மிழ்நாடு இப்படியொரு கொடூரத்தை இரண் டாவதாகக் கண்டிருக்கிறது. ஒன்று, 1992 மகாமகம், இன்னொன்று கரூரில்... நடிகரும், த.வெ.க. தலை வருமான விஜய்யை பார்க்க செப்டம்பர் 27 இரவில்  திரண்ட கூட்டத்தில் 41 பேர் பலியாகியிருக்கிறார் கள். குழந்தைகள், சிறுவர் -சிறுமியர் -பெண்கள் உள்பட இந்த 41 உயிர்கள் பலியான நிகழ்வு, 1992 பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடந்த மகாமக நிகழ்வின்போது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் அங்கே குளிக்கச் சென்ற நிலையில், ஏற்பட்ட நெரிசலால் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியான சோக நிகழ்வை வேதனையுடன் நினைவுபடுத்துகிறது.

Advertisment

அப்போது நடந்தது, ஓர் ஆன்மிகத் திருவிழா வில் முதலமைச்சர் பொறுப்பின்றி, சுயநலத்துடன் பங்குபெற்றதன் விளைவு. இப்போது கரூரில் நடந் திருப்பது விஜய்யும் அவரது கட்சி நிர்வாகிகளும், ரசிகர் கூட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவு. த.வெ.க. தலைவர் விஜய்யின் ஒவ்வொரு கூட்டத்திலும் நெரிசலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு ரசிகர்கள் அவதிப் படுவது வழக்கமாகவே உள்ளது. அவர் நடத்திய மாநாடுகளிலும் இதே நிலைமைதான்.

Advertisment

சனிக்கிழமைதோறும் இரண்டு மாவட்டங் களில் பிரச்சாரம் என்கிற விஜய்யின் வீக்எண்ட் அரசியல் இன்னும் மோசமான சூழலையே உருவாக் கியது. விஜய் பிரச்சாரத்திற்காக அவரது கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த இடங்கள் அனைத்துமே மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் உள்ள பகுதிதான். திருச்சியில் அவர்கள் கேட்டு, காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்ட காந்தி மார்க்கெட்டில் பேசுவதற்காக ஏர்போர்ட்டிலிருந்தே கூட்டம் கூட்டி, வழியில் பலவற்றையும் உடைத்து நொறுக்கித்தான் அவரது ரசிகர் பட்டாளம் 2000 புல்லட் முன்செல்ல, காந்தி மார்க்கெட்டிற்கு விஜய்யை அழைத்து வந்தது.

அனுமதி கேட்கின்ற நேரம் ஒன்றாகவும், அதிலிருந்து 5 அல்லது 6மணி நேரம் கழித்து அந்த இடத்திற்கு வருவதும், தனக்காக மக்கள் சோறு- தண்ணீர் இல்லாமல் காத்திருக்கட்டும் என்கிற விஜய்யின் ஹீரோ மனப்பான்மையும், எப்படியாவது அவரை ஒருமுறை பார்த்துவிட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடலாம் என்கிற அவரது ரசி கர்களையும், பொதுமக்களையும், குறிப்பாக குழந் தைகளுடன் வரும் பெண்களையும் திரட்டி வைத்து, சினிமா டயலாக் பாணியில் மற்ற அரசியல் கட்சி களுக்கு எதிராக -குறிப்பாக ஆளுங்கட்சியைக் குறி வைத்து பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, சில நிமிடங் களில் அங்கிருந்து செல்வது விஜய்யின் வழக்கம்.

Advertisment

கரூரிலும் பலமணி நேரம் தாமதாமாக வந்தார். அதற்குமுன் நாமக்கல்லில் திரண்ட கூட்டத்தில் ஒரு பகுதியை தன் பஸ்ஸூக்கு   பின்னால் வரச்செய்தார். எல்லாம் சேர்ந்து நெரிசலை ஏற்படுத்த, அவரது ரசிகர்கள், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்ததால் மின்சாரம் தடைப்பட, விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் முன்னாடியே பலர் மயங்கிவிழ, ஆம்புலன்ஸ்களில் அவர்கள் ஏற்றப்பட்டனர். அந்த ஆம்புலன்ஸையும் விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கியது இன்னும் கொடுமை.

நிலைமை மோசமாவதை அறிந்ததும் அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டார் அரசியலில் ஹீரோ வேஷம் கட்டிய விஜய். 41 உயிர்கள் பலியானது பற்றி வாய் திறக்காமல் பனையூர் பங்களாவுக்கு சென்றதை இதயமுள்ள யாரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். 

கரூர் பலிகளுக்குப் பின் ஏதாவது சதி இருக்கிறதா என்பதை நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் கண்டறியும். ஆனால், பொறுப்பற்ற தலைமையும், கட்டுப்பாடற்ற கூட்டமும் கொண்ட விஜய்தான், இந்தப் பலிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர். ஏற்க மறுத்தால் அவர் தலைவரல்ல... வெறும் நடிகர்தான்.


-ஆசிரியர்