வழக்கம்போல் கவர்னரின் உரையுடன் துவங்கியிருக்கிறது இந்தாண்டுக்கான சட்டப் பேரவைக் கூட்டம். எட்டாம் தேதிவரை நடக்கும் இக்கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை மீதான விவாதத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான பல்வேறு பிரச்சனைகளை எழுப்பத் திட்டமிட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
தமிழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் புதிய அறிவிப்பு களுடனும் கவர்னரின் உரை இருக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ரேசன் அட்டைதாரர் களுக்குப் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கப்படும் என்கிற அறிவிப்பைத் தவிர மற்றபடி ஏமாற்ற மளிப்பதாகவே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதேசமயம், எடப்பாடி அரசின் நிதி நெருக்கடி நிலைமையை உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக வாள் சுழற்றியுள்ளார் கவர்னர் என்கிற கருத்தும் எதிரொலிக்கவே செய்கிறது.
கவர்னரின் உரை குறித்து சட்டப்பேரவைச் செயலக அலுவலர்களிடம் விசாரித்தபோது, ""அரசு தயாரிக்கும் உரையை அப்படியே சட்டப் பேரவையில் வாசிப்பதுதான் கவர்னரின் கடமை யாக இருக்கும். என்ன மாதிரி சப்ஜெக்ட்டுகள் தனது உரையில் இடம் பெற்றிருக்கின்றன என்றுகூட இதற்கு முந்தைய கவர்னர்கள் யாரும் ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பியது கிடை யாது. வலிமையான முதல்வர்கள் இருந்ததால் அந்த நிலை. ஆனா, இப்போது அப்படி அல்ல. தனது உரை எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது என முன் கூட்டியே அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினார் கவர்னர். அதனால், அவரது உரை அச்சுக்குப் போவதற்கு முன்பு ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங் களைச் செய்திருக்கிறார்.
குறிப்பாக, "மக்களாட்சியின் மாண்புகளால் தான்' உன்னத அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. தங்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையில்தான் எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கிறார்கள் மக்கள். அவர்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளை யும் நிறைவேற்றும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களாட்சி யின் மாண்புகளைப் பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில், விவாதிக்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகளை ஆராய்ந்து ஆக்கப்பூர்வ மாக விவாதித்து முடிவுகளை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என்கிற இந்த வரிகள் அரசு தயாரித்த உரையில் இல்லை. ராஜ்பவனுக்கு உரை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த வரிகளை தனது உரையில் புதிதாக இணைத்தார் கவர்னர்'' என விவரிக்கிறார்கள்.
""கொங்கு மண்டலத்தின் பாசனத்திற்கு அவசியமான 3523 கோடி முதலீட்டில் தொடங்க வுள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்கட்டமாக 1652 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சென்னை, கோவை, மதுரை நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்குதல், அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்பதை தவிர, பெரும்பாலும் ஏமாற்றங்களையே தந்திருக்கிறது கவர்னர் உரை'' என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ""ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடும் கொள்கை முடிவை எடப்பாடி அரசு எடுக்கும் என்கிற உறுதியை கவர்னர் தனது உரையில் தெரிவிப்பார் என தமிழகம் எதிர்பார்த்தது. ஆனால், அவர் தெரிவிக்க வில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவி உயர்த்தி வழங்கக் கோரும் அறிவிப்பும் இடம்பெற வில்லை. தேசிய அளவில் பல்வேறு மாநிலங் களில் விவசாய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வறட்சியிலும் கஜா புயலாலும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் எந்த பதிலும் கவர்னர் உரையில் இல்லை. மேலும், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் புதிய அறிவிப்புகளும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, ஆசிரியர் கள் மற்றும் வி.ஏ.ஓ.க்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு, விவசாய நிலங்களில் உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைப்பதை கைவிடுதல் உள்ளிட்டவைகளுக்கும் எந்த ஆக்கப்பூர்வ மான பதிலும் இடம்பெறவில்லை. லோக் ஆயுக்தா அமைப்பு குறித்த சந்தேகங்களுக்கும் விடை இல்லை. மொத்தத்தில் கவர்னர் உரை அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.
கவர்னர் உரை குறித்து தமிழக நிதித்துறையில் ஒருவித உற்சாகம் தெரிகிறது. இது பற்றி நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது எடப்பாடி அரசு. வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதும், மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை செயல்படுத்தியதும்தான் காரணம். இந்த உண்மைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த எடப்பாடி அரசு, அதனை கவர்னர் உரையில் சேர்த்தது.
மேலும், ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் மாநிலங் களுக்கிடையேயான வரியில் கிடைக்க வேண்டிய பங்கையும், வரி விதிப்புத் திட்டத்தில் உறுதியளிக்கப் பட்ட இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு வழங்காமல் காலதாமதம் செய்வதால் அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. மூலம் 5,454 கோடியும் இழப்பீட்டுத் தொகை 455 கோடியும், முதல் அரையாண்டு காலத்துக்கான இழப்பீட்டுத் தொகை 1,305 கோடியும் என ஜி.எஸ்.டி. யில் மட்டுமே 7,214 கோடி நிலுவை வைத்துள்ளது மத்திய அரசு. இது போன்ற நிலுவைத் தொகைகள் தமிழக அரசின் நிதி கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை உடனடியாக வழங்குவதுடன் இனி வரும் காலங்களில் இத்தகைய தாமதம் கூடாது'' என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கவர்னர் உரையில் சேர்க்கப்பட்டது.
மத்திய அரசுக்கு எதிராக வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளை கவர்னர் ஏற்க மாட்டார் என நினைத்திருந் தோம். ஆனால், அவற்றை நீக்கவில்லை கவர்னர். மத்திய அரசுக்கு எதிரான அரசின் கருத்துக்களை கவர்னர் அனு மதித்து அவர் குரலில் உரையாற்றியதில் எங்களுக்கு உற்சாகம்தான். இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டிக்கும் விதத்திலும் கவர்னர் உரை இடம்பெற்றதுண்டு. அப்போதெல்லாம் கவர்னர்கள் வலிமையானவர்களாக இருந்ததில்லை. ஆனால், தற்போதைய கவர்னர், எடப்பாடி அரசின் நிர்வாகத்தை உன்னிப்பாகவும் மத்திய அரசின் வழிகாட்டுதலிலும் கவனித்து வருகிறார். அதனால், எந்தச்சூழலிலும் தனது உரையில் மத்திய அரசுக்கு எதிராக மென்மையாகக்கூட வார்த்தைகள் இருக்கக்கூடாது என நினைப்பவர். அப்படிப்பட்டவரின் உரையில் மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி அரசு தயாரித்தவற்றை அனுமதித்தது எங்களுக்கு ஆச்சரியம்!'' என்று விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.
கவர்னர் உரையின்போது தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் மட்டும் சபை முடியும் வரை அமர்ந்திருந்தார். எடப்பாடி அரசுக்கு எதிராக கச்சைக்கட்டும் தினகரன், கவர்னர் உரையை எதிர்க்கவில்லை. கவர்னரோடு முரண்படவேண்டாம் என்பதற்காகவே சபை முடியும் வரை தனி ஆளாக தினகரன் அமர்ந்திருந்ததாக அ.ம.மு.க. கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இரண்டாவது நாளில் சபைக்கு வராமல் சசிகலாவை சந்திக்க பெங்களூர் பறந்தார் தினகரன்
மறைந்த தலைவர்களுக்கான இரங்கல் தீர்மானம் சட்டமன்றத்தின் இரண்டாவது நாள் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ""அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கலைஞரின் தமிழுக்கு மயங்காத வர்கள் யாரும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் கலைஞர் மீது அரசியல் எல்லைகளைக் கடந்து மரியாதையும் அன்பும் வைத்திருந்தனர். சமூக நீதிக்காகப் போராடிய இந்தியாவின் மூத்த தலைவர். சுதந்திர தினத் தில் கொடியேற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குப் பெற்று தந்தவர் கலைஞர்'' என புகழாரம் சூட்டினார்.
இரங்கல் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கலைஞரின் பன்முக ஆற்றலை சுட்டிக் காட்டிவிட்டு, ""சமூக விழிப்புணர்வை தனது எழுத்துக்களின் மூலம் ஏற்படுத்தி யவர் கலைஞர். ஐந்துமுறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர். பதிமூன்று வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தில் கலந்துகொண்ட கலைஞரின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்'' என்றார்.
தி.மு.க. சார்பில் பேசிய கட்சியின் பொருளாளர் துரைமுருகன், ""எனக்கு இரண்டாவது உயிர் தந்தவர் கலைஞர். என்னை தத்துப்பிள்ளையாக வளர்த் தார்'' என்று சொல்லி கண்ணீர் சிந்தி யவர், கலைஞரின் ஆளுமைகளை விவரித்துப் பேசினார். தொடர்ந்து சபா நாயகர் தனபால், காங்கிரஸ் கே.ஆர்.ராம சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டோர் கலைஞரின் பெருமைகளைப் பேரவை யில் பதிவு செய்தனர். பேரவை முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி யையும், சபாநாயகர் தனபாலையும் சந்தித்து நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
கவர்னர் உரை அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளித்திருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிரான எடப்பாடி அரசின் கருத்துக்களை கவர்னர் பதிவு செய்ததில் அமைச்சர் களுக்கும் ஆளுந்தரப்புக்கும் உற்சாகத் தைத் தந்துள்ளது.
-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்