கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2019-2020 மற்றும் 2020-2021ஆம் கல்வி யாண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதால், தனித்தேர்வு எழுதும் அரியர் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல், மேலே படிக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

st

இதுபற்றி நம்மிடம் பேசிய 12-ஆம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள் சிலர், 2019 மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.97 லட்சம், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.87 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர். 2019-ல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், 2019 ஜூன் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லை. 2020 மார்ச் மாதம் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினோம். ஆனால் அப்போது கொரோனா முதல் அலை பரவலால் தேர்வு நடத்தவில்லை. தனித்தேர்வர்களைத் தவிர மற்றவர்களை பாஸ் செய்துவிட்டது அரசு. பாஸ் செய்யப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். தனித்தேர்வர்களுக்கு 2020 அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தியது பள்ளிக்கல்வித்துறை. அப்போது 10-ஆம் வகுப்பு தேர்வை 39 ஆயிரம் பேரும், 12-ஆம் வகுப்பு தேர்வை 40 ஆயிரம் பேரும் எழுதினோம். முடிவில் 10-ஆம் வகுப்பில் 10,000 பேரும், 12-ஆம் வகுப்பில் 5,000 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தார்கள், மற்றவர்கள் பெயிலானார்கள். பெயிலானவர்கள் 2021 மார்ச் மாதம் நடக்கும் பொதுத்தேர்வின்போது தனித் தேர்வராக தேர்வெழுத லாம் என 2020 நவம்பர் மாதம் தேர்வுக்கட்டணம் செலுத்தினோம். அப்போது தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள், 2021 ஜனவரி மாதம் சிறப்பு தனித்தேர்வு அனுமதி திட்டம் மூலமாக தேர்வுக்கட்டணத் தோடு தனியாக 1000 ரூபாய் சிறப்புக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தார்கள். கடந்த மார்ச்சில் சுமார் 50 ஆயிரம் பேர் தனித்தேர்வர்களாக தேர்வெழுத இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையால் பள்ளிப் பொதுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டது அரசு. ஆனால் தனித்தேர்வர்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை.

மார்ச் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையெனில் உடனடியாக ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்த காரணமே தடையில்லாமல் படிப்பு தொடரவேண்டும் என்பதற்காகத்தான். கொரோனா கட்டுக்குள் வராததால் கடந்த அக்டோபர் மாதம் தான் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களாலும் கல்லூரியில், 11-ஆம் வகுப்பில் சேரமுடியவில்லை. தோல்வியடைந்தவர்கள் இந்தாண்டு தேர்வு எழுதி வெற்றிபெற்று கல்லூரியில் சேர நினைத்தோம், அதுவும் முடியாதுபோல. தமிழக முதல்வர் எங்கள் நிலையை உணர்ந்து எங்களுக்கு உடனடியாக தேர்வை நடத்தி கல்லூரி சேர வழிசெய்ய வேண்டும்'' என்கிறார்கள்.

-து.ராஜா