ஆரம்பித்துவிட்டது வாக்குப்பதிவு ஜுரம். சென்ற தேர்தலில் நடந்தது போலவே நாங்குநேரி தொகுதி தேர்தல் அதிகாரியான நடேசன் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கு முறையாக தெரியப்படுத்தாமல், கடந்த 12-ந்தேதி இரவு 30 வாக்கு எந்திரங் களை டி.என். ஏ.இசட்.7345 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தில், நெல்லை ஆட்சியர் அலுவலகத் திற்கு அனுப்பியிருக்கிறார். மாவட்ட நிர்வாகமோ தேர்தல் பணி யாளர்களின் செய்முறைப் பயிற்சிக் காகக் கொண்டுவரப்பட்டது என்று காரணம்சொன்னது.
அ.தி.மு.க. நெல்லை புறநகர் மா.செ. பிரபாகரன்தான், கட்சி முறைப்படி நாங்குநேரி தேர்தல் பணிகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர். ஆனால், கட்சித் தலைமை, மா.செ. தச்சை கணேச ராஜாவிடம் பொறுப்பை ஒப்ப டைத்ததால், மா.செ. பிரபாகரன் ஒதுங்கியே இருக்கிறார். நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் நாங்குநேரி முழுக்க அறிமுக மான னோஜ்பாண்டியனும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். பணம் உள்ளிட்ட முக்கியமான வேலை களுக்கு அமைச்சர்களுடன் வந்தவர்களே ஈடுபடுத்தப்படுவ தால், எடுபிடிகளாகவே பயன் படுத்தப்படும் உள்ளூர் கட்சிக் காரர்கள் எரிச்சலில் இருக்கிறார்கள்.
ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் இடையே நல்ல புரிதல் இருப்பதால், இளைஞர் களின் வாக்குகள் கைத் தரப்புக்குப் போகாமலிருக்க, இலைத்தரப்பின் கண்ணசைவில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் ராக்கெட் ராஜாவின் பனங் காட்டுப்படை ஹரிநாடார். இதில் போக்குகளைக் கணக்கிட்ட சுபாஷ் பண்ணையார், தன்னுடைய அனுமதியின்றி தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும், தான் பனங் காட்டுப்படைக் கட்சியின் தலைவருமில்லை என்றும் தனது சமுதாய வட்டத்திற்குள் அறிவித்து விட்டார். ஏனெனில், கணிசமான இளைஞர்கள் பண்ணையாரின் ஆதரவாளர்கள். இதில் இலைக்கு அதிர்ச்சி.
தொகுதிக்குட்பட்ட பாளை யூனியனின் 15 ஊராட்சிகளில், தேவர் சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் மாரியப்பன், கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். இதனால், தங்களது வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சிக்கல் என்பதை உணர்ந்த மா.செ. தச்சை கணேசராஜா, மாரியப்பனிடம், "உங்களை அரசு பி.பி. ஆக்கிடுறோம். வாபஸ் வாங்கிக்கோங்க' என்று சலுகைபேசியிருக்கிறார். மாரியப்பனோ மசியவில்லை.
இதற்கு செக் வைக்கும் விதமாக ரவுண்டுவருகிறார் அந்தப் பகுதியில் குடியிருப்பவரும், தி.மு.க. முக்கியப் புள்ளியுமான கருப்பசாமி பாண்டியன். பாளையில் தனக்குள்ள செல்வாக்கின் மூலம், இந்த 15 ஊராட்சிகளின் வாக்குகளை அப்படியே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்.
கடந்த எம்.பி. தேர்தலில் இங்கே 15,114 வாக்குகளைப் பெற்றது டி.டி.வி.யின் அ.ம.மு.க. அதிலிருந்து அ.தி.மு.க. பக்கம் பலர் தாவியிருந்தாலும், "கிஃப்'ட்காரருக்கு இன்னமும் மவுசு குறையவில்லை. அதைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டது காங்கிரஸ். தவிர, சமீபத்திய அ.தி.மு.க. தரப்பின் சீண்டல்களால் கை தரப்புக்கு அனுகூலமாகப் போகுமாறு கிஃப்ட் தரப்பிலிருந்தே நெல்லைப் பொறுப்பாளர்கள் மூலமாக தகவல் போயிருப்பதால் குஷியாக இருக்கிறார்கள்.
தங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக அறிவிக்கக் கோரி, நாங்குநேரியின் 65 கிராமங் களைச் சேர்ந்த பருத்திக்கோட்டை நாட்டார்கள் கறுப்புக்கொடி ஏற்றி, தேர்தல் புறக்கணிப்பு என்று எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். இதையடுத்து, கூட்டணி முறிந்தது என்று அறிவித்துவிட்டார் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி. இதற்கிடையே, கறுப்புக்கொடி ஏற்றிய அந்த சமுதாய மக்களைக் கைதுசெய்தது மேலும் கொதிப்படையச் செய்திருக்கிறது. இந்தக் கொதிப்பை சாந்தப்படுத்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜ லெட்சுமி எடுத்த முயற்சியும் வீணானது.
அ.தி.மு.க.வின் தேர்தல் காரியா லயத்திற்கு, ஆதரவு தெரிவிப்பதற்காக பா.ஜ.க.வின் பொன்னார் வருகிறார் என்ற தகவல்வர, நெல்லை பா.ஜ.க. பொறுப்பாளர் தமிழரசன் தலைமையிலான பா.ஜ.க.வினர் அங்குசென்று காத்திருந்தார்கள். இதையறிந்த பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணி, நீண்டநேரமாக அங்கு செல்வதைத் தவிர்த்தார். பா.ஜ.க. ஆதரவு என்றால் வாக்குசேகரிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதாலேயே அமைச்சர் தயங்குகிறார் என்பதை அறிந்த பொன்னார், கோபத்தில் அங்குவராமல் நேராக நாகர் கோவிலுக்கே சென்றுவிட்டாராம்.
மக்களோடு அதிருப்தி, கூட்டணிகளோடு விரிசல் என இலைத் தரப்பில் வரிசைகட்டும் மைனஸ்கள், கைத் தரப்புக்கு ப்ளஸ்ஸாக ஆகியிருக்கின்றன. வழக்கமான காங்கிரஸ் வாக் குகளுடன் ஏர்வாடி நகரைச் சுற்றியிருக்கும் முஸ் லிம் மக்களின் 16,385 வாக்குகள், கிறிஸ்தவ நாடார் பிரிவின் 21,513 வாக்குகள் என தோழமையான காங்கிரஸுக்கு பலம் கூட்டியிருக்கிறது தி.மு.க. தங்களது 17,940 வாக்குகளை காங்கிரஸுக்கே உறுதிப்படுத்தியிருக்கிறார் வி.சி.க.வின் திருமா. அதுபோலவே சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களும். அதனால் ஓட்டுக்கு இரண்டாயிரம் தர முடிவுக்கு வந்தது இலைத்தரப்பு. இதை எதிர்கொள்ள ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என ஃபிக்ஸ் செய்தது கை தரப்பு. 13, 14 தேதிகளில் முதல்வர் எடப்பாடி யின் தேர்தல் பிரச்சாரத்தின்போது போலீஸ், உளவுப்பிரிவுகள் பாதுகாப்பு வேலையில் இருந் ததை வாய்ப்பாக்கி, ஒரே நேரத்தில் தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிட்டது ஆளுங்கட்சி.
கையின் நம்பிக்கையை தகர்க்க அனைத்து வியூகங்களையும் விரி வாக்கியுள்ளது ஆளுந் தரப்பு.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்