புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத் தேர்தலை 2021-ல் வரும் பொதுத்தேர்தலுக்கான எடைத்தேர்தல் என்றே கருதுகின்றனர் முதல்வர் நாராயணசாமியும், முன்னாள் முதல்வர் ரங்கசாமியும். அதனால்தான் இவ்விருவரும் கடைசி நேர பிரச்சாரத்தில் வேட்பாளர்களைவிடவும் அதிகம் வியர்வை சிந்தியுள்ளனர். வயது முதிர்வை யும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே வீடு வீடாகச் சென்று, மாடி மாடியாக ஏறிச்சென்று வேர்க்க, விறுவிறுக்க வாக்குகள் சேகரித்தது ஆச்சரியப்படுத்தியது.
காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் களத்தைக் கலக்கியுள்ளனர். ரெட்டியார் சமூகத்தை சார்ந்த ஜெயக்குமாருக்கு சீட் தராமல், ஜான்குமாருக்கு தந்ததால், அச்சமூகத்தினரும் கட்சி மீது அதிருப்தியில் இருந்தனர். ஜான்குமார் வேறு தொகுதியை சேர்ந்தவர் என்பதும் மைனஸ் பாயின்ட். ""எனது தொகுதியாக நான் பார்த்துக்கொள்கிறேன்''’என நாராயணசாமி வாக்குறுதி அளிப்பதால், முதலமைச்சரே வீடேறி வாக்கு கொடுப்பதால் நிலைமையில் மாற்றம். இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரக் காரணமான எம்.பி. வைத்தியலிங்கம் தனது சொந்த செல்வாக்கையும் சாதி ஆதரவையும் ஜான்குமாருக்கு கிடைக்கச் செய்வதில் முனைப்பு காட்டுகிறார். அத்துடன் தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், வி.சி.க. என கூட்டணி பலமும் காங்கிரசுக்கு கூடுதல் பலம்.
தொகுதியில் 12 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முதலியார் சமூக வாக்குகள் உள்ளதால் அதை குறி வைத்து இரு கட்சிகளும் வியூகத்தை வகுக்கின்றன. அந்த வகையில் கணக்கு போட்டுத்தான் முதலியார் சமூகத்தை சேர்ந்த புவனேஸ்வரனை நிறுத்தியுள்ளார் ரங்கசாமி. துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் மூலம் அந்த வாக்குகளை கவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ரங்கசாமியோ நீண்ட நாள் கழித்து நேரடியாக மக்களை சந்திக்கிறார். அதற்கு ஓரளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. கடந்த தேர்தலில் இரண்டாமிடம் வந்த அ.தி.மு.க. வேட்பாளர் கணேசனும் கூட்டணிக்காக முதலியார் சமூக வாக்குகளை கவர களப்பணியாற்றுகிறார். தேர்தல் தொடக்கத்தில் இருந்த சலசலப்புகளை மறந்து கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.வினரும் பணியாற்றுகிறார்கள். முன்னாள் அமைச்சர் கண்ணனின் கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிச்செல்வன் முதலியார் என்பதால் கணிசமான வாக்குகளை பிரிக்கக்கூடும்.
இந்த தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் படித்த, ஓரளவுக்கு வசதியுள்ள வாக்காளர்கள் அதிகமிருப்ப தால் பணத்தை பார்த்து வாக்களிப்பதை விட வேட்பாளர் தகுதி திறன், கட்சி தலைவர்களின் அணுகுமுறை, தொகுதி நலனில் அக்கறை போன்றவற்றை சீர் தூக்கி பார்த்து வாக்களிக்கும் வாய்ப்புகளே அதிகம் என்று தெரிகிறது. ஆளுங்கட்சி வேட்பாளருக்கு சாதகமான நிலையை மாற்ற கடுமையாய் போராடு கிறது என்.ஆர்.காங்கிரஸ்.
-சுந்தரபாண்டியன்