ஊர் கூடித் தேர் இழுப்பது போல ஈரோடு மாநகரத்தையே கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறது ஈரோடு கிழக்குத் தேர்தல் களம்.
தேர்தல் பணியில் தொடக்கத்திலிருந்தே வேகம் காட்டிய தி.மு.க. அணி, தொடர்ந்து அந்த வேகம் தணியாமல் பேணிவருகிறது.
தி.மு.க. தரப்பில் ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் நடந்தது? ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எத்தனை வாக்காளர்களைச் சந்தித்தார்கள்? வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் குழு எந்தெந்த வீதிகளுக்குச் சென்றுவந்தது? எந்தெந்த அமைச்சர்கள் எத்தனை இடங்களில் பேசினார்கள்? ஒவ்வொரு நாளும் வாக்காளர்களின் மனநிலை எந்த அளவில் மாறிக்கொண்டிருக்கிறது? இப்படி புள்ளி விவரத்தோடு பட்டியல் எடுத்து தினமும் இரண்டு முறை கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பப்படுகிறது. அதைக் கவனிக்கும் தி.மு.க. தலைமையிலான குழு அதில் சில மாறுதல்கள், ஆலோசனைகளைத் தொகுதிப் பொறுப்பாளர் களுக்கு வழங்குகிறது.
இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உட்பட பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் தி.மு.க. கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தர சன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இஸ்லாமிய அமைப்பு களின் தலைவர்கள் என அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் ஈரோட்டில் முகாமிட்டு தொடர்ந்து வாக்காளர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
தேர்தல் களத்தில் தனித்து மக்களின் கவனத்தை ஈர்த்துவருவதில் நாம் தமிழர் கட்சி முன்னணியில் இருக்கிறது. அக்கட்சியின் நிர்வாகி கள், தொண்டர்கள் என மாநிலம் முழுவதிலு மிருந்து ஆயிரக்கணக்கானோர் ஈரோட்டில் குவிந்துள்ளார்கள். வீதி வீதியாக, வீடு வீடாகச் செல்லும் அவர்கள், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளையும், சீமானின் வேண்டுகோளையும் மக்களிடம் கூறி எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டு வாக்கு சேகரிக்கிறார்கள். கட்சியின் தலைவரான சீமான் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஈரோட்டிலேயே தங்கி வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். 15-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க பூக்களை தொண் டர்களிடம் வழங்கி தயார்செய்து வைத்திருந்தனர் அ.தி.மு.க.வினர். ஆனால் பல பகுதிகளில் சீமான் பிரச்சாரம் செய்துகொண்டே வர, அ.தி.மு.க. தரப்பு பெண்கள் சீமானுக்கு பூக்களைத் தூவி வரவேற்றது தேர்தல் களத்தில் சுவாரசியமாக இருந்தது.
தே.மு.தி.க., கட்சியின் மாநில நிர்வாகியான சுதீஷ், விஜயகாந்தின் மகனான விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் ஈரோட்டிலேயே தங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை வீதி வீதியாகச் சென்று முரசடித்து அவர்கள் வாக்கு கேட்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து அக்கட்சியின் மாஜிக்கள் சுமார் 20 பேர் ஈரோட்டில் வீதிவீதியாக வலம் வருகிறார்கள்.
தி.மு.க. மீது தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. தரப்பு பணம், பரிசுப் பொருள் விநியோ கம் உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கொடுத்து வருகிறது. இந்த புகார்கள், தேர்தலை நிறுத்துவதற்கான காரணங்களாக அவர்கள் தரப்பில் பயன்படும் எனக் கூறப்படுகிறது. முன் கூட்டியே பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள் பவர்களை தி.மு.க. ஏற்பாடு செய்துள்ளதால், அ.தி.மு.க. பிரச்சாரத் துக்கு எவ்வளவு கொடுத்தாலும் வாக்காளர்கள் வர மறுக்கிறார்கள் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஈரோட்டில் ஏழுநாள் அதிதீவிர பிரச்சாரம் என அறிவித்து 15-ஆம் தேதி ஈரோட்டுக்கு வந்தார்.
கூட்டத்தைச் சேர்க்கவேண்டும் என்பதற்காக தேர்தல் பொறுப்பாளர்கள் எவ்வளவு போராடியும் எடப்பாடி கூட்டத்திற்கு பெருமளவில் மக்கள் திரண்டு வரவில்லை. வேறு வழியில்லாமல் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி என அருகேயுள்ள தொகுதிகளிலிருந்து ஆயிரக்கணக் கான மக்களை பணம்கொடுத்து பல்வேறு வாகனங்களில் கொண்டுவந்து எடப்பாடி செல்லும் இடமெல்லாம் நிறுத்திவைத்தனர். கொண்டுவரப் பட்ட அந்தக் கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இல்லை என்பதையறிந்து எடப்பாடி பழனிச்சாமி விரக்தி மனநிலைக்குப் போயுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றாகக் கலந்து கொள்வோம் என பா.ஜ.க. தரப்பு எடப்பாடியிடம் கூறியிருந்த நிலையில், அதை உதாசீனப்படுத்திய எடப்பாடி, "பா.ஜ.க. பிரச்சாரத்திற்கு வராமலிருந்தாலே போதும், வந்தால் எங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளில் சரிவு ஏற்படும். அதை நான் விரும்பவில்லை'' என்று கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 15 -ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் ஈரோட்டில் சூறாவளி பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, எதிர்த்தரப்பு தொண்டர்களின் உற்சாகத்தையும் அ.தி.மு.க. தரப்பின் சுணக்கத்தையும் நேரிலேயே கண்டார். வெற்றிக்கு நெருக்கத்திலிருக்கும் தி.மு.க. கூட்டணியிடம் அத்தனை எளிதாக விட்டுக்கொடுத்து விடக்கூடாதென நினைத்த அவர், பிரச்சாரத்தில் சரமாரி யாக தி.மு.க.வைச் சாடினார்.
வீரப்பம்பாளையத்தில் பேசும் போது... "இந்தத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு எளிமையானவர். இதே தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்து பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சி ஒரு பொற் கால ஆட்சியாக இருந்துள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்து 21 மாதம் ஆன நிலையில், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. வீதி, வீதியாக வாக்கு கேட்டு வரும் அமைச்சர்கள், தேர்தலுக்கு முன்பு குறைகேட்க வந்தார்களா? மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர்கள் புரோட்டோவும், டீயும் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏழை வாக்காளர்களை, ஆடு, மாடுகளை அடைப்பதுபோல், விலைக்கு வாங்கி கொட்டகையில் அமர வைத்துள்ளனர். எப்படியோ அவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் கிடைத்துள்ளது. கொள்ளையடித்த பணம் மக்களுக்குப் போனதில் எனக்கும் மகிழ்ச்சி. 2 வேளை பிரியாணி போட்டுள்ளனர். சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, இரட்டை இலைக்கு வாக்களி யுங்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதத்தில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எழுதாத பேனாவிற்கு ரூ.81 கோடியில் கடலில் நினைவுச் சின்னம் எதற்காக அமைக்க வேண்டும்? தி.மு.க.விற்கு எடுத்துத்தான் பழக்கம். கொடுத்து பழக்கம் இல்லை. அம்மா உணவகத்தை முடக்கப் பார்க்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்கினால், அதனை ஸ்டாலினுக்கு வழங்கலாம்''’என காட்டமாகப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட கட்சியின் சீனியர்கள் அனைவருமே களத்தில் உள்ளார்கள். கனிமொழி, உதயநிதி பிரச்சாரம் அடுத்தடுத்த நாட்களில் தி.மு.க.வுக்கு வலுச்சேர்த்து வருகிறது. இறுதியாக இரண்டு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வரின் பயணம் தி.மு.க. அணிக்கு மேலும் பெரிய பலமாக அமையும்.
உற்சாகம் காட்டும் தேர்தல் பொறுப்பாளர்கள், தீவிர தேர்தல் பணியில் கட்சித் தொண்டர்கள், புதிது புதிதாக வகுக்கப்படும் வியூகங்கள் இவற்றின் துணையோடு வெற்றியை அடி அடியாக எடுத்து வைத்து நெருங்கி வருகிறது தி.மு.க. கூட்டணி!
-ஜீவாதங்கவேல்