ணிப்பூர் கலவரம் மூன்று மாதங்களாகத் தொடர்ந்தபடியிருக்கிறது. இதுகுறித்த விளக்கத்தை பாராளுமன்றத்தில் அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க, பிரதமரோ பாராளுமன்றத்துக்கே தொடர்ச்சியாக விடுப்பெடுத்து எஸ்கேப்பாகி வருகிறார். பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன. மணிப்பூரைப் போலவே, ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பா.ஜ.க. எனும் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கும் ஹரியானாவிலும் தற்போது கலவரம் தூண்டப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதியன்று, ஹரியானாவில் குருகிராம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய இந்துத்வா அமைப்புகள் நடத்திய மத ஊர்வலம், நுஹ் மாவட்டத்தில் நுழைந்தது. அப்போது, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் செல்லும்போது மத உணர்வைத் தூண்டும் கோஷங்கள் எழுப்பப்பட, அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்த முயன்றி ருக்கிறார்கள். இதையடுத்து இரு தரப்புக்கு மிடையே வாக்குவாதம் மோதலாகி, கல்வீச்சில் ஈடுபட, அப்பகுதியிலிருந்த வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. ஊர்வலத்தில் சென்றவர்களில் ஒரு பகுதியினர் அங்கிருந்த கோவிலுக்குள் சென்று தஞ்சமடைய, அவர்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

இதற்கிடையே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் பெருங்கலவரமாக உருவெடுத்து, நுஹ் மற்றும் குருகிராம், ஃபரிதா பாத் பகுதிகளுக்கு பரவியது. எனவே கலவரக்காரர்களைக் கட்டுப் படுத்துவதற்காக அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட் டது. மேலும், உடனடியாக இணைய சேவை தடை செய்யப்பட் டது. எங்கேனும் கலவரமென்றால், கலவரக்காரர்கள் ஒருவரையொரு வர் தொடர்பு கொள்ளாதிருக்கவும், வதந்திகள் பரவாதிருக்கவும் இணைய சேவை துண்டிக்கப்படுவது வழக்கம். அதேபோல், கலவரப் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் வெளித்தெரியா திருக்கவும் இப்படிச் செய்கிறார்கள். இதன் காரணமாகத்தான், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட தகவல் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்குத் தெரியவந்தது.

mm

Advertisment

தற்போது நடந்துவரும் ஹரியானா கலவரத்தில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

கலவரம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்ததில், 31ஆம் தேதி இரவில், குருகிராமில், செக்டர் 57 பகுதியிலுள்ள அஞ்சுமான் ஜமா மஸ்ஜித்துக்குள் புகுந்த இந்துத்வா கும்பல், மசூதிக்கு தீ வைத்தது. மசூதி மொத்தமும் தீப்பற்றி எரிந்தபோது, மசூதியிலிருந்த ஹஃபீஸ் சாத் என்ற இமாம் மீது கலவர கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கியாலும் சுட்டது. இதில் அவர் சுருண்டு விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இளைஞரான இந்த இமாம், பீகாரைச் சேர்ந்தவரென் றும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அங்கே பணி யில் சேர்ந்தாரென்றும் கூறப்படுகிறது. குருகிராமைச் சேர்ந்த எம்.பி.யும் மத்திய அமைச்சருமான இந்திரஜித் சிங் கூறுகையில், "கலவரத்தை அடக்க மத்திய அரசிடம் பேசியதில், 20 கம்பெனி பாராமிலிட்டரியை அனுப்பி யுள்ளனர். குருகிராம் மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் இமாம் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இக்கலவரத்தில் இதுவரை 6 பேர் வரை கொல்லப்பட்டனர். கொலையாளிகளையும், கலவரக்காரர்களையும் அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

கலவரம் தீவிரமடைந்துள்ள சூழலில், அப்பகுதியிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. இமாம் சுட்டுக் கொல்லப்பட்டதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், இரு சமூகத்தினரிடையே சமாதானப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று மாலை குருகிராமிலுள்ள பாட்ஷாபூரில் 200க்கும் மேற்பட்ட இந்துத்வா கும்பல், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன், தடிகள் கற்களுடன் நுழைந்து, இஸ்லாமியர்களின் கடைகளையும், வாகனங்களையும் குறிவைத்து அடித்து நொறுக்கியது. உணவகம் ஒன்றை தீக்கிரையாக்கியது. "இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாகவும், மிச்சமுள்ளவர்கள் இளைஞர்களாகவும் உள்ளனர். சிலர் முகத்தை அடையாளம் காணாதபடி மூடிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற கலவரத்தைப் போலவே, சிறுவர்களை கலவரத்தில் ஈடுபடுத்தும் இந்துத்வா அமைப்புகளின் உத்தி, மிகவும் கவலைதரக்கூடியது. திட்டமிட்டு சிறுவர்களைக் கலவரக்காரர்களாக மாற்றி வருகின்றன இந்துத்வா அமைப்புகள். இந்த போக்கு எதிர்கால இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது'' என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நிலைமை கைமீறிய நிலையில், அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், “"மக்களிடையே நட்பு இல்லை யென்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கும் சூழல் இருந்தால் பாதுகாப்பு இருக்காது. மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் போலீஸ், ராணுவம், நீங்கள், நான் என யாராலும் இங்குள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க முடியாது''”என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிட்டிருப்பது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.