கந்துவட்டி கொடுமையினால் கணவன், மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேரும் கடந்த 2017-ஆம் ஆண்டில் திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக் குளித்து உயிரிழந்தார்கள். தமிழகத்தையே உலுக்கி யெடுத்த இந்த சம்பவத்திற்கு பின்னர், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஒரு தாலுகா அளவில் வெள்ளிக்கிழமைதோறும் குறிப்பிட்ட கிராமங்களில் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. அதே போல் மாதம்தோறும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் கிராமங்களில் குறை கேட்பு முகாம் நடத்தப்படு கிறது. இது இல்லாமல் அம்மா குறைகேட்பு முகாம், முதலமைச்சர் சிறப்பு குறைகேட்பு முகாம், திங்கள் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு முகாம் என இப்படி ஏகப் பட்ட குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், மக்களின் குறைகள் மட்டும் தீர்க்கப்படுவதேயில்லை. முகாம்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது பிரச்சினைகள் தீர்க்கப் பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று தீக்குளிக்கும் அளவுக்கு ஏன் போகிறார்கள்?
விழுப்புரம் போலீஸ் வானூர் தாலுகா வாழபட் டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் தன் மகள் ஓவியா, மகன் யுவராஜ் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்துள்ளனர்.
வாழபட்டாம்பாளை யத்தில் ஒரு எஸ்டேட்டில் கார்த்திகேயன் வேலைசெய்து வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது பணியாளர்கள் அனைவருக்கும் எஸ்டேட் நிர்வாகம் விடுமுறை அளிக்காமல் வேலைக்கு வரச்செய்துள்ளனர். இதைக் கண்டு கோபமுற்ற தொழிலாளர்கள் இதை புகாராக எழுதி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவும், அது சம்பந்தமாக எஸ்டேட் நிர்வாகத்திடம் விசாரணை நடந்துள்ளது .
இதற்கு காரணம் கார்த்திகேயன்தான் என்று தெரியவந்ததால், அவரை வேலையை விட்டு நிறுத்தினர். இதனால் பசி பட்டினியால் வாடிய கார்த்திகேயன், தொழி லாளர் நல ஆணையம் முதல் மாவட்ட ஆட்சியர்வரை பலருக் கும் கடந்த 5 ஆண்டுகளாக புகார் அனுப்பியுள்ளார்; நேரிலும் கொடுத்துள்ளார். ஆனால் யாரும் அவரது பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. இதனால் மனம் வெறுத்துப்போய், தன் குழந்தை களோடு 30-12-2019 அன்று ஆட்சியர் அலுவல கம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அன்றே விக்கிர வாண்டி தாலுகா வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி மணிமேகலை இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்கள். அவர்களையும் போலீஸ் கைது செய்துள்ளது.
கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கிய பட்டா நிலத்தை பக்கத்து நில உரிமையாளர் அபகரித்துக் கொண்டாராம். இது சம்பந்தமாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பல புகார்களை கிருஷ்ணமூர்த்தி காவல்துறை முதல், ஆட்சியர் வரை கொடுத்துள்ளார். ஆனால் யாரும் புகார் சம்பந்தமாக விசாரணை செய்து அவரது பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. இதையடுத்தே கிருஷ்ணமூர்த்தி தீக்குளிக்கும் முயற்சியில் மனைவியோடு இறங்கியுள்ளார். அவரை கைது செய்த போலீஸ் கார்த்திகேயனுடன் சேர்த்து இருவரையும் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பி உள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, "இது போன்ற தவறான வழிகாட்டுதலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வருவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேற்படி சம்பவம் போன்றே கடந்த 8-10-2019 அன்று இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினரோடு தீக்குளிக்க முயன்று போலீசாரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டவர் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். அந்த மணிகண்டனின் பிரச்சினை அதன் பிறகாவது தீர்த்து வைக்கப் பட்டதா? என அவரிடம் கேட்டோம். ""காவல் துறை, வட்டாட்சியர் என பல அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்தேன். யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. இந்த பிரச்சினை தீராததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதால் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்''’என்கிறார் விரக்தியுடன்.
"குறைகேட்பு முகாம்களெல்லாம் எண்ணிக்கை காட்டுவதற்காகவே நடத்தப்படுகின்றன. இதனால் அரசின் பணம் விரயமாகிறது'’என்று வெடிக்கிறார் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த சி.பி.ஐ. கம்யூனிஸ்ட் பிரமுகர் ஆறுமுகம்.
அவர் மேலும், ""அரசு அதிகாரிகள் காலுக்கு தகுந்த செருப்பை வாங்குவதை விட்டுவிட்டு செருப்புக்கு தகுந்த காலை வெட்டுவது போல மக்கள் குறைகளை தீர்க்காமல் அவர்களை சிறைக்கு அனுப்பியது கண்டிக்கத்தக்கது. இதற்காக எங்கள் கட்சி சார்பாக விரைவில் ஒரு போராட்டம் நடத்த இருக்கிறோம்''’என்கிறார்.
கைது சம்பவம் இப்படி பல்வேறு தரப்பினரையும் பொதுமக்களையும் மிகவும் கோபத்துக்கும் வேதனைக்கும் ஆளாக்கி உள்ளது. இது சரியான நடவடிக்கையா என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ""சிலர் தேவையில்லாமல் அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் இப்படி வருகிறார்கள். அப்படிப்பட்ட வர்களை தடுக்கும் நோக்கில்தான் வழக்கு போட்டுள்ளோம், மக்களை மிரட்டும் நோக்கம் இல்லை''’’என்கிறார்.
-எஸ்.பி.சேகர்