சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது இரண்டை மட்டுமே அ.தி.மு.க. வென்றது .
எனவே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில், இந்த மாவட்டங்களில் தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் செய்தார்.
சிவகங்கை மா.செ. செந்தில்நாதன், ஹெச்.ராஜாவுடன் காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆளுயர பா.ஜ.க. கொடிகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அ.தி.மு.க. கொடிகள் தென்படுவதைப் பார்த்து சுதாரித்தவர், "பா.ஜ.க. என்றால் இந்துத்வா கட்சி எனக்கூறிவிட்டு, உங்களுக்கு பிரச்சனை என்றால் பா.ஜ.க.வை தேடி ஓடுகிறீர்கள்'' என தி.மு.க.வை வாரினார். அருகிலிருந்த ஹெச்.ராஜாவை பார்த்து, "அண்ணே, நீங்கள் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டீர் கள்தானே?'' எனக் கேட்டதும், "ஆமா.. ஆமா'' என பூம்பூம் மாடு போல் அவரும் தலையசைக்க, "நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி, நீங்கள் வைத்தால் என்ன? அரசியல் செய்யாதீர்கள்'' என்றார். கூட்டம் கை தட்டாததால் கடுப்பில் முறைத்த படி அங்கிருந்து அகன்றார்.
சிவகங்கை கூட்டம் அவருக்கு ஒத்துழைக்க, சமீபத்தில் காவல்துறை தாக்குதலால் கொலையுண்ட அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியவர், அ.தி.மு.க. மா.செ. செந்தில்நாதனிடமிருந்து ரூ.5 லட்சத்தை வாங்கி அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுத்தார்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, கோவில்பட்டியில் தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாலையில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். சுமார் 50 மீட்டர் தூரமே நடந்தவர், பஸ்ஸில் ஏறி டாடா காட்டினார். அதன்பின்னர் நடந்த சுற்றுப் பயணத்தில், தேவரின வாக்கு வங்கிக் காக நயினார் நாகேந் திரனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி தூத்துக்குடியில் தொழில் முனைவோர், உப்பு உற்பத்தியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வழக்கறி ஞர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பனிமயமாதா ஆலயம் சென்று குருவானவரிடம் ஆசிபெற்றார். சுற்றியிருந்த மீனவ மக்களிடம், "உங்களுக்கு உரிய பிரதி நிதித்துவத்தை தி.மு.க. அரசு கொடுக்கவில்லை யென்று கொளுத்திப் போட்டார். ரோடு ஷோ உள்ளிட்டவற்றில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, சண்முகநாதனை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு சி.த.செல்லப் பாண்டியனை தூத்துக்குடியை கடக்கும்வரை கண்டு கொள்ளவேயில்லை.
ஒட்டாப்பிடாரம் நிகழ்ச்சியில் வேலாயுதபுரத்தில் பெண்கள், எடப்பாடியிடம்... "குடிநீர் சரிவர கிடைக்கவில்லை' என கோரிக்கை வைத்தனர். அதற்கு எடப்பாடி, "நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன்' என வாக்குறுதி அளித்தார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி, திருச்செந்தூரில் மாஸ் காட்டினார். "நானும் சண்முகநாதனும் சட்டசபையில் அருகருகே அமர்ந்து நட்பு பாராட்டியவர்கள்'' என எடப்பாடி புகழ, சண்முகநாதனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து, "நீங்களெல்லாம் டாஸ்மாக் கடைப் பக்கம் போகாதீங்க'' என அறிவுறுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இரவில், பாளையங்கோட்டையில் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் 108 வகை மெனுக்களுடன் கூடிய விருந்தை ருசித்தபின், நயினாருடன் அரை மணி நேரம் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போதைய சூழலில், கடந்த தேர்தலில் கிடைத்த இரண்டு தொகுதிகளும் மிஸ்ஸாகுமென்றே பேசப்படுகிறது!
தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி ஏக குஷியிலிருக்கிறார். இந்நிலையில், நயினாரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை துவக்கவுள்ளார்.
-வேகா