புதிய மாவட்டம் என தென்காசியை அறிவித்த நாள்முதலே "தங்களுடைய பகுதிகளை தென்காசியுடன் இணைக்கக்கூடாது' என்று தென்காசியின் கீழ்ப்பகுதி, ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதியினர் எதிர்த்ததுடன், கண்டனக்குரல்கள் எழுப்பி போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். ஆனால் மக்களின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாமல் அறிவிப்பின்படி தென்காசி மாவட்டத்தில் நெல்லைப் பகுதிகள் சேர்க்கப்பட்டன. இதனால் கொந்தளிப்பில் இருக்கும் எதிர்ப்பாளர்களால், திறப்புவிழாவின்போது கருப்புக்கொடி அசைத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்று அதிகாரிகளும், போலீஸாரும் பதற்றத்தில் இருந்தனர்.
இதனால் அந்தப் பகுதி மக்கள் போலீசின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டனர். தென்காசியில் மட்டும் சுமார் 3500 போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் 22-ஆம் தேதியன்று புதிய மாவட் டத்தைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தை ஆரம் பித்து வைக்கிற நாளின் போது மாவட்டப் பகுதியி லிருந்து சிறு சலசலப்பு கண்டனங்கள் கிளம்பி விடக்கூடாது என்பதற்காக பரபரப்புடனேயே இருந்தது காவல்துறை. சங்கரன்கோவில் நகரில், இணைப்பிற்குக் கண்டனம் தெரிவித்து ம.தி. மு.க.வின் சார்பில் ஒட்டப்பட்ட கண்டனப் போஸ்டர்களை போலீஸார் கிழித்தெறிந்ததுடன், மீதமுள்ள போஸ்டர்களையும் பறிமுதல் செய்தனர். "இதன் மூலம் மக்களின் குமுறல்களையும் கொந்தளிப்புகளையும் அடக்கி விடமுடியாது. இனிமேல்தான் எங்களின் போராட்டம் வலுவடை யும்' என்கிறார் ம.தி.மு.க.வின் ந.செ. ஆறுமுகச்சாமி.
தென்காசி புதிய மாவட்டம் அறிவிப்பு வெளியான மறுகணமே "வறட்சியான தங்களின் சங்கரன்கோவில் தொகுதியை வளமான தென்காசியில் இணைக்கக்கூடாது. பஞ்சம் மற்றும் விவசாய வறட்சி உள்ளிட்ட நிவாரணங்கள் கிடைக்காமல் போய்விடும்; "நெல்லையுடனேயே நீடிக்க வேண்டும்' என்று தொகுதியின் விவசாய சங்கத் தலைவரான சந்தானம் தலைமையில் விவசாயிகள் திரண்டு போய், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நெல்லை கலெக்டர் ஷில்பாவிடம், மனுவைக் கொடுத்துவிட்டு கடும் கண்டனத்தை வெளிப் படுத்தினர். மேலும், சங்கரன்கோவில், திரு வேங்கடம் தாலுகாக் கள், குருவிக்குளம் மற்றும் மேலநீலிதநல்லூர் யூனியன்கள் உள்ளிட்ட கிராமப் பகுதிகளின் மக்களும், "சங்கரன்கோவில் இணைப்பு கூடாது. ஒருமணி நேரத்தில் நெல்லை சென்றடை வதை விடுத்து, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல, கிராமப்புறங்களின் மக்களான நாங்கள் பல பஸ்கள் மாறி எங்களின் கோரிக்கைக்காக தென்காசி சென்றடைவதற்குள் பொழுதே அடைந்து விடும்' என்ற தங்களின் சிரமங்களைக் மக்களின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்காக வந்த நிர்வாக ஆணையர் சத்யகோபால் கமிட்டி உட்பட அனைத்துக் கமிட்டி யிலும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், "சங்கரன்கோவில், நெல்லையுடனேயே நீடிக்க வேண்டும்' என்று பட்டவர்த்தனமாக எடுத்துரைத்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதேசமயம் மண்ணின் மைந்தரான வைகோவும், "கீழ் முனையிலிருக்கும் கிராமங்களின் மக்கள், மேல் கோடி மூலையிலிருக்கும் தென்காசியை சென்றடையவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வழக்கமான நிவாரணங்களைப் பெறவும் சிரமப்படுவர். "நெல்லையுடனேயே சங்கரன்கோவில் நீடிக்க வேண்டும்' என்று மக்களின் துன்பங்களை, துயரங்களை மனுவாக்கி அரசிடம் நேரிடையாகவே கொடுத்து வலியுறுத்தியிருக்கிறார்.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து பங்கேற்ற விழாவில், தென்காசி மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு கலெக்டராக அருண் சுந்தர் தயாளனும் எஸ்.பி.யாக சுகுணாசிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக கலெக்டர் அலுவலகமாக வருவாய் கோட்ட அலுவலகமும் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.க்கோ தனி அலுவலகமில்லாமல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். புதிய கலெக்டரேட், எஸ்.பி. ஆபீசுக்கான இடத் தேர்வு நடைபெறுகிறது.
நெல்லை பிரிக்கப்பட்டு தென்காசி உதயமானதால், அமைச்சர் ராஜலெட்சுமி, புதிய மாவட்டத்துக்கான பிரதிநிதியாகிவிட்டார். இதனால், நெல்லை மாவட்டத்துக்கு எந்த அமைச்சர் பொறுப்பும் இல்லை. அதனால் நெல்லை மாவட்ட பொறுப்பு தனக்கு வேண்டும் என்று அம்பை எம்.எல்.ஏ. முருகையாபாண்டியன் கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அமைச்சர் பதவி இல்லாவிட் டால் வீட்டு வசதிவாரியத் தலைவர் பதவி வேண்டும் என்று தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.
-பரமசிவன்,
படங்கள் : ப.இராம்குமார்