கோவையில் புதிய மேம் பாலத் திறப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி.கோபாலின் கரங்களை வாஞ்சையுடன் பற்றி, அழைத்துச்சென்று அருகிலேயே வைத்துக்கொண்டு அவரது கரங்களாலேயே பாலத்தை திறக்க வைக்க, மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் மேற்கு மண்டலத்தில் வாழும் கம்மவார் நாயுடு சமூக மக்கள்.
உலக புத்தொழில் இயக்க மாநாடு, அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்பட்டுள்ள உயர் மட்ட சாலை திறந்து வைத்தல், உயிர் அமைப்பு - சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் பொற்கொல்லர் பூங்கா அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக கடந்த வியாழக்கிழமையன்று கோவை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்கக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி உள்ளவர், உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக்கூடியவர். ஆனால், எடப்பாடியார், ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தவர். ‘சின்னம்மா, சின்னம்மா’ என்று சொன்னவர், இப்போது அப்படிச் சொல்வ தில்லை. நோயாளி என்று சொல்வதற்குப் பதிலாக மருத்துவப்பயனாளி என்று சொல்வதில் என்ன தவறு? காலத்திற்கு ஏற்ப மொழி வளர்ச்சி அவசியம். ஆனால், எடப்பாடியாருக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லும் அவருடைய தமிழ் ஆற்றல் அவ்வளவுதான். முதல்வரைக் குறை கூறுவதற்குமுன் யோசிக்க வேண்டும். மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராஜர், நெல்லையில் காயிதேமில்லத் என அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டிமுடித்துள்ளோம். செம்மொழி பூங்காவை கலைஞர் அறிவித்தபோது, அதைச் செயல் படுத்தாதவர்கள் நீங்கள். ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர். அ.தி.மு.க. அறிவித்த திட்டமாக இருந்தாலும், 5 சதவீதப் பணிகளை மட்டுமே முடித்திருந்தீர்கள். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அ.தி.மு.க.தான்'' என அங்கேயே எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளை விமர்சித்தார் அமைச்சர் எ.வ.வேலு.
அவினாசி சாலை ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை, கோல்டு வின்ட்ஸ் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில், அதற்கு போட்டியாக அந்தப் பாலம் முடியும் உப்பிலிபாளையம் பகுதியில் வரும் வாகன ஓட்டிகளை, அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி புகைப்படத்துடன் வரவேற்று இனிப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாக, காவல்துறை டென்ஷனில் இருந்தது. முன்னதாக கொடிசியாவில் அமைக்கப்பட்ட உலக புத்தொழில் இயக்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "இங்கு அமைக்கப் பட்டிருக்கும் கண்காட்சி அரங்கத்தில் 21 நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ள துடன், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இங்கே அரங்கங்கள் அமைத்துள்ளனர். உலக புத்தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுகுறு தொழில்கள் வளர்ச்சிக்கு தமிழக அரசு சிறந்த அரசு என அமைச்சர் அன்பரசன் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளார்'' என அவருக்கு புகழாரம் சூட்ட, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
அடுத்த நிகழ்வாக, அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலையை திறந்துவைக்க வந்த முதல்வர், அங்கே காத்திருந்த ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி.கோபால் அருகில் சென்றார். அவரது கைகளை வாஞ்சையுடன் இறுகப்பற்றி நலம் விசாரித்தவர், அவரை விடாமல் தன் பக்கமே வைத்துக்கொண்டார். பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் எனப் பெயர் வைத்த முதல்வர் ஸ்டாலின், ஜி.டி.கோபாலைக் கொண்டு பாலத்தை திறக்க வைத்தார். சுற்றியுள்ளவர்களுக்கோ வியப்பு.
தொடர்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்றடைந்த நிலையில், மேற்கு மண்டலத்திலுள்ள கம்மவார் நாயுடு சமூக மக்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது சமூக சங்கங்கள் மூலமாக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருவது அரசியலின் புதிய மடைமாற்றமாகக் கருதப்படுகிறது.
அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரோ, "கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையிலிருந்த காரணத்தால் தேர்தல் பொறுப்பாளராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை தி.மு.க. தலைமை அறிவித்தது. தேர்தல் பணிகளை மேற்கொண்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கட்சி இங்கு முழுமையாக முடங்கிக்கிடப்பதை உணர்ந்தார். அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. அதிருப்தி கோஷ்டியினரை நேரடியாக சென்று சந்தித்தார். அப்போது, கழகத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதும், மூத்த கட்சியினர் புறக்கணிக்கப் பட்டதும் தெரியவந்தது. இதனை உடனடியாக கழகத் தலைமைக்கு எடுத்துச்சென்றார் டி.ஆர்.பி.ராஜா.
பின்னர், டி.ஆர்.பி.ராஜாவை தொகுதியி லுள்ள பல்வேறு சமுதாய மக்கள் சந்தித்து அவரவர் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை வைத்தனர். அதில் ஒன்றுதான், கால்நடைகளின் மூலமாக போக்குவரத்து நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மக்களை மோட்டார் வாகனங்களில் பயணிக்கவைத்தவர் ஜி.டி. நாயுடு. அவருடைய பெயரை புதிதாக கோவை அவினாசி சாலையில் கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை.
அந்த கோரிக்கையை உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தற்போது ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர், நாயுடு என்பதை சாதியாகக் கூறி விமர்சனம் செய்தாலும் உலகளவில் ஜி.டி.நாயுடு புகழை பரப்ப "ஜி.டி.நாயுடு' எனப் பெயர் சூட்டவேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறுகின்றனர்.
ஜி.டி.நாயுடு உருவாக்கிய ஒரு பருத்திச் செடியை ஜெர்மனியில் "நாயுடு காட்டன்' என்று அழைக்கிறார்கள். இந்த பாலம் திறப்புவிழாவில் அவரின் மகனை தன் பக்கமே வைத்து, அவரது கையாலேயே பாலத்தை திறக்க வைத்தது கம்மவார் சமூக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அ.தி.மு.க. பக்கமிருந்து அ.தி.மு.க.விற்கு வெற்றியைக் கொடுத்த கம்மவார் சமூக மக்கள், தங்களுக் கென்று அங்கீகாரம் கொடுத்த தி.மு.க. பக்கம் பார்வையைத் திருப்ப 100 சதவிகிதம் வாய்ப்புண்டு. இதன்மூலம் முதல்வர் ஸ்டாலின் சிக்ஸர் அடித்தார் என்றால் மாற்றுக் கருத்தில்லை'' என்கின்றார்.
கோவையிலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் கோவை தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நாயுடு சமூகத்தை சார்ந்தவர்கள் உள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில், இப்பகுதியில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி என்றாலும் நாயுடு மக்கள் தி.மு.க.விடம் இணக்கம் காட்டவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தி.மு.க. இழந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நாயுடு சமூகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தன்னுடைய சொந்த வாக்குச் சாவடியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு முன்னதாக மாவட்ட செயலாளராக இருந்த நா.கார்த்திக் மாற்றப்பட்டு அதே சமுதாயத்தை சேர்ந்த செந்தில் தமிழ்செல்வனை மாவட்ட செயலாளராக நியமித்தது தி.மு.க. தலைமை. "கோவை அவினாசி சாலை, ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வரின் எளிமையான நடைமுறையும், அவரது நற்பண்பும் இந்த சமுதாய மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் இந்த பாலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஆகவே இந்த பாலத்தை உருவாக்கிய பங்கு எங்களையே சேரும் எனப் பேட்டி கொடுத்துவருவது அவர்களது பயத்தை உறுதி செய்துள்ளது'' என்கின்றார் மாநகர தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
உயர்மட்ட மேம்பாலத் திறப்புக்குப் பிறகு வரலாறு மாறும் என்கின்ற நம்பிக்கையுடன் களமாடி வருகிறது மேற்கு மண்டல தி.மு.க. வரலாறு படைக்குமா?