பளிச்சென்று இருக்கிறது "மறுவாழ்வு முகாம்' என மாற்றப்பட்ட அந்தப் பெயர்ப் பலகை. திருச்சி கொட்டப் பட்டு இலங்கைத் தமிழர் முகாமில் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்த காலத்தி லிருந்தே தாய்த்தமிழகம் நோக்கி வரத்தொடங்கிய தமிழ் உறவுகளைத் தங்க வைத்த முதன்மை முகாம்களில் இதுவும் ஒன்று. அதற்கு முன், பர்மாவிலிருந்து ஏதிலியர்களாக வந்தவர்களுக்கான முகாமாகவும் இது இருந்துள்ளது.
40 ஆண்டுகளைக் கடந்த கட்டடங்கள், குடியிருப்பு கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த இலங்கைத் தமிழர்களுக்கான நல உதவிகள் இங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளன. திருச்சி மாவட்ட அமைச்சர்களான கே.என்.நேருவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் முகாம்வாசிகளுக்கான நல உதவித் திட்டங்களைக் கடந்த நவம்பர் மாதம் வழங்கியிருந்தனர்.
கன மழையால் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ, கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைத்துக் கொள்ள, முகாம்வாசிகளுக்கான பொதுக்கழிப்பிடங்களின் செப்டிக் டேங்கும் நிரம்பி வழிந்து, மோசமான சூழலையும் சுகாதாரச் சீர்கேட்டையும் உருவாக்கியிருந்தன. தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினரான நமது நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் டிசம்பர் 7-ந் தேதி நேரில் சென்று கொட்டப்பட்டு முகாமை பார்வையிட்டார்.
முதல்வரின் திட்டத்தால் தங்களுக்கான உயர்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத் தொகை கிடைத்து வருவதையும், கேஸ் இணைப்பு, ரேஷன் பொருட்கள், தடுப்பூசி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை கிடைத்து வருவதாகவும் தெரிவித்த முகாம்வாசிகள், தங்கள் குடியிருப்புகளின் நிலையையும், இருப்பிடத்தைச் சுற்றியுள்ள மோசமான சூழலையும் ஆலோசனைக் குழு உறுப்பினரிடம் நேரில் விளக்கினர். அத்துடன், "நல்ல குடிநீர் கிடைக்க வில்லை என்றும் போர்வெல் தண்ணீரைத்தான் உபயோகிக்கிறோம்' என்றும் தெரிவித்தனர். "விரைவாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத் தைக் காத்திடுமாறு' கேட்டுக் கொண்டதுடன், "புதிய குடியிருப்புகள் கட்டித் தரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்' என்றும் முகாம்வாசிகள் கேட்டுக் கொண்டனர்.
கொட்டப்பட்டு முகாமில் மறுவாழ்வுக்கான துணை ஆட்சியர் அலுவலகம் இருப்பதால், அங்கிருந்த அதிகாரி ரவியிடம் முகாம்வாசிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் ஆலோசனைக் குழு உறுப்பினர் தெரிவித் தார். உடனடித் தீர்வுகளுக்கான நட வடிக்கைகளை ரவி விரைவாக மேற் கொண்டார். அத்துடன், திருச்சி மாநக ராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமானிட மும் விவரம் தெரிவிக்கப்பட்டது. கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பறை நீர்த்தேக்கம் போன்றவற்றை சரி செய்யவேண்டிய பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருவதால், உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
மறுவாழ்வு முகாம் அமைந்துள்ள கொட்டப்பட்டு, திருச்சி கிழக்கு தொகுதிக்குள் வருகிறது. அத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான இனிகோ இருதயராஜிடம் முகாம் நிலவரம் குறித்து ஆலோசனைக் குழு உறுப் பினரான நமது பொறுப்பாசிரியர் தெரிவித்தார். எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், உடனே மாநகராட்சி ஆணையரிடம் தொடர்புகொண்டு பேசினார். அடுத்த சில நிமிடங்களில், கொட்டப்பட்டு முகாமிற்கு விசிட் அடித்த மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், அங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட்டார்.
கழிவுநீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தர விட்டதுடன், புதிய செப்டிக் டேங்க் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்திக்கிறார். அத்துடன், முகாம்வாசிகளுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதற்காக, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைத்து, அதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகளும் விரைவாக நடைபெறத் தொடங்கின.
முகாமில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை இல்லை. வாக்குரிமையும் இல்லை. ஆனாலும், ஓட்டு அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்ற அடிப்படையில் உடனடியாக அவர், நலனில் அக்கறை செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜின் வேகமும், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமானின் விரைவான நட வடிக்கைகளும் முகாம்வாசிகளுக்கு உடனடித் தீர்வைத் தந்துள்ளன.
பெயர்ப் பலகையில் இருப்பது போலவே, "மறுவாழ்வு முகாம்' என்பதை செயல்படுத்தும் வகையில், நிரந்தரத் தீர்வு காணவேண்டிய பணிகள் தொடர்கின்றன.