தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறை வேற்றியதோடு நின்றுவிடாமல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங் களின் முதல்வர் களை ஒன்றிணைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டா லின். அவரின் இந்த முயற்சி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது.
தமிழகத்தின் ஆளுநராக பொறுப் பேற்றதிலிருந்தே நிர்வாக ரீதியாக தி.மு.க. அரசோடு மோதிவருகிறார் ரவி. அவரின் செயல்பாடுகள் பல்வேறு வகையில் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்தும் நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்கள் பற்றியும் சமீபத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
நிர்வாக ரீதியாக முரணில்லாமல் இருக்க அரசு விரும்பினாலும் ஆளுநர் அதனை விரும் பாதவராக இருக்கிறார். அரசுக்கு எதிரான குழப்பங்களை விளைவிக்கும் அஜெண்டாவுடன் அவர் இயங்குகிறார். இதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு இணையான ஒரு அரசை அவர் நடத்துவதற்கு ஏதுவாக மாறிவிடும். அதனால் ஆளுநருக்கு எதிரான மக்களாட்சியின் வலிமையை அவருக்கும் ஒன்றிய அரசுக்கும் உணர்த்த வேண்டும் என்று தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்தே ஆளுநர் ரவிக்கு எதிராக தனித்தீர்மானம் என்ற சாட்டை யை சட்ட மன்றத்தில் சுழற்றினார் ஸ்டாலின்.
இந்த நிலை யில், பா.ஜ.க. ஆட்சியில் இல் லாத மாநில முதல் வர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றம் போல அந்தந்த மாநில சட்டமன்றமும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் கடமைகளும் மாநில அரசின் பொறுப்புகளும் வரையறை செய்துள்ள போதிலும் அவைகள் மதிக்கப்படுவதில்லை. இதனால் மாநில செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் மாநில நிர்வாக செயல்பாடுகள் முடங்கி விடுகின்றன. இதே நிலை பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. அதனால் மசோதாக்களுக்கு ஒப்புதலளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது ஏற்புடைய தாக இருக்கும் என்று கடிதத் தில் சுட்டிக்காட்டியிருப்ப தோடு, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தனித் தீர்மானத்தின் நகலையும் இணைத்து மாநில முதல்வர்களுக்கு அனுப்பி யிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஆளுநருக்கு எதிராக மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக எழுதப்பட்ட இந்த கடிதம், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கவனிக்கப் படுகிறது.
மேலும், மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் அவர்களை நேரில் சந்தித்தும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் ஆளுநருக்கு எதிரான முதல்வரின் போர்க்குணம் வலிமையானது என்பது ஒன்றிய அரசுக்குப் புரியும் என தி.மு.க. கூட்டணி கட்சி களிடத்தில் எதிரொலித்தபடி இருக்கிறது.
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நடத்தும் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு கடந்த 12-ந் தேதி கண்டன பொதுக்கூட்டமாக சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது. தி.மு.க. அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட மாதங்களாக நிலுவையில் வைத்திருந்த ஆளுநர் ரவி, சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தைத் தொடர்ந்து மசோதாவுக்கு ஒப்புதலளித்திருந்த தால் முற்றுகைப் போராட்டம் கண்டன பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.
பொதுக்கூட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. தலைவர் வைகோ எம்.பி., காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தைகள் எம்.பி. திருமாவளவன், சி.பி.ஐ. செயலாளர் முத்தரசன், சி.பி.எம். செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, "அரசியலமைப்பு சட்டவரையறைகள், மரபுகள் எல்லாவற்றையும் தூக்கி குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு சட்டமன்றத்தில் வெளி நடப்பு செய்த ஒரே வித்தகர் ஆளுநர் ரவிதான். தமிழ்நாடு அரசின் கொள்கை திட்டங்களுக்கு எதிராக ராஜ்பவனை அரசியல் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் திருந்த வேண்டும். ஆளுநர் சர்வாதிகாரியாக நடந்துகொள்ளக்கூடாது என நமது முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது ஆளுநரின் அடாவடித் தனத்தை தோலுரித்துக் காட்டுகிறது. குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டவர் என சொல்கிற அவருக்கு சம்பளம் கொடுப்பது தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாடு அரசும்தான். ஆளுநரின் தொடர் தொல்லைகளுக்கு முடிவுகட்ட அவருக்கு எதிராக மக்கள் திரள வேண்டும். அரசு நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு இன்னும் அவர் ஒப்புதல் அளிக்காததால் அவருக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இது கடைசி கூட்டமாக இருந்துவிடக்கூடாது''’என்றார்.
வைகோ எம்.பி. பேசும் போது, "அரசியல் சட்டவிதிகளை தொடர்ந்து மீறி வருகிறார் கவர்னர் ரவி. தனது நடவடிக்கைகளை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தனது இஷ்டத்துக்கு செயல்படுவதை அனுமதிக்க முடியாது. அரசின் இலச்சினை இல்லாமல் அவர் விழா நடத்துவது எப்படி? அரசு நிர்வாகத்தில் அவர் குறுக்கீடு செய்யக்கூடாது. கவர்னர் என்பவர் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும். ஆனால் அவர் அப்படி இயங்கவில்லை. அவரை திருப்பியனுப்பும் வரை நம் போராட்டம் ஓயக்கூடாது''’என்றார்.
திருமாவளவன் பேசும்போது, "தமிழ்நாட் டில் அரசியல் குழப்பத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கமாகும். கவர்னரை வைத்து தமிழ்நாட்டின் அமைதியை சீர் குலைப்பதே அவர்களின் சதி. அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்கு அளித்துள்ள அதிகார வரம்புகளை மீறுகிறார். அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிறார். ஆளுநராக இருக்கும் தகுதியை அவர் இழந்துள்ளதால், அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்'' என்றார்.
கண்டனப் பொதுக்கூட்டத்தின் இறுதியில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘’"ஆளுநருக்கு எதிரான இந்த கண்டன பொதுக்கூட்டம் இனி கண்டன போராட்டமாக மாறும். ஆளுநர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களுக்கு நம் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னர் பதவி நாட்டுக்குத் தேவையில்லை என 1955-லேயே நம் கலைஞர் தெரிவித்துள்ளார். அதேபோல, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரும் கவர்னர் பதவி தேவையில்லை என சொல்லியிருக்கிறார். ஆளுநர் அவர்களே, நீங்கள் இருக்கும் இடத்தையும் பதவியையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், பெரியார் தமிழ் மண் உங்களுக்கு அதனை புரியவைக்க பாடம் நடத்தும்.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை கவர்னர்களை வைத்து அடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. அதனால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களை கிடப்பில் வைக்கிறார் ஆளுநர். இதற்கெல்லாம் தமிழ்நாடு பயந்துவிடாது. ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய நிதியை கவர்னர் மாளிகை செலவழித்ததில் நடந்த முறைகேடுகளை தமிழ்நாடு நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? தமிழர்களால் கொண் டாடப்படும் தமிழ் மொழி, தமிழ்நாடு, திராவிடம், கார்ல்மாக்ஸ், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் கொச்சைப் படுத்துகிறார். இதையெல்லாம் நாம் அனுமதிக்கக் கூடாது''’என்றார் கனிமொழி.
கண்டன பொதுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனை வரும், ஆளுநருக்கு எதிராகக் கொந்தளித் தனர். பொதுக் கூட்டமே ஆவேசமாக இருந்தது. தலை வர்களின் பேச்சுக்கள் கூட்டத்தினரை முறுக்கேற வைத்தி ருக்கிறது.
இந்தநிலையில், கவர்னருக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அனைத்தையும் பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது ஒன்றிய அரசின் உளவுத்துறை.
இதற்கிடையே, மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் என்ன மாதியான ரியாக்ஷனைக் காட்டுகிறார்கள் என்பதை கவனிக்க தங்களின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த நிலையில், ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் அல்லது அவருக்கு தகுந்த அட்வைஸ் செய்யவேண்டும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மீண்டும் ஒருமுறை தி.மு.க. எம்.பிக்கள் சந்தித்து முறையிடவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கவும் தி.மு.க. தலைமை ஆலோசித்திருப்ப தாகத் தெரிகிறது.