பெரியார் பல்கலை மற்றும் பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர்களின் 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி, மீண்டும் தன் அதிகார பலத்தைக் காட்டியியிருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் குழந்தைவேல். துணைவேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி, 2021 ஜன. 7-ஆம் தேதியுடன் அவருடைய பதவிக்காலம் நிறைவடைந்தது.
ஒரு பல்கலையில் துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை நிர்வாக வசதிக்காக, "கன்வீனர் கமிட்டி' எனப்படும் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும். மேலும், புதிய துணை வேந்தர் நியமிக்கப்படுதவதற்கான தேடுதல் குழுவும் அமைக் கப்படும். இவை இரண்டும் காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைகள்.
குழந்தைவேலின் பதவிக் காலம் முடிவடைந்த நாளன்று காலை, அவசர அவசரமாக காணொலி வாயிலாக உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் சிண்டிகேட் குழு கூட்டம் நடந்தது. அதில், கன்வீனர் கமிட்டி உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பேராசிரியர் அருணாச்சலம், பெரியார் பல்கலை மைக்ரோபயாலஜி துறைத் தலைவர் பாலகுருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். குழுவின் தலைவராக உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா இருப்பார். இந்த ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்ட துடன், சிண்டிகேட் கூட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. அதன்பிறகே பல்கலை ஆசிரியர் கள், ஊழியர்கள் குழந்தை வேலுக்கு பிரிவு உபச்சாரவிழா நடத்தினர்.
விழா நடந்துகொண்டிருந்தபோதே இரவு 7:00 மணியளவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அலுவலகத்திலிருந்து துணைவேந்தரின் அலுவலகத்திற்கு ஒரு ஃபேக்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டது. அதில், "மறு உத்தரவு வரும்வரை அல்லது புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை இப்போதுள்ள துணைவேந்தர் குழந்தைவேல் அதே பதவியில் தொடருவார்' என்று சொல்லப்பட்டு இருந்தது.
இப்படி ஓர் உத்தரவை உயர் கல்வித்துறை அமைச்சர், துறைச்செயலர் உள்ளிட்ட யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுபோல பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கருக்கு ஜன.7-ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கும் பதவி நீட்டிப்பு செய்து ஆளுநர் பன்வாரிலால் உத்தரவு பிறப் பித்துள்ளார்.
பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க ஆலோசகர் செந்தாமரையிடம் பேசினோம்.
""பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கர் ஆகிய இருவருக்கும் பதவிக்காலம் முடிந்தபிறகு, அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று. அதேநேரம், தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் பதவி காலத்திற்குப் பிறகும் துணைவேந்தருக்கு அதிகபட்சம் ஓராண்டுக்கு மிகாமல் பணிநீட்டிப்பு வழங்க, வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது. என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடனும் உயர் கல்வித்துறை செயலருடனும் இதுபற்றி ஆளுநர் மாளிகையிலிருந்து கருத்து கேட்டிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கான மரியாதையாக இருந்திருக்கும்.
சர்ச் கமிட்டி, கன்வீனர் கமிட்டி எல்லாம் போடப்பட்ட பிறகு ஆளுநர் இப்படியான உத்தரவை பிறப்பித்திருப்பது என்பது மரபுக்கு மாறானது. பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக வந்தபிறகு, துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார். அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பாக, தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்ததால், தன்னுடைய அதிகாரத்தை நிரூபிப்பதற்காக துணைவேந்தர்களுக்கு தன்னிச்சையாக பதவிநீட்டிப்பு செய்திருக்கலாம் என கருதுகிறேன்'' என்கிறார் செந்தாமரை.
இதுபற்றி துணைவேந்தர் குழந்தைவேலிடம் பேசிய போது, ""பல்கலைவளாக குடியிருப்பிலிருந்து என்னுடைய பொருள்கள் எல்லாமே சொந்த ஊருக்கு முதல் நாளே கொண்டுசெல்லப் பட்டுவிட்டது. ஆளுநர் மாளிகையிலிருந்து, "துணைவேந்தராக பணி நீட்டிப்பு வழங்கினால் சம்மதமா?' என்று கேட் டார்கள். அவர்களே கேட்கும்போது மறுக்க முடியாது என்பதால் விருப்பம் தெரி வித்தேன்'' என்றார். இது ஒருபுறமிருக்க, துணை வேந்தர்கள் குழந்தை வேல், மணிசங்கர் இருவருமே பா.ஜ.க. ஆதரவாளர்கள் என்பதால்தான் பணி நீட்டிப்பு பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது.
""பணி நீட்டிப்பு பெற்றவர்களில் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சமூகத்தைச் சார்ந்த வெள்ளாளக் கவுண்டர்; மற்றொருவர் அய்யர். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பா.ஜ.க.வில் யார் யாருக்கெல்லாம் விசுவாசம் காட்டுகிறார்களோ அவர் களிடம் எல்லாம் இவ்விரு துணை வேந்தர்களும் இணக்கமாகத்தான் இருக்கின்றனர்.
பணி நீட்டிப்பின் பின்னணியில் பா.ஜ.க.வின் தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனின் அழுத்தமும் இருக்கிறது. இதெல்லாம் உயர் கல்வித்துறையில் இனி மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆளுநர் மாளிகை சொல்வதற்கெல்லாம் ஆளுங்கட்சி தலையாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை போல தெரிகிறது'' என்கிறார் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர்.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கேட்ட போது, ""கவர்னர் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நிரூபிக்க உத்தரவு போடுகிறார். துணைவேந்தர்கள், நேரடியாக ஆளுநர் கட்டுப்பாட்டில் வரக்கூடியவர்கள். பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை அவரை கேட்டால்தான் தெரியும். நமக்கு என்ன தெரியும்?'' என்றார்.
நீட் விவகாரத்திலேயே தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்துவிட்ட எடப்பாடி அரசு, உயர் கல்வித்துறையிலிருந்து வரும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் காவுகொடுக்கத் தயாராகி விட்டது.
-இளையராஜா