ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம் எனப்படும் இணையவழியாக திரைப்படங்களை வெளியிடும் திட்டத்திற்கு எதிராக திரைப்பட உரிமையாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவருவதால்.... இண்டஸ்ட்ரியில் பரபரப்பான நிலைமையே நிலவுகிறது.
முன்பு... இப்படியான புது முயற்சியை கமல் முன்னெடுத்து... வம்பு-வழக்கு என ஆகி... கமலின் முயற்சி கை கூடவில்லை. இப்போது இந்த டிஜிட்டல் பிளாட்ஃபார்மில், தான் தயாரித்து, ஜோதிகா நடித்த "பொன்மகள் வந்தாள்' படத்தை திட்டமிட்டபடி வெளியிடுகிறார் சூர்யா. அதனால்.... “இனி சூர்யா படங்களை தியேட்டர்களில் வெளியிடமாட்டோம்’என தியேட்டர் சங்கத்தினர் சொல்லிவருகிறார்கள். இந்தப் பிரச்சினையில் சுமுக முடிவுகளை ஏற்படுத்த... தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முயற்சியெடுத்து வருகிறார்.
தயாராக இருக்கும் படங்களுக்கான முதலீட்டு வட்டி ஏறி நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை... கொரோனா ஊரடங்குக்குப் பின்... தியேட்டர்கள் திறக்கப்படும்போது... தியேட்டர்களில் தான் படங்களை ரிலீஸ் செய்யவேண்டும்...’என்கிற தியேட்டர்காரர்களின் விடாப்பிடியான எண்ணத்திற்கு... ஹீரோக்கள் பதில்தர அச்சப்படுகிறார்கள். வாய்மூடி மௌனம் காக்கிறார்கள்.
காரணம்....
தியேட்டர்களில் படம் வெளியாவதும், ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதும்தான்... ஒவ்வொரு ஹீரோவின் மாஸ் என்ன என்பதை காட்டும். தங்கள் மாஸிற்கு மாசு வந்துவிடக் கூடாது என்பதால்... அடக்கி வாசிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு...
தனது’"மாஸ்டர்' படம் தியேட்டர்களில்தான் வெளியாக வேண்டும். அதுவரை ஏற்படும் தாமதத்தால் உண்டாகும் நஷ்டத்தை தான் ஏற்பதாக விஜய் சொல்லியுள்ளாராம். (மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய்யின் மாமா முறை உறவினர் என்பதால்... கிட்டத்தட்ட இது விஜய்யின் சொந்தப் படம்தான். (அதனால்தான் தனது பட ஆடியோ ரிலீஸ் விழாவில்... துணிந்து அரசியல் பேசி... சர்ச்சையை உண்டாக்கும் விஜய்... மாஸ்டர் விழாவில் சர்ச்சையாக பேசவில்லை) இப்படித்தான் ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களும் இந்த விஷயத்தில் கருத்துச் சொல்லாமல் மௌன ராகம் பாடுகிறார்கள்.
சினிமாவில் எப்போதுமே கதாநாயகிகள் நம்பர்-2 தான். ஆனால்... தியேட்டர்காரர்களுக்கு பதிலடிதர... கதாநாயகிகளையே முன்னிறுத்தி இருக்கிறார்கள்.
ஜோதிகா நடித்த "பொன் மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷ் நடித்த "பென்குயின்' ஆகிய தமிழ்ப் படங்களும், இந்தியில் வித்யா பாலன் நடித்த "சகுந்தலாதேவி', டாப்ஸி நடித்த "தப்பட்', ஊர்வசி ரட்லா நடித்துள்ள "வெர்ஜின் பானு ப்ரியா' ஆகிய படங்களும், கன்ன டத்தில் ராஹினி நடித்த "லா'’ திரைப்படமும், மலையாளத்தில் அதிதிராவ் நடித்த "சூஃபியும் சுஜாதாயும்' படமும் தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஹாலிவுட் நடிகை மியா நடித்துள்ள "க்ளைமாக்ஸ்'’ படமும் இணைய தளத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது. இதுதவிர இந்தியில் அமிதாப் நடித்த ஒரு படமும், கன் னடத்தில் "ஃப்ரெஞ்ச் பிரியாணி' என்கிற படமும் வெளியாகிறது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களில் 90 சதவிகித படங்கள் பிரபல கதாநாயகிகள் நடித்த படங்கள். அதுமட்டுமின்றி... கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள “ஹீரோயின் சப்ஜெக்ட்’’ படங்களாகும்.
இப்படி கதாநாயகிகளை ஓ.டி.டி. களத்தில் இறக்கி பல்ஸ் பார்க்கிறார்கள்.
கதாநாயகிகளும் தைரியமாகவே ஓ.டி.டி.க்கு ஆதரவாக பேசிவருகிறார்கள்.
இதுதாங்க... சினிமாவோட எதிர்காலம். ஓ.டி.டி. பார்வையாளரா இருப்பது வசதியாவும், ஈஸியாவும் இருக்கு. வேண்ணா பாருங்க... இன்னும் கொஞ்சநாள்ல எல்லாருமே ஓ.டி.டி.க்கு வரப்போறாங்க... என சல்மான்கானின் மும்பையை அடுத்த பண்ணைவீட்டில் வீடடங்கலில் இருந்தபடி சவுண்ட்டாக பேசுகிறார் ஜாகுலின் ஃபெர்ணாண்டஸ்.
""மாறிவரும் காலங்களுடனான இயல்பான முன்னேற்றம் நாம் இப்போது தயாரிப்பாளர்களாக, எந்த தளத்திற்கு எந்த உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்க வேண்டியிருக்கும். ஆயினும் தியேட்டர்களின் அனுபவத்தை ஒருபோதும் ஓ.டி.டி. தளங்களால் மாற்ற முடியாது. இருப்பினும்... நவீன வடிவங்களை திரைத்துறையும் ஏற்கவேண்டும் என தயாரிப்பாளாரும், நடிகையும், கிரிக்கெட்டர் விராட்டின் மனைவியுமான அனுஷ்கா சர்மா ஓங்கி அடித்திருக்கிறார்.
""இது காலத்தோட கட்டாயம். கொரோனா வாட்டி எடுக்கும் கஷ்டமான சூழல்ல சிலருக்கு பிழைக்க... ஓ.டி.டி. உதவுதுன்னா அது சந்தோஷம்தானே. அதேசமயம்... கொரோனா ஊரடங்கல் முடிஞ்சு... தியேட்டர்கள் திறக்கப்பட்டால்... தியேட்டர்களுக்கு மக்கள் போவாங்க. ஏன்னா... தியேட்டர் அனுபவம் அலாதியானதுதானே'' என சொல்லியுள்ளார் டாப்ஸி.
“கொரோனாவால் ரெண்டு மாசமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கு. இதனால் புதுப் படங்களை ஓ.டி.டி.ல வெளியிட சிலர் முன் வந்துள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் சினிமா படங்களை தியேட்டர்களில் வெளியிட வாய்ப்பே இல்லாததால்தான்... முதலீட்டு முடங்கல் நஷ்டத்தை சரிக்கட்டத்தான் ஓ.டி.டி.ல வெளியிட வேண்டிய நிலைமை தியேட்டர்காரங்க இதை புரிஞ்சுக் கணும். தியேட்டரையும், புதுப் படங்களையும், ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் எப்பவுமே தவிர்க்க முடியாது. அதனால... ஓ.டி.டி.ய ஒரு தற்காலிக தீர்வாத்தான் தியேட்டர்காரர்கள் பார்க்கணும்'' என புத்தி சொல்லியுள்ளார் வித்யா பாலன்.
கதாநாயகிகளோட துணிச்சலை பாராட்டித்தான் ஆகணும்!
-ஆர்.டி.எ(க்)ஸ்