ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து அந்த அமைப்புகள் செயல்படத் தொடங்கி முழுசாக ஒரு வருடம்கூட கழியவில்லை. ஆறு மாதத்திற்குள்ளேயே, தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்களின் உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீடு முறைகேடு போன்ற விவகாரங் களைப் பற்றி மாவட்டத் தலைவியைக் கண்டித்து மன்றக் கூட்டத்திலேயே கொதிப்போடு குற்றச்சாட்டை முன்வைக் கிறார்கள்.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்தின் தலைவியாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. 14 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டக் கவுன்சிலை தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றியுள்ளன. கடந்த மார்ச் 11 அன்று தென்காசியில் கூடிய மாவட்டப் பஞ்சாயத்துகளின் உறுப்பினர்களின் கூட்டம் ஆரம்பித்து சற்று நேரத்திற்குள் அனலடிக்கத் தொடங்கிவிட்டது.
கவுன்சிலர்களின் உரையை அடுத்து கையில் அஜண்டாவுடன் சூடாகப் பேச ஆரம்பித்த உறுப்பினர் கனிமொழி (இவரும் தி.மு.க. கவுன்சிலர்) மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியிடம், “"நீங்கள் அவையின் உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே பணிகளுக்கான நிதியை இஷ்டம்போல் ஒதுக்கியிருக்கிறீர்கள். அதற்கான அஜண்டா மன்றத்தில் வைக்கவோ, விவாதிக்கவோ இல்லை. உறுப்பினர்களான எங்களுக்கே தெரியாமல் தலைவி ஒரு கோடியே 71 லட்சத்தை முறைகேடாக ஒதுக்கி யிருக்கிறார்''’என்று பேச... அதிர்ந்துபோன 12 உறுப்பினர்களும் நிமிர்ந்துவிட்டனர். கோரஸாகவே "அஜண்டா வைக் காமல் தீர்மானமில் லாமல் எப்படி ஒதுக்கீடு செய்யலாம்'' என்று மொத்த உறுப்பினர் களும் குரலெழுப்ப, பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கூட்டத்தின் பாதியில் வேகமாக வெளியேற கூட்டம் முற்றுப்பெறாமல் அமளியில் முடிந்திருக்கிறது.
உறுப்பினர் கனிமொழி நம்மிடம்... "உறுப் பினர்கள் கூட்டத்தில 2021-22-ஆம் ஆண்டுக் கான பஞ்சாயத்துக்களின் வளர்ச்சிக்கான நிதி யாக 2.75 கோடி மத்திய அரசிடமிருந்து வந்திருக் குன்னு தலைவி அறிவிச்சாங்க. கிராமங்களின் சாலை, சுகாதாரம், வாய்க்கால் தடுப்புச் சுவர் போன்ற பணிகளுக்கான நிதி அது. ஆரம்பத்தில் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் பேசிய தலைவி, ஒவ்வொரு உறுப்பினர்களின் பஞ்சாயத்திற்கு ரூ.20 லட்சம் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவ தாகச் சொன்னார். ஆனா அடுத்த கூட்டத்தி லேயே தலைவியான தனக்கு இன்னோவா கார் வேணும். அதுக்கு 30 லட்சம் ஒதுக்கப்பட்டு வாங்கினதால, உறுப்பினர் ஒருவருக்கு 14 லட்சம் மட்டுமே ஒதுக்கப்படும்னு அறிவிச்சார்.
அடுத்து 12.01.2022-ல் நடந்த கூட்டத்தில, உறுப்பினர்கள், வார்டு பணிகள் பற்றி சரியா தராததால மத்திய அரசு பண்ட் ரூ.2.75 கோடியும் திரும்பிப் போயிருச்சின்னு ஒரு குண்டைப் போட்டார். உறுப்பினர்களனைவரும் பணிகள் பற்றிய ரிப்போர்ட் குடுத்தும், கவனிக்கப்படாத தால் தலைவியோட கவனக்குறைவால வந்த நிதி திரும்பப் போகவேண்டியதாயிருச்சி.
11.03.2022-ல கூட்டம். அப்ப வைக்கப்பட்ட அஜண்டாவுல ரெண்டு பொறுப்புக மட்டுந்தான். வளர்ச்சிப் பணிகள சரியா குறிப்பிடல. நாம 2021-2022-க்கானதை சரியா தேர்வுசெய்யணும்னு ஒரு அஜண்டா. அப்ப எனக்கு ஒரு டவுட் இருந்திச்சி. போன தீர்மானம் பற்றிய நகலை கேட்டப்ப, குடுத்தாங்க. அதை நான் படிச்சப்ப ஷாக்காயிட்டேன். நாங்க அந்தத் தீர்மானத்தில கையெழுத்துப் போட்டதுக்குமேல, முன்கூட்டியே ஒரு கோடி 71 லட்சம் கிணறுகளுக்கான பணிகளுக்காக ஒதுக்கப்பட்டதுன்னு தலைவியே தன்னிச்சையாக எழுதி ஒதுக்கியிருக்காக. ரூ 1.71 கோடி கிணறுகளுக்கு ஒதுக்கப் பட்ட நிதி எப்படி வந்திச்சின்னு எங்களுக்குக் குழப்பம்.
இந்த நிதி எப்படி வந்தது, எங்களுக்குத் தெரியாம எப்படி ஒதுக்கப்பட்டதுன்னு பதில் சொல்லுங்கன்னு உறுப்பினர்கள் எல்லோரும் கேட்டோம். அந்த நிதி மாநில அரசிடமிருந்து வந்ததுன்னு தலைவி சொன்னதும். நிதி வந்தது பற்றி மன்றத்தில வெளிப்படையா வைக்கணும். உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தணும். அஜண்டா மூலம், உறுப்பினர் ஒப்புதலோட நிதி ஒதுக்கணும்றதுதான விதி. நீங்க மன்றத்தில வைக்காம, தெரியப்படுத்தாம அஜண்டாயில்லாம உங்க இஷ்டம்போல முறை கேடா ஒதுக்கியிருக்கீக. நிதி வந்ததைத் தெரியப்படுத்தலன்னு உறுப்பினர்களனைவரும் சூடாயிட்டாக.
அதுலயும் 94 லட்சம் மீதமிருக்கு. அது பத்துன விவரம் தெரியல. நிதி வந்ததைத் தெரிவிக்காம, அஜண்டாயில் லாம, விவாதிக்காம கிணறுகளுக்காகவே ஒதுக்கப்பட்ட தீர்மானத்த ரத்து பண்ணுங் கன்னு உறுப்பினர்கள் கேட்டதுக்கு, முடியாதுன்னு சொல்லிட்டுப் பாதியிலேயே தலைவி எந்திரிச்சிப் போயிட்டாக''’என்று படபடத்தார் கனிமொழி.
துணைத்தலைவரான உதயகிருஷ்ணனோ, "உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தோடு ஒதுக்கீடு செய்யவேண்டும். அதை விடுத்து தன்னிச்சையாகச் செயல்படுவது சந்தேகத்திற்குரியதாகும். தலைவியின் செயல்பாடு பற்றியும் தீர்மானத்தை ரத்துசெய்யவும் கலெக்டரிடம் தெரியப்படுத்தி புகார் மனு கொடுத் திருக்கிறோம்''’என்கிறார்.
இதுகுறித்து விளக்கத்திற்காக நாம் மாவட்ட பஞ்சாயத்து. தலைவி தமிழ்ச்செல்வியிடம் கேட்டதில், "திரும்பிப் போன மத்திய அரசு நிதியில் வரை யறுக்கப்பட்ட நிதி, வரையறுக்கப்படாத நிதின்னு இருக்கு. அதுல வரையறுக்கப்பட்ட நிதியை முறையா ரிட்டர்ன் போன நிதிய திரும்ப குடுத்திட்டாக. கிணறுகளுக்கானது அஜண்டாவா வைச்சு தீர்மானம் போட்டுத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடையில நான் எழுதல. எம்மேல அபாண்டமா குற்றச்சாட்டு சொல்றாக. நான் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கிறேன்''’என்றார்.
கிணத்தைக் காணோம் கதைதானா கிணறுகளுக்கு ஒதுக்கிய நிதி?!