""ஹலோ தலைவரே, மாநிலங்களின் உரிமைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பறிப்பதில் மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டிக்கிட்டே இருக்கு.''’

""ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, மனுசனைக் கடிச்ச கதைன்னு சொல்றமாதிரி, அங்கே இங்கேன்னு, மாநில உரிமைகளில் கையை வச்ச மத்திய அரசு, இப்ப பல்கலைக் கழகங்கள் தொடர்பான உரிமையிலும் கைவைக்கப் போகுதாமே?''’

governor

Advertisment

""சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, மத்திய அரசின் அதிகாரப்போக்கு, எல்லாரும் அறிஞ்ச ஒண்ணுதான். ஏற்கெனவே மத்திய திட்டக் கமிஷனை, நிதி ஆய்வுக் குழுன்னு மாத்தி, அதைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் பிரதமர் மோடியே வச்சிக்கிட்ட மாதிரி, இப்ப தன்னாட்சி அமைப்பான பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைச்சிட்டு, அதற்குப் பதில் தேசிய உயர்கல்வி ஆணையம்ங்கிற பேரில் ஒரு அமைப்பை உருவாக்க மோடி அரசு முடிவெடுத்திருக்கு. இதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அதை நிறைவேற்றும் வேலைகள் நடக்குது. இதன் மூலம் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்த அதன் நிதி ஆளுமை, பல்கலைக் கழக அங்கீகாரங்களைத் தீர்மானிக்கும் உரிமை, கல்விக்கொள்கை போன்றவை, அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கைகளுக்குப் போய்விடும். ஏற்கெனவே மத்திய அரசின் பொதுப் பட்டியலுக்குக் கல்வி போனதால்தான், நாம் "நீட்' கொடுமைகளை அனுபவிச்சிக்கிட்டு இருக்கோம். இனி மாநிலங்களின் உயர் கல்வியிலும் மத்திய அரசு நினைத்தபடி எல்லாம் விளையாடப் போகுதுன்னு கல்வியாளர்கள் எச்சரிக்குறாங்க.''’

""கவர்னர்களைக் கைல வச்சிக்கிட்டு, இதன் மூலம் பல்கலைக் கழகங்கள்ல எதை வேண்டுமானாலும் மத்திய அரசு செய்யுமே? இப்பவே கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளை மத்திய அரசு குழப்பியடிக்கிதே.''’

eps-ops""ஆமாங்க தலைவரே, நம்ம தமிழக கவர்னரான பன்வாரிலால் புரோகித், விரைவில் அரசுப் பயணமாக 4 நாட்கள் ஜப்பான் போகப்போகிறாராம். இது தொடர்பான தகவல் முதல்வர் எடப்பாடி கவனத்துக்குப் போனபோது, என்னய்யா இது, நம்ம அரசுக்கே தெரியாமல் ஒரு அரசுமுறைப் பயணமாக ஃபாரின் டூரா? எதுக்காக அவர் ஜப்பான் போறார்ன்னு விசாரியுங்கள்ன்னு சொல்லியிருக்கார். ராஜ்பவனுக்கும் கோட்டைக்குமான தொடர்பே இப்ப இப்படித்தான் இருக்குது. கவர்னரின் ஃபாரின் டூரால் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவருமே ஷாக் ஆகியிருக்காங்க.''’

Advertisment

""உரிமைகளை மீட்க ஒரு நடவடிக்கையும் இல்லையே?''’

""எடப்பாடியைப் பொறுத்தவரை பதவியில் இருக்கும்வரை ஜெ.’வைப் போலவே எல்லா வகையிலும் கெத்தா இருந்துட்டுப் போயிடணும்னு நினைக்கிறார். அவருக்கு வழக்கமாக மற்ற மாநில முதல்வர்களுக்குத் தரப்படும் காவல் ஆய்வாளர்கள் அல்லது துணை ஆய்வாளர்கள் தலைமையிலான பாதுகாப்புதான் தரப்படணும். ஆனால் அவரோ, ஜெ.’விடம் இருந்த ஸ்பெஷல் பாதுகாப்பு அதிகாரிகளான ஏ.டி.எஸ்.பி.ராஜா தலைமையிலான டீமை பாதுகாப்புக்கு வைத்திருக்கிறார். அதில் ஜெ’விடம் இருந்த மற்ற பாதுகாப்பு அதிகாரிகளான பெருமாள்சாமியும் வீரப்பெருமாளும்கூட இருக்காங்க. இவர்களில் தன் சமூகத்தைச் சேர்ந்த ராஜாவை, 1991-96 காலகட்டத்திலேயே சசிகலா மூலம் ஜெ.’விடம் அறிமுகப்படுத்தியவர் எடப்பாடிதானாம். அப்படிப்பட்ட ஏ.டி.எஸ்.பி.ராஜா தலைமையில் உயர் பாதுகாப்பில், கெத்தாக வலம்வருவதிலேயே மகிழ்ச்சி அடைகிறாராம் முதல்வர்.''’

""சென்ட்டிமெண்ட் பார்ப்பதிலும் ஜெ’வைப் பின்பற்றுகிறாராமே எடப்பாடி?''’

""உண்மைதாங்க தலைவரே, கடந்த வாரம் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்ட எடப்பாடி, கருப்பூரில் இருக்கும் பெரியார் பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை, அங்கே திறக்காமல், சென்னையில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறக்க முடிவெடுத்தார். ஏன் இப்படின்னு கேட்டால், அந்தப் பல்கலைக் கழக விழா ஒன்றில் கலைஞர் கலந்துக்கிட்ட பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வரலையாம். அதனால் அங்கே போவதை ஜெ.’ கடைசிவரைத் தவிர்த்துவிட்டாராம். அதோடு, பெரியார் பெயரிலான அந்தப் பல்கலைக் கழகத்துக்குப் போகவேணாம்ன்னு ஒரு சாமியாரும் அட்வைஸ் அருளியிருக்காராம். அதனால்தான் கான்பரன்ஸிங்கிலேயே புதிய கட்டடங்களுக்கு ரிப்பன்வெட்டுவதுன்னு எடப்பாடி முடிவெடுத்தாரு. இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.சார்பில் 90 ஜோடிகளின் திருமணத்தை நடத்திவைத்த போது, எடப்பாடி, தன் ஆதரவாளரான அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை தன்னருகே உட்கார வச்சிக்கிட்டாரு. அதேபோல் ஓ.பி.எஸ்.சும் தன் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமியையும், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதத்தையும் உட்கார வச்சிக்கிட்டாரு. இரட்டைக் குழல் துப்பாக்கின்னு சொன்னாலும் இரண்டு குழாயும் ஆளுக்கொரு திசையில் சுடுதாம்.''’

sasi

""அவங்க உரசல் இருக்கட்டும், தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையிலான உரசல் பெருசா இருக்கு போலிருக்கே?''’

""இளவரசியின் மகனான விவேக்தான் சசிகலாவின் ஃபைனான்ஸ் மற்றும் சொத்து விவரங்களை நிர்வாகம் செய்யறார். அதனால் தினகரன் தொடங்கியிருக்கும் அ.ம.மு.க. கட்சியில் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்தார் விவேக். அவரோட சகோதரி கிருஷ்ணப்ரியாவுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தினகரன் அவர்களை கட்சிக்குள் சேர்க்கக்கூடாதுன்னு உறுதியாக இருக்காரு. இதனால் ஏற்பட்ட உரசலால் இரு தரப்பிற்கும் இப்ப பேச்சுவார்த்தை இல்லை. இரண்டு நாளைக்கு முன்பு, சசிகலாவை கர்நாடக சிறையில் போய்ப் பார்த்தார் தினகரன். அப்ப தினகரனிடம் சசிகலா, விவேக் தரப்பிற்காக சமாதானம் பேசியிருக்கார். ஆனால் சமாதானம் ஏற்பட்டதாகத் தெரியலை.''’

""மத்திய பா.ஜ.க. அமைச்சரான பொன்னாருக்கும் சமுதாய கூட்டமைப்பினருக்கும்கூட உரசல்ன்னு காத்துவாக்கில் செய்தி வந்துச்சே?''’

""மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரக் காரணமே நான்தான்னு தென் மாவட்டங்கள்ல மத்திய பா.ஜ.க. அமைச்சரான பொன்னார் பிரச்சாரம் செய்ய, அ.தி.மு.க. மந்திரியான ஆர்.பி.உதயகுமாரோ, எய்ம்ஸ் மதுரைக்கு வராட்டி நான் ராஜினாமா செய்வேன்னு சொன்னேன். அதன் பலன்தான் இதுன்னு எதிர்ப் பிரச்சாரம் ponradhakrishnanசெய்து பொன்னாரை நோகடிக்கிறார். இந்த நேரத்தில், சமுதாய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர், பொன்னாரை சந்திச்சி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் செல்லதுரையை பெரும்பாடுபட்டு உட்காரவச்சோம். அவரை மாத்திட்டாங்களேன்னு புலம்பியிருக்காங்க. அதுக்கு பொன்னார், கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் தலைமைச் செயலாளர் கிரிஜாவும் பிறந்த சமூகத்தில் நாம் பிறக்கலையே. நான் சொன்னால் எதுவும் கேட்கமாட்டாங்க. 8 வழிச் சாலை விசயத்திலேயே நான் தலையிட முடியலைன்னு பதிலுக்குப் புலம்பியிருக்கார். சம்பந்தப்பட்ட பிரமுகர்களோ, சமாதானமடையலை. செல்லதுரை துணைவேந்தராக செலவானதற்கு ஈடு என்னன்னு கேக்குறாங்களாம்.''’

""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன்... 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கப் போகும் மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணா, சட்டப்படி செயல்படுபவர். அதனால் அரசுக்கு எதிரான தீர்ப்பே வரலாம்ன்னும் அதுவே விரைவில் உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படலாம்ன்னும், அதனால் எடப்பாடி ஆட்சியின் ஆயுள் ரொம்ப பலவீனமா இருக்குன்னும் கோட்டைத் தரப்பிடம் நம்பிக்கை வலுத்து இருக்கு. அதனால் காற்றுள்ள போதே தூத்திக்கணும்ங்கிற எண்ணமும் மந்திரிகள் தரப்பில் மிகுந்திருக்கு. குறிப்பா, விவசாயத்துறை, பால்வளத்துறையில் எல்லாம் டிரான்ஸ்பர், புரமோசன், நியமனம்னு விறுவிறுப்பும், கரன்ஸி எண்ணும் சத்தமும் அதிகமா கேட்குது.''’