1995-ல் தொடங்கி குஜராத்தில் 30 ஆண்டு களுக்கு நெருக்கமாக ஆட்சிசெய்துவருகிறது பா.ஜ.க. இந்த 27 வருடங்களாக பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலிருந்து அகற்ற எப்படியெப்படியோ குட்டிக்கரணம் போட்டுப் பார்க்கிறது காங்கிரஸ், எதுவும் நடக்கவில்லை. 2022 தேர்தலுக்கு பா.ஜ.க.வும் காங்கிரஸும் ஆயத்தமாகும் நிலையில், ஆட்டத்துக்கு நானும் ரெடி என ஆம் ஆத்மி கையுயர்த்தியிருக்கிறது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், கடந்த 2017 தேர்தலில் பா.ஜ.க. 99 தொகுதிகளை மட்டுமே வென்று மயிரிழையில் தப்பியது. இன்னும் ஓரடி பின்னால் தள்ளினால் பா.ஜ.க.வைத் தோற்கடித்துவிடலாம் என காங்கிரஸ் மல்லுக் கட்ட முனைகையில்தான் அத்தனை தொகுதி களிலும் போட்டியிடுவது என்ற முடிவோடு ஆம் ஆத்மி அடி யெடுத்து வைத்திருக் கிறது.

ஆம் ஆத் மிக்கு குஜராத் புதிய களம். தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க. வின் சீட்டு எண்ணிக்கைகள் குறைந்துகொண்டே வருவ தும், ஆளும் கட்சிக்கு எதிராக ஆதிவாசிகள், விவசாயிகள், வேலை யில்லாத இளைஞர்களின் அதிருப்திக் குரல்கள் எழுவதும் அதனை நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

gujarat

Advertisment

கல்வி, சுகாதாரத்தில் குஜராத் பின்னணியில் இருப்பதைக் கருத்தில்கொண்டு தரமான கல்வி, சுகாதாரம், குஜராத் மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என வாக்குறுதியளித்திருக்கிறார் கெஜ்ரிவால். காவலர்களில் குறிப்பிட்ட பிரிவினர் சம்பள உயர்வு கேட்டுப் போராடும் நிலையில், "எனக்கு வாக்களியுங்கள் நான் தருகிறேன்' என வரிந்துகட்டுகிறார்.

பத்திரிகையாளரான இசுதான் காட்வியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, குஜராத் எங்கும் பம்பரமாகச் சுழன்றுவருகிறது ஆம் ஆத்மி.

துரதிர்ஷ்ட வசமாக, ஆம் ஆத்மிக்கு தேர்தலை எதிர் கொள்ளத் தேவையான குஜராத் முழுமைக்குமான தேர்தல் கட்டமைப்பு இன்னும் இல்லை. திடீரென வந்து களத்தில் நின்று வாக்குக் கேட்டால், எத்தனை ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள் என்பது முக்கியமானது. பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலையான பிரச்சனையையோ, முஸ்லிம்களின் பிரச்சனைகளையோ ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் தொடவே மறுக்கிறது.

ஆக, பா.ஜ.க.வைப்போல சிறுபான் மையர் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு இலக்குகள் இல்லை.

காங்கிரஸுக்கு நம்பிக்கை யளிக்கும் விவகாரம், ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் வெல்லும் இடங்கள் 59, 61, 77 என அதிகரித்துவருவதுதான். அதிலும் 2017 தேர்தலில் காங்கிரஸ் 41.4 சதவிகித வாக்குகளைப் பெற்றி ருந்தது. இன்னும் சில சதவிகித வாக்கு களைப் பெறுவதற்கான வியூகத் தைப் பின்பற்றினாலே காங்கிரஸ் வெற்றியைத் தட்டிப் பறித்துவிடலாம்.

தேர்தல் களத்தில் பா.ஜ.க.வும் ஆம் ஆத்மியும் அசத்திக்கொண்டிருக்க, காங்கிரஸைக் களத்திலேயே காணவில்லை. ராகுல் காந்தியோ பாரத ஒற்றுமை யாத்திரையில் மும்முரமாயிருக்கிறார். காங்கிரஸ் பெருந்தலைகள் பிரச்சாரத்தில் வேகம்காட்டாதது பலவீனம்.

குஜராத் வாக்குகளை சமூகத்தின் அடிப்படை யில் பிரித்தால், அதில் இதர பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் மட்டும் 48%. எனவே ஓ.பி.சி., தலித், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியோர்களின் வாக்கு களைப் பெறுவதற்காக சைலண்டாக வேலைசெய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். பர்லிதபி நர்மதா நதி இணைப்புத் திட்டம் மோடியின் விருப்பத்துக்குரிய திட்டமாக இருந்தது. இருந்தும் ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து ராகுல் அறிவித்த போராட்டத்தால், இதுவரை அதை பா.ஜ.க.வால் செயல்படுத்த முடியவில்லை.

களத்தில் ஆம் ஆத்மியும் நுழைந்துவிட்ட நிலையில் வெற்றி வேண்டுமெனில் காங்கிரஸின் சைலண்ட்மோடு செயல்பாடுகள் மட்டுமே போதாது, செயல்வேகம் தேவை என்பதே யதார்த்தம்.

ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு, பிரதமர் மோடி முதல் பா.ஜ.க.வின் பெருந்தலைகளின் பிரச்சாரம், தட்டுப்பாடில்லாத கட்சி நிதி எல்லாம் இருக்கிறது. ஆனாலும் வருடத் துக்கு வருடம் பா.ஜ.க. வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை இறங்கு முகத்தில்.

கடந்த தேர்தலில் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் எனும் மும்மூர்த்தி கள் பா.ஜ.க.வுக்கு எதிரே இறங்கி வேலை செய்தனர். அவர்களில் இருவர் இப்போது பா.ஜ.க.வில். காங்கிரஸின் வியூகத்தைப் புரிந்து கொண்ட மோடி ஓ.பி.சி., தலித்து கள், ஆதிவாசிகள் பக்கம் கட்சியின் கவனத்தைத் திருப்ப கட்டளை யிட்டிருக்கிறார். அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள், காவலர் கள், இளைஞர்கள் அனைவருக்கும் வாக்குறுதிகளை அளித்து கோபம் தணிவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க கட்சியை முடுக்கிவிட்டிருக்கி றார் மோடி.

சட்டமன்றத் தேர்தலில் 41% ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் உள்ளாட்சித் தேர்தலில் 26.9 சதவிகிதமாக சரிந்ததில் மகிழ்ச்சியிலிருக்கிறது பா.ஜ.க. இந்தத் தேர்தலிலும் வெற்றி எட்டிப்பிடித்துவிடும் தூரம்தான் என்று தொண்டர்களை விரட்டுகிறது பா.ஜ.க.

ஆனால், குஜராத் அரசுக்கு எதிராக 32 பெரிய போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், அரசு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு ஒத்திவைப்பு போன்ற விஷயங்கள் மக்களிடையே அதிருப்தியை அதிகரித்திருக்கின்றன. இந்தியாவிலேயே அதிக மின்கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக குஜராத் திகழ்கிறது. திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதலால், நியாயமான இழப்பீடு கிடைக்காத பிரிவினர் கொதிப்பில் இருக்கின்றனர்.

மோர்பி நகரின் தொங்கு பாலம் அறுந்து 150 பேர் பலி யானது மாநில அரசின் நற்பெயரைக் கெடுத்திருக் கிறது. இத்தனை அகழிகளை கட்சி தாண்டியாக வேண்டும்.

குஜராத்தின் கோட்டைக் கதவுகள் செல்லரித்தி ருப்பது உண்மைதான். என்றாலும் காங்கிரஸ், ஆம் ஆத்மியால் அதனை அகற்றமுடியுமா என டிசம்பர் 8-ஆம் தேதிதான் தெரியும்!