குத் தகுதியானவரோ, அவரே தேர்வு செய்யப்படுவார்.
இந்த நடைபயணம், எதிர்க்கட்சிகளை காங்கிரஸின் பக்கம் திருப்பியிருக்கிறதா?
இந்த நடைபயணத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மோடியை எதிர்க்கும் துணிவை மாநில அளவிலான எதிர்க்கட்சிகளுக்கு உண்டாக்கியிருக்கிறது.
இந்திய ஒற்றுமை நடைபயணம், ஆளுங்கட்சியையே அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது உண்மை. இதன் பலனாக, இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுப்பட்டு, இந்திய ஜனநாயகம் செழிக்கட்டும்!
-தெ.சு.கவுதமன்