Skip to main content

கோட்டையை நடுங்க வைத்த குட்கா ரெய்டு!

ம்.டி.எம். என்கிற குட்கா போதை பாக்கை தமிழகத்தில் விற்க அனுமதித்த தமிழக அரசுக்கே மொத்தமான டைனமைட்டாக மாறியுள்ளது என அலறுகிறார்கள் நடுநடுங்கும் கோட்டை வட்டாரத்தினர்.

gutka-scandalஅமைச்சர்கள் உள்பட எல்லோரையும் அலற வைத்தது டெல்லியைச் சேர்ந்த சி.பி.ஐ.யின் டி.ஐ.ஜி.யான என்.கே.சின்ஹா தலைமையில் வந்த 400 பேர் கொண்ட சி.பி.ஐ. படைதான். பொதுவாக வருமானவரித்துறைதான் பல இடங்களில் ரெய்டு நடத்தும். நூற்றுக்கணக்கான இடங்களில் கூட வருமானவரித்துறை ரெய்டு செய்த நிகழ்வு சசிகலா குடும்பத்தினர் மீது பாய்ந்தபோது நடந்தது. ஆனால் சி.பி.ஐ. அதுபோல ரெய்டுகளை நடத்தாது. சி.பி.ஐ. எங்கு ரெய்டு நடத்தினாலும் அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் கட்டாயம் இருக்கும். அந்த வழக்கத்தை மீறி முப்பத்தைந்து இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதுதான் தமிழக அரசை அலற வைத்த விவகாரம் என்கிறார்கள் சி.பி.ஐ. பற்றி நன்கு அறிந்த அதிகாரிகள்.

கடந்த 5-ம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், ஜெ. காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, காவல்துறை அதிகாரிகளான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், விழுப்புரத்தில் ஏ.சி.யாக இருக்கும் சங்கர், தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சம்பத், செங்குன்றத்தில் ஏ.சி.யாக இருந்த மன்னர் மன்னன், அத்துடன் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய எக்சைஸ் எனப்படும் வரி வசூலிப்புத்துறை அதிகாரிகள், மாநிலத்தின் வணிகவரித்துறை அதிகாரிகள் என மொத்தம் முப்பத்தைந்து இடங்களில் உள்ள வீடுகளை குறிவைத்து பாய்ந்தது சி.பி.ஐ. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு போனபோது அவர் அரை தூக்கத்தில் இருந்து எழுந்து ஓடிவந்தார்.

""நான் அமைச்சர். இன்று பத்தரை மணிக்கு முதல்வருடன் ஒரு குழந்தை ஒப்படைப்பு நிகழ்ச்சி இருக்கிறது. அதற்குப் போக தயாராகி வருகிறேன்'' என்றார். ஒன்றும் செய்ய முடியாது என அவரை அமர வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் ""நீங்கள் அமைச்சர் என்பதால் உங்களை அலைபேசி உபயோகிக்க அனுமதிக்கிறோம்'' என்றனர்.

விஜயபாஸ்கர் உடனடியாக புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு போன் செய்து அங்கு ரெய்டுக்கு வந்துள்ளார்களா என விசாரித்தார். சென்னையில் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு போன் போட்டார். தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களிடம் நடந்த விவரங்களை சொன்னார். அவரது தொலைபேசி சி.பி.ஐ.யின் ஒட்டுக்கேட்பு எந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. அவரை பேசவிட்டு அவரது வீட்டை அங்குலம் அங்குலமாக தேட ஆரம்பித்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

gutka-scandalகாவல்துறை டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரனும் முன்னாள் சென்னை மாநகர கமிஷனரான ஜார்ஜும் சென்னை அம்பத்தூருக்கு பக்கத்தில் உள்ள நொளம்பூர் மற்றும் முகப்பேர் பகுதியில்தான் வசிக்கின்றனர். டி.கே.ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றபோது அவர் பணிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். "இன்று ஒருநாள் உங்களுக்கு மட்டும் மத்திய அரசு விடுமுறை அளித்துள்ளது' என ஜோக் அடித்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். "தமிழக வரலாற்றிலேயே சி.பி.ஐ. ரெய்டுக்குள்ளாகும் முதல் டி.ஜி.பி. நீங்கள்தான்' என சொன்னபோது ராஜேந்திரனின் முகம் இருண்டுபோனது.

ராஜேந்திரன் எங்கே அதிகாரியாக பணியாற்றினாலும் அவருடைய உடன்பிறவா சகோதரன் போல பணியாற்றக் கூடியவர் சங்கர். அவர் சென்னை கமிஷனராக இருந்தபோது மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்தார் சங்கர். ராஜேந்திரன் டி.ஜி.பி. ஆன பிறகு அவரை விழுப்புரம் உதவி ஆணையாளராக மாற்றினார் ராஜேந்திரன். ராஜேந்திரன் வீட்டில் நுழையும் போதே விழுப்புரம் சங்கர் வீட்டில் நுழைந்து விட்டது சி.பி.ஐ.

madhavrao.jpg சங்கரிடம், ""நீங்கள் விழுப்புரத்தில் விவசாய நிலம் வைத்திருக்கிறீர்கள். அது உங்கள் நிலமா? அதற்கான ஆவணங்களை காட்டுங்கள்?'' என கேட்க, முதலில் பதிலளிக்க மறுத்து விட்டார் சங்கர். ""நாங்கள் சி.பி.ஐ. எங்கள் விசாரணை வேறு மாதிரியாக இருக்கும்'' என சொல்ல, ""அந்த நிலம் என்னுடையது இல்லை'' என சொல்லியிருக்கிறார் சங்கர். அந்த தகவல் விழுப்புரம் சென்றவர்கள் மூலம் டி.கே.ராஜேந்திரனின் வீட்டை ரெய்டு செய்து கொண்டிருந்த டீமுக்கு சொல்லப்பட அவரது வீட்டிலிருந்த கம்ப்யூட்டர்களையும் ஆராய்ந்தார்கள் என்கிறார்கள் ரெய்டு நிலவரம் அறிந்தவர்கள்.

ஜார்ஜ் வீட்டுக்கு போகும் போது, ""ஐயா வீட்டில் இல்லை'' என மலையாளத்தில் பதில் வந்தது. ""ஐயா எங்கே?'' என மலையாளிகளான சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்க, ""திருவனந்தபுரம்'' என பதில் வந்தது. அவரைத் தேடி திருவனந்தபுரத்திற்கே ஒரு டீம் சென்று அவரை சுற்றி வளைத்தது. ஜார்ஜின் வீட்டில் நுழைந்த அதிகாரிகள் அந்த வீட்டில் இருந்த 35 ஆடம்பர அறைகளை பார்த்து மிரண்டு போனார்கள். நட்சத்திர விடுதிகளை போல இருந்த அந்த அறைகளில் ஒரு அறையை ஒரு நாள் மட்டுமே ஜார்ஜ் பயன்படுத்துவார் என்பதில் ஆரம்பித்து, டி.கே.ராஜேந்திரனைப் போலவே அவரது சொத்துப் பட்டியலும் நீண்டு கொண்டே போனதை நோட் செய்தனர்.

ஜார்ஜ் வீட்டில் மட்டும் 25 மணி நேரம் ரெய்டு நடத்தி களைத்துப் போனோம். இரு ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும் தனியாக சொத்துக் குவிப்பு வழக்கே தொடரலாம் என்கிறார்களாம் சி.பி.ஐ. தரப்பினர்.

எம்.டி.எம். குட்காவின் உரிமையாளர்கள் மாதவ்ராவ், உமாசங்கர், சீனிவாசன் ஆகியோரின் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வீடுகளில் சோதனை போட்ட அதிகாரிகளுக்கு அள்ள அள்ளக் குறையாத லஞ்சங்களின் குறிப்புகள் கிடைத்தன. வருமான வரித்துறை 2016-ம் ஆண்டு முதன் முதலாக மாதவ்ராவின் சென்னை செங்குன்றம் பகுதியிலுள்ள குடோனை சோதனையிட்டது. அந்த சோதனையின் போது மாதவ்ராவின் அலுவலக உதவியாளராக வேலைபார்த்த கமலா வீட்டில் ஒரு டைரி கிடைத்தது. அந்த டைரியில்தான் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவரங்கள் இருந்தன.

கடந்த மே மாதம் இந்த குட்கா வழக்கு சி.பி.ஐ. வசம் வந்ததும் கடந்த வாரம் மாதவ்ராவை சி.பி.ஐ. விசாரித்தது. அவர் அந்த டைரியில் இருந்த தகவல்கள் உண்மை என ஒத்துக் கொண்டார். (இதை நக்கீரன் தனது ராங்-கால் பகுதியில் ஸ்பெஷல் தலைப்புடன் பதிவு செய்துள்ளது) டைரியில் இருந்ததை விட, கடந்த வாரம் சி.பி.ஐ.யில் சொன்னதை விட அதிகமான விவரங்கள் மாதவ்ராவ் மற்றும் அவரது பங்குதாரர்களான உமாசங்கர், சீனிவாசன் ஆகியோர் வீடுகளில் நடத்திய ரெய்டில் சி.பி.ஐ.க்கு கிடைத்தது.

இவ்வளவு நடந்தபிறகும் மாதவ்ராவ் தனது குட்கா வியாபாரத்தை கைவிடவில்லை. 2016ஆம் ஆண்டு அவரது தொழிற்சாலையையும் குடோனையும் வருமான வரித்துறை சீல் வைத்து அதற்குப் பிறகு அந்த வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்தது. ஆனால் அதையெல்லாம் மீறி மாதவ்ராவ் தனது எம்.டி.எம். எனப்படும் குட்காவை விற்று வந்திருக்கிறார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் தற்பொழுது அமைச்சர்களாக உள்ள இரண்டு பெருந்தலைகள் துணை நிற்கிறார்கள். ஜெ. காலத்தில் மாதவ்ராவுக்கு உதவிய வணிகவரித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சென்ட்ரல் எக்சைஸ் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் மாதவ்ராவிடமிருந்து அவரது தரகர்களான ராஜேஷ், நந்தகுமார் ஆகியோர் பணம் கொடுக்கிறார்கள் என சி.பி.ஐ. கண்டுபிடித்து அதிர்ந்து போனது.

உடனடியாக மாதவ்ராவ், உமாசங்கர், சீனிவாசன் ஆகியோரையும் அவரது தரகர்களாக லஞ்சத்தை பரிமாறும் ரமேஷ், நந்தகுமார் ஆகியோரையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து உட்கார வைத்தது சி.பி.ஐ. அவர்கள் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகளான செந்தில்குமார் மற்றும் பாண்டியனையும் சி.பி.ஐ. அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு சி.பி.ஐ. அழைத்தபோது, "சி.பி.ஐ. கைது நடவடிக்கையை தொடங்கிவிட்டது என நடந்ததை சொன்னார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

கைது செய்யப்பட்டவர்களை புழல் சிறைக்கு அனுப்பி வைத்த சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அடுத்தது எனக் கேட்டோம். ""நாங்கள் இந்த வழக்கை சீரியஸாக எடுத்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. இப்பொழுதுதான் முதல் கட்ட ரெய்டை முடித்துள்ளோம்.

அதிலும் மாதவ்ராவின் டைரியில் இடம்பெற்ற அனைத்து போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கும் செல்லவில்லை. மாதவ்ராவின் டைரியில் இடம் பெற்றவர், ஜார்ஜ் கமிஷனராக இருக்கும் போது நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை கூடுதல் கமிஷனராக இருந்த வரதராஜ், மாதவ்ராவின் குடோன் அமைந்திருந்த வடசென்னை காவல்துறையின் இணை கமிஷனராக இருந்த தினகரன், இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குற்றப்பிரிவில் துணை கமிஷனராகவும் தற்பொழுது விழுப்புரம் எஸ்.பி.யாகவும் உள்ள ஜெயக்குமார் ஆகியோரை நாங்கள் தொடவேயில்லை.

சி.பி.ஐ.யில் மாதவ்ராவ் மேலும் பல தகவல்களை சொல்லியிருக்கிறார். அவற்றில் பல தற்பொழுது அவர் நடத்தி வரும் குட்கா விவகாரத்தில் தொடர்புடைய லஞ்சம் பற்றிய தகவல்கள். அது குறித்தும் விசாரித்து வருகிறோம். மாதவ்ராவ் தொடர்பானவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம் என்கிறார்கள்.

சி.பி.ஐ.யின் அதிரடி பாய்ச்சல் ஒரு பெரிய கலக்கத்தையும் நடுக்கத்தையும் அமைச்சர்கள் முதல் கோட்டை அதிகாரிகள் வரை உருவாக்கியுள்ளது. சி.பி.ஐ. ரெய்டு நடந்த 5-ம் தேதி இரவு 8 மணிக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் விஜயபாஸ்கர் அடங்கிய ஒரு கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டினார்.

அதில் ""வேண்டுமென்றால் ராஜினாமா செய்கிறேன்'' என டி.ஜி.பி. ராஜேந்திரன் முன்வந்திருக்கிறார். அதை உணவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி வேண்டாம் என பேசியிருக்கிறார் என்கிறது காவல்துறை வட்டாரம். அமைச்சர் விஜயபாஸ்கர் "நான் இந்த ரெய்டை சட்டப்படி சந்திப்பேன். காய்த்த மரம்தான் கல்லடிபடும்' என அறிக்கை விடுகிறார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் விஜயபாஸ்கரும் டி.ஜி.பி. ராஜேந்திரனும் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவர், ""இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் ராஜினாமாவுக்கான கட்டாயம் ஏற்படும். அது சாத்தியமா எனத் தெரியவில்லை. அதையும் தாண்டி ராஜினாமா செய்ய எடப்பாடி வறபுறுத்துவாரேயானால் ஒட்டுமொத்த ஆட்சியும் கவிழும் அபாயம் உள்ளது. குட்கா விவகாரத்திற்குள் அத்தனை ரகசியங்கள் இருக்கின்றன'' என்கிறார் அதிரடியாக.

-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ஸ்டாலின் & அசோக்

--------------------------------
ஊழலின் கதை!

2013 -குட்காவிற்கு தடை என அறிவிக்கிறார் ஜெ.

2016 -வருமான வரித்துறை மாதவ்ராவின் தொழிற்சாலையில் ரெய்டு நடத்துகிறது. அவர், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் குட்கா விற்பனைக்காக லஞ்சம் கொடுத்த டைரிகளை கண்டுபிடிக்கிறது.

2016 -ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணா இந்த டைரி பற்றி தலைமைச் செயலாளருக்கு கடிதம்

2016 -பாலகிருஷ்ணா கடிதம் உண்மை என டி.ஜி.பி. அசோக்குமார் ஜெ.வுக்கு கடிதம்

2016 -அசோக்குமாரை தூக்கியடிக்கிறார் ஜெ.

2017 -தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் ரெய்டு

2017 -குட்கா ஊழலில் எனக்கு தொடர்பில்லை என ஜார்ஜ் கடிதம்

2018 -குட்கா ஊழல் குறித்து பாலகிருஷ்ணா எழுதிய கடிதம் காணவில்லை -கிரிஜா வைத்தியநாதன் சாட்சியம்

2018 -போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா அறையில் பாலகிருஷ்ணா கடிதத்தை ஐ.டி. கண்டுபிடிக்கிறது.

2018 -லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட் உத்தரவு


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்