சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றிக்கொடி பறக்க, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே தி.மு.க.வால் வெல்ல முடிந்திருக்கிறது. இதன்மூலம், சேலம் மாவட்டம், தனது கோட்டையென்பதை நிரூபித் திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. தனிப் பெரும்பான்மை வெற்றிபெற்ற கொண்டாட்டம் ஒருபுறமிருந்தாலும், சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வால் எப்படி "ஹாட்ரிக்' வெற்றியைப் பெற முடிந்தது, தி.மு.க.வின் வெற்றிக்கு தொடர் முட்டுக்கட்டையாக எது உள்ளது என்பதை அலசுவதே தி.மு.க.வின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வின் எதிரிகள் வெளியில் இல்லை... உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்கள்தான் வேட்டுவைக்கும் எதிரிகள். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அ.தி.மு.க. தனித்து களமிறங்கி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் தி.மு.க. கரையேறியிருந்தது.
கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. எம்.பி. எஸ்ஆர்.பார்த்திபன், அ.தி.மு.க.வைவிட 1,46,926 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியடைந்தார். எனவே அ.தி.மு.க. மீதான அதிருப்தி, உட்கட்சிப் பூசல்கள், ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட காரணங்களால், 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கலா மென தி.மு.க. ஆழமாக நம்பியது. ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், ராகுல்காந்தி எனப் பலரின் நேரடி கவனமும் சேலத்தின் மீது இருந்தும் கூட, அக்கட்சியால் வெற்றிபெற இயலவில்லை. சேலம் வடக்கு தொகுதியில்கூட தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கடும் சிரமத்திற்கிடையே இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். எஞ்சிய 10 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி வசப்படுத்தியது.
"ஒட்டுமொத்தமாக ஆட்சியை இழந்திருந்தாலும்கூட, சேலம் மாவட்டத்தில் மட்டும் அ.தி. மு.க.வால் எப்படி பெருவெற்றி பெற முடிந்தது'' என முன்னாள் எம்.எல்.ஏ. செம்மலையிடம் கேட்டோம். "எம்.ஜி.ஆர். காலத்தி-ருந்தே சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை தான். அதேநேரம்... ஓர் அமைச்ச ராகவும், முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதனால்தான் சேலம் மாவட்டத்தில் மீண்டும் எங்களுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைத்திருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணி எங்களைவிட மிகவும் வலுவாக இருந்தது. நாங்கள், பா.ஜ.க., பா.ம.க. போன்ற பஞ்சுமூட்டைகளை நீரில் நனைத்து சுமந்துகொண்டிருந்தோம். வன்னியர் களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை, முக்குலத்தோருக்கு எதிராகத் தி.மு.க.வினர் திசை திருப்பிவிட்டனர். ஆதித்தமிழர் பேரவையை கூட்டணிக்குள் கொண்டுவந்து, தெலுங்கு பேசும் அருந்ததியினர் சமூகத்தினர் வாக்குகளை அள்ளினர். பா.ஜ.க.வை, மதவாதக் கட்சியாகவே பிரச்சாரம் செய்தனர். இப்படி திட்டமிட்டு வேலை செய்ததால் பிற மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது'' என்றார்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் இந்தமுறை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே 15 கோடி முதல் 40 கோடி ரூபாய்வரை செலவு செய்திருந்தன. எடப்பாடி தொகுதியில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 75 கோடியை வாரி இறைத்ததால்தான் 93 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வெற்றிபெற முடிந்தது.
இதுகுறித்து தி.மு.க. மூத்த புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, தி.மு.க.வின் தோல்விக்கு வேறு பல காரணங்களையும் கூறினார்கள்.
"வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்ட நிமிடத்தில் இருந்தே அ.தி.மு.க.வினர் வேலைகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள். அந்த அர்ப் பணிப்பு இங்குள்ள தி.மு.க.வில் இல்லை. வேட்பாளர்கள் தேர்வு பிடிக்காத தால், மூத்த நிர்வாகிகள் பலரும் நவகிரகங் களைப்போல ஆளுக்கொரு திசையில் முறுக்கிக் கொண்டு நின்றனர். சேலம் மேற்கு மாவட்டத்தில், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தால் நிய மிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் யாருமே மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்கள் அனைவரும் வீரபாண்டி ராஜா கோஷ்டி. எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.க்கு தனி கோஷ்டி என செயல்பட்டனர். இத்தகைய கோஷ்டிப்பூசலாலும் அ.தி.மு.க.வின் பணபலத்தாலும் சேலம் மேற்கு மாவட்டத் திற்குட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் தொகுதிகளில் தி.மு.க.வுக்கு வெற்றி கைநழுவிப் போனது.
சேலம் கிழக்கு மாவட்டத்தில், வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு சொதப்பியது. ஐபேக் மூலமாகக் கள ஆய்வு செய்தாலும்கூட, வேட்பாளர் தேர்வுக்காகப் பணம் கைமாறியதும் நடந்தது. ஏற்கனவே இருமுறை தோற்ற தமிழ்செல்வனுக்கு ஏற்காட்டில் சீட் கிடைத்தது எப்படி? ஆதிதிராவிடர் பெரும்பான்மை யாக உள்ள கெங்கவல்லியில், சேலத்தைச் சேர்ந்த ரேகா பிரிய தர்ஷினிக்கு வாய்ப்பு வழங்கப்பட, அவர் வெற்றிபெற்றால் அமைச்சராகி விடுவாரே என்ற பொறாமையில் அவருக்கு எதிராக ஒரு கோஷ்டி வேலைசெய்தது. அதேபோல, வீரபாண்டியில் நிறுத்தப்பட்ட டாக்டர் தருணுக்கு கிளீன் இமேஜ் இருந்தாலும், 6 பேர் கொலை வழக்கில் பெயர் கெட்டுப்போன பாரப்பட்டி சுரேஷ்குமாரை கூட்டிக்கொண்டு பரப்புரைக்குப் போனது மைனஸ்.
தருண் வெற்றிபெற்றால், வீர பாண்டியார் குடும்பத்தால் அத் தொகுதியைக் கைப்பற்ற முடியாமல் போய்விடுமென்பதால், அக்குடும்பத்தினர், அ.ம.மு.க., அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வாக்காளர்களைத் திசைதிருப்பும் வேலையிலும் இறங்கினர். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், வீரபாண்டி ராஜாவுடன் நெருக்கமாக இருந்தது பிடிக்காத கட்சி நிர்வாகிகள் பலரும் தேர்தல் வேலைகளில் ஆர்வங்காட்டாமல் புறக்கணித்தனர். சேலம் மத்திய மாவட்டத்தில், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர் ஆகிய தொகுதிகள் வருகின்றன. அம்மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மட்டும் சேலம் வடக்கில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மூங்கில்பாடி சாமிநாதன், மாஜி துணை மேயர் பன்னீர்செல்வம், காடையாம்பட்டி ராஜேந்திரன், கிச்சிப்பாளையம் குணசேகரன் உள்ளிட்ட மத்திய மாவட்ட மூத்த நிர்வாகிகளை ஒதுக்கிவைத்ததால், அவர்களின் ஆதரவாளர்கள், தேர்தல் வேலை செய்யாமல் ஒதுங்கிக்கொண்டனர்'' எனப் பட்டியலிட்டார்கள்.
மற்றொரு மூத்த தி.மு.க. நிர்வாகியோ, சேலம் மாவட்டத்தில் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு சரியாக இல்லாததாலேயே இங்கு கழகம் படுதோல்வி அடைந்ததென்றார். மேலும் கூறுகையில், "தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பலர், மக்களிடம் அறிமுகமில்லாதவர்கள். எனவே அவர் களுக்காகத் தீவிரமாகத் தேர்தல் வேலை செய்யாமல் வீழ்த்திவிட்டார்கள்.
வீரபாண்டி தொகுதியில் தி.மு.க.வினர் உள்ளடி வேலைகளைச் செய்ததால்தான் ஜெயிக்கவேண்டிய வேட்பாளர் தோல்வி அடைய நேர்ந்தது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலின்போது அத்தொகுதியிலுள்ள தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், அ.தி.மு.க.விடம் பணம் வாங்கிக்கொண்டு அக்கட்சிக்கு வேலை செய்தனர். இதுகுறித்து மேலிடத்திற்கு அறிக்கை அளித்தும் இப்போதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உடனடியாக சேலம் மாவட்ட தி.மு.க.வில் தேவையான சீரமைப்புகளைச் செய்யாவிட்டால் தி.மு.க.வுக்கான தோல்வி, அடுத்த தேர்தலிலும் தொடர்வது உறுதி. சேலம் மாவட்டத்தில் தி.மு.க. வலுவடைந்தால்தான் பக்கத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்'' என்றார் கவலையோடு.
திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை, சேலம் மண்ணுக்கு உண்டு. இப்படிப்பட்ட சேலத்தில், தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் தி.மு.க. பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்து வருவது, அக்கட்சியின் உள்கட்டமைப்பு பலத்தின்மீது கேள்வி எழுப்புகிறது. "இந்த மாவட்டத்தில் தேவையான களையெடுப்புப் பணிகளை உடனடியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.