திருவண்ணாமலை மாவட்டம் கலசப் பாக்கம் தொகுதிக்குட்பட்டது புதூர் செங்கம். இங்குள்ள பிரபலமான மாரியம்மன் கோவிலுக்கு தினமும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி பலி கொடுத்து சாமி கும்பிடுவார்கள். இந்த கோவிலில் திருமணம் செய்வதும் உண்டு. எனவே இக்கோவிலை மேம்படுத்துவதற்காக தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 2.78 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. கடந்த ஜூன் 18ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக இம்மண்டபத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்பின் தொகுதி எம்.எல்.ஏ.வான சரவணன் தலைமையில் புதிய மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்ற பொதுமக்களும் பக்தர்களும், அதிர்ச்சியை எதிர்கொண்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பக்தர் ஒருவர், "ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து திருமணத்தை காணும் வகையிலும், 500 பேர் உணவுக்கூடத்தில் சாப்பிடும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் தங்கும் அறைகளுக்கு ஏ.சி. பொருத்தியுள்ளது. திருமணம், காது குத்து என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பொதுமக்கள் குறைந்தபட்சம் 2 மணி நேரம் மண்டபத்தில் இருப்பார்கள். உறவினர்கள் என்றால் பல மணி நேரம் இருப்பார்கள். இரவில் அங்கேயே தங்கவும் செய்வார்கள். அப்படி வருபவர்களுக்கு சிறுநீர் கழிக்க ஒரு கழிவறைகூட கிடையாது, குளிக்கும் வசதி கிடையாது. இப்படியாங்க ஒரு மண்டபத்தை கட்டுவாங்க?'' எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் மண்டபத்தை கட்டுவதற்கான வரைபடம் தயாரித்து வாங்கினர். பல அதிகாரிகளைத் தாண்டியே அமைச்சரிடம் சென்று, ஒப்புதலுக்கு பின்னர் டெண்டர் விட்டு கட்டியுள்ளார்கள். மண்டபத்தில் கழிப்பறை, குளியலறை இருக்கவேண்டுமென்ற குறைந்தபட்ச அறிவுகூட அதிகாரிகளுக்கு இல்லையா?. கட்டடம் கட்டும்போது ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரி களுக்குமா இது தெரியவில்லை? திறப்பு விழா முடிந்து பொதுமக்கள் வந்து பார்த்தபின்பே இதுகுறித்து கேள்வி எழுப்பினால் அது தனி டெண்டர் என சமாளிக்கிறார்கள்'' என வருத்தப்பட்டார்.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ சரவணனிடம் கேட்டபோது, "அதிகாரிகள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். உடனே கழிவறை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்'' என்றார். அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியமே இதற்கு காரணம்.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்.