நாம் தமிழர் மேடைகளில் தி.மு.க.வையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் தாறுமாறாக விமர்சிக்கிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய திராவிடர் இயக்கப் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், “""பா.ஜ.க.வின் வேலையை சீமான் செய்துகொண்டிருக்கிறார். பொய் பேசுவதிலே சீமானின் அப்பா டெல்லியில் இருக்கிறார். மோடி பெரிய சீமான் என்றால், சீமான் சின்ன மோடி''’என்று கடுமையாக விமர்சித்தார். இருதரப்பிலும், காரசாரமான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இதுதொடர்பான கேள்விகளோடு சுப.வீரபாண்டியனைச் சந்தித்தோம்.

subavee

திருச்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் சீமான் குறித்து ஆவேசமாகப் பேசினீர்கள். இவ்வளவு கோபம் எதற்காக?

சீமானின் தரக்குறைவான பேச்சு, தாளமுடியாத பொய்கள், தலைதெறித்துப் போகிற அளவுக்கான அவருடைய தற்பெருமை இந்த மூன்றும்தான் என்னைக் கோபப் படுத்தின. இவற்றைத் தாண்டி "தி.மு.க.வை ஒழித்தே தீருவேன்' என பா.ஜ.க.வின் குரலாகவே அவர் ஒலிக்கத் தொடங்கிய பிறகு, அதற்கு எதிர்வினை ஆற்றவேண்டும் என்ற முடிவுக்கு வந்தே நான் பேசினேன்; உணர்ச்சிவயப்பட்டு பேசிவிடவில்லை. அவர்கள் மறுமொழியாற்றுகிறார்கள் என்பதைவிட மேலே விழுந்து பிறாண்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆபாசமான சொற்களால் வசைபாடுகிறார்கள். அறிவாளியிடமிருந்துதான் அறிவு சார்ந்த செய்திகள் வரும். ஆபாசமானவர்களிடம் இருந்து ஆபாசமான சொற்கள்தான் வரும்.

Advertisment

பா.ஜ.க.வின் குரலாக சீமான் இருப்பதாக எதை வைத்து சொல்கிறீர்கள்?

பா.ஜ.க. எதைப் பேச விரும்புகிறதோ அதையே சீமான் பேசுகிறார். திராவிட இயக்கத்தை ஒழிப்பதுதான் காவியினுடைய விருப்பமும், வேட்கையும். அதையே இவரும் பேசுகிறார் என்றால், அவர்களால் இவர் பேச வைக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழும்தானே? சீமான் பா.ஜ.க.வின் குரலாகவே ஒலிக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, எதிர்க்கிறேன்.

சீமானை பார்ப்பனிய அடிவருடி என்று சொல்கிறீர்கள்?

Advertisment

திருச்சியில் இருந்து சங்கரய்யர் என்கிற அப்பா எனக்கு எழுதி எழுதி கொடுக்கிறார், அதைப் படித்தே பேசுகிறேன் என்கிறார் சீமான். அவர் உண்மையான வரலாற்றுச் செய்திகளை எழுதிக் கொடுத்திருந்தால் சீமான் இப்படி அபத்தமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார். சங்கரய்யரிடம் எழுதிவாங்கி வந்து பேசுகிறவரை பின் எப்படி சொல்லமுடியும். மறுபடியும் சொல்கிறேன்… அது உண்மை!

பா.ஜ.க.வினரே சீமானை சைமன் என மத அடையாளமிட்டு கடுமையாக விமர்சிக்கின்றனரே?

காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சீமானாகவோ, சைமனாகவோ, இப்ராஹிமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அதையெல்லாம் பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க. இப்போது சீமானைப் பற்றிப் பேசுவதே இல்லையே. சீமானும் பா.ஜ.க.வை தொட்டும் தொடாமல், பட்டும் படாமல் பேசுகிறார். தி.மு.க.வை ஒழித்தே தீருவேன் என்று சொல்லும் சீமான், பா.ஜ.க.வை ஒழிப்பேன் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சமூகவலைத்தளங்களில் தி.மு.க.-நாம் தமிழர் இடையே கருத்துமோதல் நடந்து கொண்டிருக்கும்போது, தி.மு.க. தலைவர்கள் கருத்துக் கூறவில்லை. இது பேசவேண்டிய நேரம் என்று நீங்கள்தான் சொன்னீர்கள். அதை தி.மு.க. தலைவர்கள் உணரவில்லையா?

கருத்துமோதல் என்பதே மிகநாகரிகமான சொல். நாம் தமிழர் என்ன கருத்து வைத்துவிட்டார்கள், நாங்கள் மோதுவதற்கு. அவர்கள் செய்யும் நக்கலும், கிண்டலும் கருத்தா? சீமான் ஆட்சிக்கு வந்ததும் அரசுக்கு ஒய்ள்ர்ப்ஸ்ங்ய்ஸ்ரீஹ் கொடுப்பேன் என்கிறார். எவ்வளவுபெரிய பொருளாதார மேதை. பின் கடன் வாங்குவாராம், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்குச் சென்று, கொள்ளையடித்த பணத்தைத் திரும்பக் கேட்பாராம். சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளைத்தானே திருமணம் செய்திருக்கிறார். அவர் பத்தாண்டுகள் அமைச்சராகவும், ஐந்தாண்டுகள் சபாநாயகராகவும் இருந்தவர். அவரிடம் பணத்தையெல்லாம் வாங்கிவிடுவாரா? எல்லாவற்றிலும் தனக்கொரு சட்டம், பிறருக்கொரு சட்டம் என்று பேசக்கூடாது.

சொன்னதை நிறைவேற்ற ஆட்சியை எங்களிடம் கொடுத்துப் பாருங்கள் என்று சீமான் சொல்கிறாரே?

மக்களிடம் கேட்கச் சொல்லுங்கள். கொடுத்தால் வாங்கிக் கொள்ளட்டும். சென்றமுறை கடலூரில் போட்டியிட்டபோது சீமான் டெபாசிட்டையே பெறவில்லை என்கிறபோது, முதலில் டெபாசிட் வாங்கிவிட்டு வந்து பிறகு பேசச் சொல்லுங்கள்.

டெபாசிட் வாங்க முடியாதவர்களிடம் இவ்வளவு பதற்றப் படவேண்டிய அவசியம் என்ன?

அவர்களது கருத்தைப் பார்த்து கோபம் கொள்ளவில்லை. அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து கோபம் கொள்கிறோமா என்றால், வளர்ச்சியே இல்லாதவர்களைப் பார்த்து எப்படி கோபம் வரும். அவர்களின் தரக்குறைவான சொற்களால் பதற்றப்படுகிறோம். தாளாத பொய்கள் பிள்ளைகளிடத்திலே போய்ச் சேருகிறதே என்று ஆத்திரப்படுகிறோம்.

எதிர்விமர்சனமே வைக்கக்கூடாத அளவிற்கு தி.மு.க. புனிதமான கட்சியா?

இது விமர்சனமல்ல.. அவதூறு! இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. விமர்சிக்கிற யாரையும் நாங்கள் பேசுவதில்லை. பா.ஜ.க. தலைவர்கள் யாரையும்கூட நாங்கள் குறைத்துச் சொன்னதில்லை. ஹெச்.ராஜாவைப் போல, சீமானைப் போல தரக்குறைவாகப் பேசுகிறவர்களைத்தான் எதிர்க்கிறோம். இருவரும் அண்ணன் தம்பியைப் போல பேசுகிறார்கள். எனவே, அநாகரிகமான மனிதர்களை நான் எதிர்க்கிறேனே தவிர, அரசியல் விமர்சனங்களைக் கூடாதென்று சொல்லவில்லை.

-சந்திப்பு: பெலிக்ஸ்

தொகுப்பு -ச.ப.மதிவாணன்

படங்கள்: பிரதாப்