மிழ்நாட்டில், இந்தித் திணிப்புக்கு எதிராக அடித்த அடி, மகாராஷ்டிராவில் எதிரொலிக்கிறது! மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மாநில மொழிகளை ஒழித்துக்கட்டி, இந்தியின் ஆதிக்கத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டுவரத் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. இதற்கெதிராக தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பை, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கையிலெடுத்தனர். 

மகாராஷ்டிராவிலுள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், இந்தியை முதன்மைப் படுத்தும் முயற்சியில் மகாராஷ்டிர அரசு இறங்கியது. அதற்கு சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இதில் திடீர்த் திருப்பமாக, உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் இணைந்து ஜூலை 5ஆம் தேதி மிகப்பெரிய பேரணியை நடத்தப்போவதாக அழைப்புவிடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ஜ.க. கூட்டணி அரசு, இனி பள்ளிகளில் மூன்றாவது மொழியே கிடையாது.  மராத்தியும், ஆங்கிலமும் மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாணையில் திருத்தம் கொண்டுவந்தது. இதன்மூலம் இந்தித் திணிப்புக்கு எதிராக நடத்தவிருந்த பேரணியை வெற்றிப் பேரணியாக நடத்தப்போவதாக உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் அறிவித்தனர்.

Advertisment

இந்த ராஜ் தாக்கரே, 2005ஆம் ஆண்டில், தனது பெரியப்பா மகனான உத்தவ் தாக்கரேயுடனான அதிகாரப் போட்டி யில், சிவசேனாவிலிருந்து பிரிந்து, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை தொடங்கினார். இந்த பிளவுதான் சிவசேனாவின் சரிவுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது. அதன்பின்னர் ஏக்நாத் சிண்டே, சிவசேனாவில் பெருத்த பிளவை ஏற்படுத்தி, பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்து துணை முதல்வராகியிருக் கிறார். இதனால் மிகவும் பலவீனமாகிய உத்தவ் தாக்கரே, இந்தி எதிர்ப்பு என்ற புள்ளியில் தனது சகோதரருடன் இணைந்து போராட்டக் களத்தில் குதித்தார். 

இருவரும் நடத்திய வெற்றிப்பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, "இப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்துள்ளோம். இனி நாங்கள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை வெளியேற்று வோம்'' என தெரிவித்தார். அதேபோல், "எனக்கும் என் சகோதரருக்குமான சண்டை, சச்சரவைவிட மகாராஷ்டிராவின் நலன் பெரிது. மகாராஷ்டிரா வின் நலனை மீட்டெடுப்பதற்காக, மராத்தி மொழி உரிமைக்காக நானும் என் சகோதரரும் 20 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக இணைந் துள்ளோம். எங்கள் இணைப்பை என்னால்கூட நிகழ்த்த முடியாத நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்'' என்று ராஜ் தாக்கரே பெருமிதத்தோடு கூறினார். தாக்கரே சகோதரர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றிணைந்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!