Skip to main content

பாலைவனமாக்கும் பசுமைவழிச் சாலை! -விவசாயத்தை அழிக்கும் முதல்வர்!

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தி, பசுமைவழிச் சாலை திட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது. தூத்துக்குடி போன்று சேலத்திலும் நடத்த சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி.யிடம் மனு அளித்திருக்கிறார் தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் ஏ.பி.மணி என்பவர்.

ஆனால் உண்மை நிலவரமோ வேறு என்கிறார்கள் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள்.

road

சென்னை-சேலம் இடையே 275 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பசுமை வழிச்சாலை உருவாவதாகவும், கிட்டத்தட்ட 11,000 கோடி செலவில் 21 மாத காலத்துக்குள் இந்தப் பாதை அமையவுள்ளதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பசுமைவழிச் சாலை என்னும் பெருமைக்குரியது எனவும் இப்பாதை குறித்து அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

பொதுமக்களும் விவசாயிகளும் இது கார்ப்பரேட் நலனுக்கான சாலை, இந்த திட்டத்தின் பெயரால் 2343 ஹெக்டேர் விவசாய நிலமும், குட்டூர், மஞ்சவாடியின் காப்புக்காடுகள் உள்பட 100 ஹெக்டேர் வனப்பகுதியும் அழிக்கப்பட இருக்கின்றன என குமுறுகிறார்கள். அதற்கேற்ப அரசு வெறும் 6500 மரங்களே வெட்டப்படும் என்கிறது. 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்படுமென எச்சரிக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

பசுமைவழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மெசர்ஸ் ஃபீட்பேக் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இத்திட்டத்தில் நான்கு முக்கிய இடர்ப்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. முதலாவது இப்பாதை சிறுநகரங்கள், கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளை முற்றிலும் அடைத்துவிடும், அதிகளவு நிலப்பரப்பை கையகப்படுத்த வேண்டியிருக்கும், மூன்று இடங்களில் மலைகளைக் குடைந்து இரண்டரைக் கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கவேண்டும், கடைசியாக கிட்டத்தட்ட பதினொரு கிலோமீட்டருக்கு வனங்களை முற்றிலும் அழிக்கவேண்டும்.
road
ஐந்து மாவட்டங்களிலுமாக சுமார் 159 கிராமங்களைச் சேர்ந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை பெரும்பாலும் விளைநிலங்கள். சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை. கார்ப்பரேட்டுகளுக்காக குடிமக்களிடம் அரசாங்கம் வழிப்பறியில் இறங்கலாமா என கொந்தளிக்கின்றனர் திட்டத்தை எதிர்ப்பவர்கள்.

சேலம் மாவட்டத்தில் நிலங்களை இழக்கவிருக்கும் சின்னக்கவுண்டாபுரம், ஏரிக்காடு, ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, குப்பனூர், நிலவாரப்பட்டி, சித்தனேரி உள்ளிட்ட கிராம விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம்.

ராமலிங்கபுரம் சிவகாமி, கவிதா, குப்புசாமி, அய்யம்பெருமாள், ஜமுனாராணி, மலர்க்கொடி ஆகியோர், ""எங்கள் கிராமத்தின் மொத்த வீடுகளும், விளைநிலங்களுமே பறிபோகும் போலிருக்கிறது. சிட்டிசன் படத்தின் அத்திப்பட்டியைப்போல், இனி ராமலிங்கபுரமே சேலம் வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்போலிருக்கிறது. பத்தாண்டுகளுக்குமுன் சேலம்- உளுந்தூர்ப்பேட்டை சாலை விரிவாக்கத்துக்காக அரசு நிலத்தைப் பிடுங்கியது, அப்போது அடிமாட்டு விலை இழப்பீடாக கொடுத்தனர். பலருக்கு இன்னும் செட்டில்மெண்ட் செய்யப்படவில்லை. அந்த துயரம் முடியும்முன்னே, கடன் வாங்கி வீடு கட்டியிருக்கும் மக்களை பசுமைவழிச்சாலை என்ற பெயரில் ஓட ஓட விரட்டுவது என்ன நியாயம்? அரசாங்கமே எங்களைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது''’என்கிறார்கள். ஏரிக்காடு கிராமத்தில் நாகராஜ், மாதேஸ்வரனின் தலா இரண்டரை ஏக்கர் தென்னந்தோப்புகள் கையகப்படுத்தப்படும் பட்டியலில் உள்ளன. “""கடந்த ஆண்டு கடும் வறட்சி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி தென்னைகளைக் காப்பாற்றினேன். இந்த மரங்களை அழித்துவிட்டு அமைக்கும் சாலை எப்படி பசுமைவழிச் சாலையாக இருக்கமுடியும்?''’என ஒருவர் கேள்வியெழுப்ப...

""எத்தனை கோடி இழப்பீடு கொடுத்தாலும் ஏற்க முடியாது. ஜின்டால் கம்பெனி கல்வராயன் மலையிலிருந்து கனிமங்களை வெட்டி சென்னை துறைமுகத்துக்கு கொண்டுசெல்லத்தான் இந்தத் திட்டம். எங்களது நிலம் போனால் மரமேறும் தொழிலாளிகள், மட்டைபொறுக்குபவர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள்''’என்கிறார் மற்றொருவர்.

roadஅதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமியின் 6 ஏக்கர் விவசாய நிலம், அரிசி ஆலை, கிணறு, வீடு எல்லாமே கையகப்படுத்தப்படுகிறது என தெரிந்த நாள்முதல் கடுமையான ரத்தக் கொதிப்பில் படுத்துவிட்டார். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த கவிதா, பன்னீர்செல்வம், அமுதா, மூக்காயி, முத்து, கண்ணன் உள்ளிட்டோர் பேசும்போது, “""இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்னு சொல்றாங்க. எட்டுவழிச்சாலைக்காக விவசாய நிலங்களைப் பறித்தால் முதுகெலும்பு உடைந்துவிடாதா? ஆரம்பத்தில் தரிசு நிலத்தை எடுப்போம் என்றவர்கள், இப்போது மாற்றிப்பேசுகிறார்கள். முதல்வர் எடப்பாடி விவசாய நிலங்களை அழிக்கத்தான் திட்டம்போடுகிறார். அரசு அதிகாரிகள் எங்களுக்கு ஒரு பாட்டில் விஷத்தைக் கொடுத்துவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளட்டும்''’நறுக்கெனப் பேசுகிறார்கள்,

குப்பனூரைச் சேர்ந்த நாராயணனின் தந்தை சிவத்தராஜன், “""ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுஷனைக் கடிச்ச கதையா, எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்ட மக்களுக்கே ஆப்பு வெச்சிட்டாரு''’என்கிறார் சோகமாக.

""159 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கிறோம். எங்களிடம் இதுவரை எந்த அதிகாரியும் பேச வரவில்லை. நாங்கள் எப்படி அவர்களிடம் நிலத்தை ஒப்படைக்கமுடியும். தூத்துக்குடியில் நடந்ததுபோல் எங்களைச் சுட்டுப் பொசுக்கினாலும் பரவாயில்லை. எட்டுவழிச் சாலை எங்களுக்கு வேண்டாம்''’என்கிறார்கள் நிலம் பறிபோய்விடுமோ என்ற தவிப்பிலிருப்பவர்கள்

சேலம் மாவட்ட வருவாய் அலுவலரும், பசுமைவழிச்சாலை திட்ட அதிகாரம் பெற்ற அலுவலருமான சுகுமார், “""அறிவியல்பூர்வ தரவுகளின் அடிப்படையிலும் வாகனப் பெருக்கத்தைக் கருத்தில்கொண்டுமே பசுமைவழிச் சாலைத் திட்டம் வருகிறது. இந்தத் திட்டத்துக்காக வனப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலத்தைவிட இரண்டு மடங்கு வருவாய்த் துறை நிலம் கொடுக்கப்படும். மற்ற பகுதிகளில் நில வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்''’என அரசின் தரப்பை விளக்கினார்.

அரசு, சமாதானப்படுத்திவிட்டு சாலையை உருவாக்கப்போகிறதா… இல்லை… சாலையை உருவாக்கிவிட்டு சமாளித்துக்கொள்ளப் போகிறதா?

-இளையராஜா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்