கொரோனாவுக்காக மக்களை ஊரடங்கில் வைத்தது போதாதென்று, பத்திரிகை சுதந்திரத்தையும் கம்பிகளுக்குப் பின்னால் வைத்துவிடவேண்டுமென்று ஆளும் அரசுகள் நினைக்கின்றன போலும். குஜராத்தில் நடந்திருக்கும் சம்பவம் அதைத்தான் உறுதிசெய்கின்றது.
குஜராத்திலிருந்து வெளிவரும் பேஸ் ஆப் நேஷன் (Face of Nation) பத்திரிகை யின் எடிட்டர் தவால் படேலின் கொரோனா சோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறது அகமதாபாத் க்ரைம் பிராஞ்ச் போலீஸ். போலீஸ் எதற்கு கொரோனா சோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறது?
கொரோனா தொற்று பரவலாகக் காணப்படும் நிலையில், யாரையும் கைதுசெய்து சிறைக்குக் கொண்டுசெல்லும் முன்பு அவருக்கு கொரோனா சோதனை நடத்தவேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதுதான் காரணம். சரி, தவால் படேலை ஏன் கைது செய்யவேண்டும்?
தவால் படேலின் பேஸ் ஆப் நேஷன் அடிப்படையில் ஒரு வாரப் பத்திரிகை. கொரோனா ஊரடங்கு காரண மாக புத்தகத்தை அச்சிட்டு விற்பதில் இருக்கும் இடையூறு காரணமாக, ஆன் லைன் போர்ட்டலாக மட்டும் நடத்தி வருகிறார். அவரது வலைத்தளத்தில் மே 7-ஆம் தேதி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி குறித்து ஒரு செய்தி வெளியானது.
கொரோனா நோயாளிகள் எண் ணிக்கையிலும், மரண எண்ணிக்கையிலும் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது குஜராத். கொரோனா விவகாரத்தை சரிவர நிர்வகிக்காததால் குஜராத் பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்ய பா.ஜ.க. தலைமை, முதல்வர் பொறுப்பிலிருந்து விஜய் ரூபானியை மாற்றிவிட்டு மன்சுக் மாண்டவியாவை அந்தப் பொறுப்பில் அமர்த்துவது பற்றி யோசித்துவருகிறது. அதுபற்றி விவாதிக்க மன்சுக்கை டெல்லிக்கு அழைத்திருக்கிறது என்கிற தொனியில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த செய்திக்கு எதிராக மே 8-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து தவால் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது அகமதாபாத் க்ரைம் பிராஞ்ச். மே 11-ஆம் தேதி கான்ஸ்டபிள் மூலம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தவால். அடிப்படை ஆதாரமற்ற செய்திமூலம், மாநிலத்தில் நிலையின்மையையும், மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்த முயற்சிசெய்ததாக காவல்துறை கூறுகிறது.
ஆனால், இதே செய்தியை வேறு சில ஊடகங்களும் பிரசுரித்துள்ளன. அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஒருவரைக் கைதுசெய்து பிறரை அச்சுறுத்த நினைக்கிறது குஜராத் அரசாங்கம்.
""இதுதான் பி.ஜே.பி.யின் நிஜ முகம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது தணிக்கைக்கு எதிராக போராடியதாகச் சொல்லும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஊடகத்துறை மீது நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது'' என்கிறார் குஜராத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. மிஸ்ரா.
பாவம் குஜராத் முதல்வர், கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை… ஊடகங்களையாவது கட்டுக்குள் வைக்க நினைக்கிறார்.
- க. சுப்பிரமணியன்