சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்ததில், "இந்த கைதே சட்ட விரோதமானது' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்க, 20-ம் தேதி காலையில் சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார். அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம்...
நக்கீரன்: "எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் போராடினால் சேலத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தவும் வாய்ப்பு இருக்கு' என்று மக்கள் அஞ்சுகிறார்களே?
மக்கள் கண்ணீரும் கதறலுமாக உள்ளக்குமுறலைக் கூறும்போதே அவர்கள் கண் முன்னாடியே என்னை கைது செய்கின்றனர். இதன்மூலம் என் மக்களுக்கு மறைமுகமாக ஒரு மிரட்டலை விடுக்கின்றனர். என்னை சந்திச்ச பெரும்பாலான மக்கள், "நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணி சாவறதைத்தவிர வேறு வழியில்லை'னு சொன்னாங்களே ஒழிய, புள்ளகுட்டிகளோட போய் பொழச்சுக்கிறுவோம்னு சொல்லக் கிடையாது. ஒன்றிணைந்து போராடினால் தூத்துக்குடி போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் சேலத்திலும் நடக்க வாய்ப்பு இருக்குது.
நக்கீரன்: உள்கட்டமைப்பும், வளர்ச்சியும் முக்கியம்தானே?
மருத்துவமனையில் செத்துப்போன மனைவியை ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தோளில் தூக்கிப்போவதை பார்க்கும்போது, எதை நோக்கிய வளர்ச்சியை எங்களுக்கு கற்பிக்கிறீங்க? 48 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்கப் போகிறான். குடிசை இல்லாத நகரமாக்குகிறோம் என்று குடிசைகளை பிரிச்சு எறிவதை வளர்ச்சி என்கிறார்கள்.
நக்கீரன்: தமிழகத்தில் மக்கள் இயல்பாகவே நகர்ப்புறங்களை நோக்கித்தானே நகர்கின்றனர்?
அதுதான் ஆபத்தானதுங்கறேன். கிராமப்புறத்தின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்காமல், ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை சமவிகிதத்தில் வளர்த்தெடுப்பது சாத்தியம் இல்லை. நகரத்தில் கிடைக்கும் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பை கிராமத்திற்கு கொண்டு வந்துவிட்டால் நான் ஏன் நகரப்போகிறேன்?
நக்கீரன்: கிராமப் பொருளாதாரம் வெற்றிபெறும் என்று எப்படி நம்புகிறீர்கள்?
நீரு சோறு முட்டை பால் காய்கறி... இதெல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லா பொருளாதாரமும் கிராமத்தில்தானே இருக்கு? தமிழ்நாட்டில் பாலின் சந்தை மதிப்பு மூன்று லட்சம் கோடி. நீங்கள் 25 ஆயிரம் கோடிக்கு சாராயம் வித்து சாகடிச்சிட்டு இருக்கீங்களே.
நெசவு செய்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், தேனீ வளர்த்தல், தச்சு வேலை செய்தல், மீன் வளர்த்தல் எல்லாமே பொருளாதாரம் இல்லையா? பளபளக்கும் கண்ணாடியும், விரைந்து செல்லும் சாலையும், விலையுயர்ந்த காரும்தான் வளர்ச்சி என்கிறீர்கள். வானூர்தியில் செல்வது வளர்ச்சிதான். ஆனால் அதில் செல்பவருக்கும் பசிக்கும்தானே? அவனுக்கு ரொட்டியும் பாலும் நிலத்தில் இருந்துதான் போகும் என்பதை கவனிக்க வேண்டும்.
நக்கீரன்: தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரித்துறை சோதனைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
ரோடு போடறதுக்கு எதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்டனர். ஆட்டுத்தோல் விற்ற செய்யாதுரை வீட்டில் இத்தனை ஆயிரம் கோடி இருக்குனா, யாருக்காக எட்டு வழிச்சாலை போடுகிறார்கள் என்பது புரிந்திருக்குமே என்றேன். காருக்குள் பணத்தை ஒளித்து வைப்பதுதான் அரசு சொல்லும் வளர்ச்சி.
நக்கீரன்: உங்கள் மீதான தொடர்ச்சியான வழக்குப்பதிவுகளால் எட்டுவழிச் சாலைக்கு எதிராக களமாடுவதில் சிறிது அமைதியாகி விட்டதுபோல் தெரிந்தது...
பேசிக்கொண்டுதானே இருக்கிறேன். ஸ்டாலினைவிட நான் அதிகம் பேசுகிறேனா இல்லையா? இந்த ரெண்டு மாசம்தான் பேசல. எனக்கு பேசறதுக்கு அனுமதி கிடையாதுங்க. அனுமதியை மறுத்து கடிதம் கொடுங்கள் என்றால் அதுவும் தர மறுக்கின்றனர். சிறைக்கு அஞ்சியோ போராட்டத்திற்கு பயந்தோ கிடையாது. என்னை தைரியமாக விட்டார்கள் எனில், ஒரு வாரத்திற்குள் மக்கள் எல்லோரும் கிளம்பிவிடுவார்கள்.
நக்கீரன்: ரஜினிக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கிறீர்களே?
ரஜினி, மக்களுக்கு எதிராகத்தானே பேசி வருகிறார்? அதனால்தான் அவருக்கு எதிராகப் பேசுகிறோம். அதாவது ரஜினி, பா.ஜ.க., அ.தி.மு.க. சேர்ந்து கூட்டணி வைப்பதற்கான திட்டத்துடன் நகர்கின்றனர். அதனால்தான் எட்டுவழிச் சாலையை ரஜினி ஆதரிக்கிறார். அதற்கு உடனே அமைச்சர் உதயகுமார், "சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டதால் அந்த சாலை சூப்பர் சாலையாக அமையும்' என்கிறார்.
-சந்திப்பு: இளையராஜா