பாலியல் கொடுமையால் அதிக பரபரப்பு ஏற்படும் காலம் இது. இந்த காலகட்டத்தில் போக்சோ சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபர், பல ஆண்டுகளாக கைது செய்யப்படாமல் இருக்கிறார் என்கிற ஆச்சரியமான தகவல் நமக்குக் கிடைத்தது.
இத்தனைக்கும் அந்த நபர் தலைமறைவாக இல்லை. ஒரு எம்.எல்.ஏ.வுடன் சுற்றித் திரிந்து வருகிறார். அவர்மேல் அ.தி.மு.க. அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.வும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் பெயர் வேங்கைவாசல் ஜெயசந்திரன். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் போடப்பட்ட நாள் 04-09-2020. பொதுவாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது. சிறைக்குச் சென்ற பிறகுதான் ஜாமீன் பெற முடியும்.
ஒரு பெண்ணை 16 வயது முதல் 19 வயது வரை செக்ஸ் டார்ச்சர் செய்துவருகிறார் ஒருவர். அந்தப் பெண்ணின் பெயர் சுனைனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்டார், சுபின்பாபு என்பவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை காட்டி பணம் பறித்தார். அதன்பிறகு இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார். இவையெல்லாம் 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டுவரை நடந்தது.
2017-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணிற்கு 16 வயது. 2019-ஆம் ஆண்டு 19 வயது. 2020-ஆம் ஆண்டு சுபின்பாபு மற்றும் அவரது நண்பர்களான சுஜின்வர்கீஸ் மற்றும் வேங்கைவாசல் ஜெயசந்திரன் ஆகியோர் இந்தப் பெண்ணிடம் சுபின்பாபுவிடம் பழகு என மிரட்டுகிறார்கள். அதை எதிர்த்து இந்தப் பெண் புகார் செய்கிறார்.
சுபின்பாபு, சுஜின்வர்கீஸ் வேங்கைவாசல் ஜெயசந்திரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதில் வேங்கைவாசல் ராஜேந்திரன் மட்டும் கைது செய்யப்படவில்லை என்கிறது காவல்துறை பதிவேடுகள்.
"ராஜேந்திரன் தற்போது சோளிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ் குரூப்பில் சுற்றிவருகிறார்' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுதாவிடம் கேட்டோம்.
"நான் புதிதாக வந்திருப்பவர். எனக்குத் தெரியவில்லை'' என்றார். நாம் வேங்கைவாசல் ஜெயசந்திரனை தொடர்புகொண்டோம். அவர் பதில் அளிக்கவில்லை. சோளிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ், வேங்கைவாசலில் ஜெய் என்பவர் எனக்காக தேர்தல் வேலை பார்த்தார். அவர் மீது போக்சோ வழக்கு இருந்தால் கைது செய்யவேண்டும்'' என உறுதியாகச் சொல்கிறார்.