மிழகத்தை அதிரவைத்த மற்றொரு கொடூரம்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேலு. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (14). தளவாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்துவருகிறார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த இந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

murderசிறுமி ராஜலட்சுமி, அக். 23-ஆம் தேதியன்று பள்ளியில் நடக்கவிருந்த ஆண்டுவிழாவில், மாறுவேடப் போட்டியில் மாரியம்மன் வேடமிடுவதற்கு பெயர் கொடுத்திருந்தார். அதற்காக, அக். 22-ஆம் தேதியன்று மாலை, தினேஷ்குமாருக்குச் சொந்தமான தோட் டத்தில் இருந்து மல்லிகைப் பூக்களை பறித்து வந்து தாயிடம் கொடுத்து பூ கட்டுவதற்கு உதவினார். இரவு 7:30 மணியளவில், கையில் கொடுவாளுடன் திடீரென்று சிறுமி ராஜலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்த தினேஷ்குமார், சிறுமியின் தலைமுடி பிடித்துத் தூக்கினார். பதறி எழுந்த தாய் சின்னப்பொண்ணுவை சுவரிலேயே அடித்துச் சாய்த்தார்.

அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் தினேஷ் குமார், அந்தச் சிறுமியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல அறுத்துக் கொலை செய்தார். அதன்பின்னும் ஆவேசம் தணியாமல், சிறுமியின் உடலை வீட்டு வாசல்வரை இழுத்து வந்து போட்டுவிட்டு, தலையை மட்டும் தனியாக எடுத்துச்சென்று 100 மீட்டர் தூரத்தில் தளவாய்பட்டி -ஈச்சம்பட்டி சாலையில் வீசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

Advertisment

தினேஷ்குமாரின் மனைவியும் தம்பியும் தினேஷ்குமாரை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து, ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் டவுன் போலீசார், தினேஷ்குமார் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 302 (கொலை), 294-பி (ஆபாசமாக பேசுதல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில், 15 நாள்கள் விசாரணைக் கைதியாக சேலம் மத்திய சிறையில் தினேஷ்குமாரை அடைத்தனர்.

Advertisment

murderராஜலட்சுமியின் தந்தை சாமிவேலு, ""சனிக்கிழம சாயந்தரம் 4 மணி இருக்கும். என் புள்ளய கையப்புடிச்சி தப்பா நடந்துக்கப் பார்த்துருக்கான் கார்த்தி (தினேஷ்குமார்). அவ, அறியாப்புள்ளய்ங்க. இளம்புள்ள. வயசுக்கு வந்து மூணு மாசம்தான் ஆச்சுங்க. மறுநாள் ஞாயித்துக்கிழம, என் புள்ளைகிட்ட "ஏம்மா சோகமா இருக்கே'ன்னு கேட்டேன்.

"கார்த்தியண்ணே கைய புடுச்சி இழுத்துச்சு. பயமாக இருக்குப்பா'னுச்சி. "சரிம்மா... இத யாருகிட்டயும் சொன்னா தப்பாயிடும். நீ அறியாப் புள்ள... நான் வண்டி வாடகைக்கு போய்ட்டு வந்து, கார்த்திகிட்ட கேட்டுக்கறேன்'னு சொல்லிட்டுப் போனேன். திங்கள் கிழமையன் னிக்கு இப்படி என் புள்ளய கொன்னுப் போட்டுட் டான்'' என மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார் நம்மிடம்.

கொலையாளியின் மனைவி சாரதாவிடமும் நாம் விசாரித்தோம்.

""தளவாய்ப்பட்டியை சேர்ந்த ராமு என்பவருக்குச் சொந்தமான கதிர் அறுக்கும் வண்டியிலதான் கடந்த பத்து நாளாக கார்த்தி வேலை செஞ்சிட்டு இருந்துச்சி. தஞ்சாவூருக்கு வாடகைக்கு ஓட்டிட்டுப் போயிருந்திச்சு. வேலை முடிஞ்சி சனிக்கிழம (அக். 20) காலை 6:15 மணியளவில் வீட்டுக்கு வந்துச்சு.

அன்னிக்கு இரவும் சும்மாவே கண்களை திறந்து வைத்து படுத்திருந்தாரே தவிர, தூங்கவே இல்ல. "எனக்கு மல்லிப்பூ வாசம்னாலே பிடிக்கல... வண்டி வாங்கணும்...' இப்படி சம்பந்தமே இல்லாம ஏதேதோ பேசிக்கிட்டே இருந்தாரு. மறுநாள் (அக். 21) காலையில அவருக்கு பாடம் போடலாம்னு சீலியம்பட்டியில இருக்கற பசுமாட்டுக்காரன்கிற தாத்தாகிட்ட கூட்டிக்கிட்டு போனோம். அந்த தாத்தா பேயும் ஓட்டுவாரு. அப்புறம், மதியம் 2:30 மணி இருக்கும். மலையம்பட்டியில மாரிமுத்துனு ஒரு சாமியாடிகிட்ட கயிறு கட்டிக்கிட்டு வரலாம்ணு கார்த்திய கூட்டிக்கிட்டு போனோம். சாமியாடி மாரிமுத்து, "கார்த்தி ஒடம்புல முனி வந்திருக்கு'னு சொன்னாரு.

அன்னிக்கு இரவும் கார்த்தி தூங்கவே இல்ல. மறுநாள் (அக். 22) எங்களுக்குத் தெரிஞ்ச ஆத்தூர்ல இருக்கிற நவநீதகிருஷ்ணன்கிற குழந்தைகள் டாக்டர்கிட்ட கார்த்திய கூட்டிக்கிட்டு போனேன். ஒருமணி நேரம் கார்த்தியோடு தனியாக பேசினார். அவரும், "கார்த்திக்கு லேசா மனநலம் பாதிச் சிருக்கு'னு சொல்லிட்டு, மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுத்தாரு.

திங்கள்கிழம சாயங்காலம் திடீர்னு என் குழந்தையை நெஞ்சோட அணைச்சு கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்த்தாரு. அவர்கிட்ட இருந்து குழந்தைய பிடுங்கிக்கிட்டு, நல்லா திட்டி விட்டேன். ஆனா, அதுக்கப்புறம் சில நிமிஷங்கள்ல அவரு விறுவிறுனு போய் ராஜலட்சுமி புள்ளைய கொன்னுப்புட்டு வந்துட்டாரு. இங்கே இருந்தா அதே வெறியில என்னையும், குழந்தையையும் கொன்னுடுவாரோங்கிற பயத்துலதான் நானும், கொழுந்தனாரும் கார்த்தியை போலீசில் ஒப்படைச்சோம்'' என்கிறார் சாரதா.

இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பொன்.கார்த்திக்குமாரிடம் கேட்டபோது, ""இது ஒரு பக்கா மர்டர். சாதி ரீதியில் மட்டும் இந்த கொலை நடந்ததாக சொல்வதில் உண்மை இல்லை. கொலை யாளிக்கு மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதும் உறுதி யாக தெரியவில்லை. ஆனால், சிலநேரம் நன்றாக பேசுகிறார். சிலநேரம் மனநலம் பாதித்தவர் போல பேசுகிறார். இதுபோன்ற சந்தேகங்கள் வந்துவிடக்கூடாது என்பதால்தான் உள்ளூர் நிருபர் களைக்கூட நேரில் வந்து கொலை யாளியைப் பார்க்க அனுமதித் தோம்'' என்றார்.

-இளையராஜா